தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், சராசரியாக 5 தொடங்கி 6 ஆண்டுகள் வரை வாழ்கின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றன. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரை கௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது.
உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெரும் காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரை தேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல் பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன. ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்கு காவிச் செல்கின்றன.
இவற்றோடு மனிதர்களில் மூளை மென்சவ்வு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி புழுக்களை இவை காவித் திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கு, உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது.
ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல் பொது அமைப்புகளும், பொதுமக்களும் முன்வரவேண்டும். உப்பு நீர் கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை அழுத்துவதன் மூலம் சுலபமாக அழிக்க முடியும். ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது.
இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயல்படவில்லை எனில் ஏற்கெனவே பாரிய பொருளாதார சீரழிவுக்கு, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்க நேரும் என்றும் தெரிவித்துள்ளார்.