காலாவதியான (காலம்) கஞ்சி .

உணவிழந்த நாவுகள் ஆக்கிரமிப்பாளர்களை சபித்துக்கொண்டிருந்தன.
நாயக்கர்காலத்து வெஞ்சினம்பூண்ட பஞ்சகால வயிறுகள் போல
ஒருநேரக்கஞ்சிக்காக வரிசை.
சுடுகஞ்சி.
சுவை அரும்புகளை சுட்டுப்பொசுக்கும் சுடுகஞ்சி.

அந்த அவலத்திலும் சிலர்
கொளுகொளுத்தே இருந்தனர்.
செளுமை படர்ந்த செழிப்பும்
கொலைக்களத்துக்கு அனுப்பி
தலைகளை காத்த மிடுக்கிலும் மிளிர்ந்தனர்.
பெண்பிள்ளைகளின் மயிர்களை
அரிந்து இன்புற்றனர்.
இயலாமை வெறிகொண்டாட
தளிர்களைக்கூட சேற்றில் எறிந்து
முலைவற்றிய தாய்மாரை களத்துக்கு அனுப்பும் வெறிகொண்டனர்.

தீப்போட்டிக்குள்ளும் ஒரு ராட்சியம்
காணும் வெறியாட்டத்தில்
மனங்கொண்டனர்.
குறுகிய ஒருதிடலில்
சிந்தனை குறுகிய செயற்பாடுகள்.
மக்கள் பகடையானார் இருதரப்புக்கும்.
உயிரையே பெரிதென
உணர்ந்திருந்தனர் மக்கள்.
மீட்பர்களாய் நடமாடியவர்கள்
விதம்விதமான விகாரக்கொம்புகளை
நீட்டிய அரக்கர்களாய்
அவதாரம் எடுத்தாடினர்.

உயர் அரச அதிகாரிகள் உணவைப்பங்கிடாது பதுக்கி
கஞ்சியூற்றி களிப்பு கொண்டனர்.
கஞ்சி ஒரு பொறி.
பிடிப்பொறி.
கொஞ்சச்சனம் சாகவேணும் என்ற வேண்டுதல் பொறி.
கடைசிநாளில் முட்டை மூட்டையாக,,,,,
பெட்டி பெட்டியாக…..
வெளியே முகங்காட்டிய
அரிசி மூட்டைகளும் கோதுமை பருப்பும் அங்கர்பெட்டிகளையும் அள்ளியோருக்கு இந்த உண்மை தெரியம்.

கஞ்சியும் அருந்தாது
கஞ்சியோடு இரத்தம் கலக்க
கஞ்சிச்காக தலையிழந்து முண்டங்களான
வெள்ளை முள்ளிவாய்க்கால் குழந்தைகள்
இன்னும் என் கண்ணுக்குள்.
பிள்ளையார் கோவிலடி
இரத்தத்தில் சிவந்திருந்தது.

கஞ்சி ஒரு கபட குறியீடு.
கஞ்சி ஒரு வஞ்சிப்பு நாடகம்.
அன்று மௌனிகளாய் நடமாடியோருக்கு
கஞ்சி ஒரு பிராயச்சித்த பானம்.
அன்று நாடகமாடிய அரசியல் மேதைகளுக்கு
குற்றவுணர்வின் பங்கீடு.

ஆடையோடு அரை உயிர் சுமந்த
மனிதர்களின் மேல் இன்னும்
அரசியலுக்கும் பணத்துக்கும்
சவாரி விடும் எத்தர்களே!

தோற்றோரின் குறியீடு
பால் சேர்க்காத கஞ்சி.
வெற்றிபெற்றோர் குறியீடு
பால் சேர்த்த கஞ்சி.
அப்படித்தான் அன்றைய வரலாறு
எழுதப்பட்டிருந்தது.

இனி உங்கள் குற்றவுணர்வுக்கு
எந்தக்குறியீடு வைத்தும்
பிராயச்சித்தம் தேடாதீர்.
காலாவதியான அந்தக்காலத்தை
எந்த நெம்புகோலாலும் சரிசெய்து விட முடியாது.

(Lathah Kanthaiya)
2023/05/14