ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” – கவிஞர் ஷெல்லி

கவிஞர் ஷெல்லி

இங்கிலாந்தின் மக்களே!

இங்கிலாந்து தேசத்தின்
தொழிலாளர் தோழர்களே!
உங்களை அடிமை நுகத்தடியில்
பிணைத்து வைத்துள்ள பிரபுக்களுக்காக
நீங்கள் ஏன்
உழுது களைக்கிறீர்கள்?

உங்களை உறிஞ்சிக் கொழுக்கும்
கொடுங்கோலர்களின்
ஆடம்பர ஆடைகளை
நீங்கள் ஏன் நெய்து நோகிறீர்கள்?

உங்கள் வியர்வையை அவித்து
இல்லை, இல்லை –
உங்கள் குருதிகுடிக்கும்
சுயநலச் சோம்பேறிகளுக்கு

உண்டி, உடை, உறைவிடம் அளிக்க
பிறப்பு முதல் இறப்பு வரை
நீங்கள் ஏன்
ஓயாது உழைக்கிறீர்கள்?
இங்கிலாந்தின் இதயத் துடிப்பே,
இடையறா உழைப்பின் தேனீக்களே –
நீங்கள் வடித்தெடுத்த
எந்திரங்களும் ஆயுதங்களும்
உங்கள் உழைப்பின் விளைச்சல்தானே?

உங்கள் உழைப்பின் விடியல்களைக்
கொடும்பார்வைக் கோட்டான்கள்
நாசப்படுத்திக் கொண்டாடுவர் என்பதை
ஏன் இன்னும் நீங்கள் அறியவில்லை?

அதிரடி அதிகார மேய்ச்சலில்
வலியோடும் அச்சத்தோடும்
நீங்கள் கண்டதென்ன, கொண்டதென்ன?
ஓய்வு, சுகம், அமைதி
உங்களுக்குக் கிட்டியதா?
உண்டி – உடை – உறைவிடம்
நோய்க்கு இதமாக அன்பின்
வருடல் தான் எட்டியதா?

உங்கள் விதைப்பு முதலாளி அறுவடை;
செல்வம் நீ கண்டெடுக்க மற்றொருவன் பறிக்கிறான்;
தறியடித்து நீ உழைத்து இன்னொருவன் அணிகிறான்;
நீங்கள் உருவாக்கும் படைக்கலன்கள்
மற்றொருவன் உயிர்காக்கும் அரணாகிறது.

தோழர்களே, விழித்தெழுங்கள்!
விதையுங்கள், கொள்ளையன்
அறுவடை செய்ய அனுமதிக்காதீர்!
செல்வம் கண்டெடுங்கள்,
எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்!
ஆடைகளை நெய்யுங்கள்,
சோம்பேறி அணியவிடாதீர்!
ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!

நீங்கள் மாளிகை எழுப்ப – அவர்களுக்குக் கேளிக்கை!
நீங்களோ – சந்து பொந்துகளில் ஓட்டைக் குடிசைகளில்
கூட்டுக் குருவிகளாய் குமைந்து வேகிறீர்கள்!

நீங்கள் வனைந்த கைவிலங்குகளின்
உடும்புப்பிடியில் நீங்கள் இன்னமும் ஏன்
வளைந்து நெளிகிறீர்கள்?
நீங்கள் காய்ச்சி அடித்த இரும்புச் சங்கிலிகளின்
எக்காளம் பார்த்தீர்களா, ஏகடியம் கேட்டீர்களா?

தோழர்களே,
எரிமலைக் குழம்பாய் நீங்கள் எழவில்லை என்றால்
ஏர்கலப்பை மண்வெட்டி களைக்கொட்டு
தறிக்கட்டை கையில் எடுத்து
உங்கள் சவக்குழியை நீங்கள் தோண்டி
கல்லறை சமைக்க நேரும்;
உங்களுக்கான பிணப்போர்வையை
நீங்களே நெய்யும் நிலை வரும்;

இறுதியில் –
உங்கள் புகழ்மிக்க தேசம்
உங்களுக்கே கல்லறை ஆகவும் கூடும்!

– ஷெல்லி

(மூலம் : ஆங்கிலம்)

தமிழில் – பேரா. திருமாவளவன், பாலு

இங்கிலாந்தின் புரட்சிக்கவி ஷெல்லி பற்றி மார்க்சின் கருத்தை அவரது மகள் எலீனார் மார்க்ஸ் பதிவு செய்துள்ளதை கலை இலக்கியம் பற்றி – மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ; முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ, 1976 (ஆங்கிலத் தொகுப்பு) இங்கே மொழிபெயர்த்துக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

“தத்துவாசிரியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை எவ்வாறு அறிந்து புரிந்து கொண்டிருந்தாரோ அது போலவே கவிஞர்களையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார் மார்க்ஸ். அவர் சொல்வார் “பைரனுக்கும் ஷெல்லிக்கும் உண்மை வேறுபாடு எதில் என்றால் அவர்களைப் புரிந்துகொள்பவர்கள், விரும்பியவர்கள் 36ம் வயதில் பைரன் இறந்த பொழுது ஒருவகையில் நல்லதே என்பார்கள்; ஏனென்றால், இன்னமும் நீண்டநாள் வாழ்ந்திருப்பாரானால் அவர் மிகமோசமான பிற்போக்கு முதலாளித்துவவாதியாக மாறியிருப்பார் என்றார்கள் இதற்கு நேர்மாறாக, 29ம் வயதிலேயே ஷெல்லி இறந்து போனதற்குப் பெரிதும் வேதனைப்பட்டார்கள். ஏனென்றால், இறுதிவரை முழுக்க முழுக்க இடையறாது தொடர்ச்சியாக சோசலிச முன்னோடியாக ஊன்றி நின்று புரட்சியாளனாக வாழ்ந்தார் ஷெல்லி (என்பதே அவர்கள் கருத்து)”.

(வினவு)