உயர்தர வகுப்பு மாணவர்களாக நாம் இருந்த காலத்தில் பாடசாலைகளுக்கு இடையில் இந்த விவாத மேடைகள் நடைபெறுவதுண்டு.
அதிலும் ஆண் பெண் என்று தனியாக செயற்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான இந்த விவாத மேடைகள் இன்னும் கலகலப்பாக களை கட்டும். இது இயல்பானதுதான்.
இந்த விவாத மேடைகளுக்கான தலைப்புகளை எமது ஆசிரியர்கள் உருவாக்கித் தந்து நெறிப்படுத்தி நிகழ்வுகள் சிறப்படைய வழிவகுப்பர்.
‘பாரதி கண்ட புதுமைப் பெண் கனவா…., நனவா…?’ என்ற தலைப்பில் ஒரு விவாத மேடையில் நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் ‘நனவு’ என்ற தலைப்பில் யாழ் வேம்படி மகளிர் மாணவியர்களும் யாழ் இந்து மாணவர்களாகிய நாம் ‘கனவு’ என்பதாகவும் நடாத்தியிருந்தோம்.
இதில் சக மாணவனாக பார்வையாளராக கலந்து கொள்ள என் வகுப்புத் தோழர்கள் மூவர்கள் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வு அந்த வருடம் யாழ் வேம்படி மகளிர் பாடாசாலையில் நடைபெற்றது. அன்றைய சூழலில் வண்ணார் பண்ணையில் உள்ள சிவலிங்கப்புளியடி என்ற இடத்தில் அமைந்த எமது பாடசாலையில் இருந்து அனேகம் நடையாகவும் சிலர் மட்டும் துவிச் சக்கர வண்டியிலும் மகளிர் கல்லூரக்குச் சென்றோம்.
இயல்பாகவே கலகலப்பாகவும் கலாப்பாகவும் பேசும் மகளிர் கல்லூரி மாணவிகள் விவாத மேடையில் வரவேற்புரையிலேயே…. ஆரம்பத்திலேயே எம்மை ஒரு புடி புடிச்சுவிட்டார்கள்.
யாழ் வேம்படி மகளிர் கல்லூரி யாழ்நகரின் மத்தியிற்கு மிக அண்மையாக அமைந்துள்ளது.
எமது பாடசாலை யாழ் நகரின் மத்தியில் இருந்து தோராயமாக 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளதையும்….
அங்கிருந்து பொடி நடையாக வந்ததையும் மாணவிகள்
‘….சிவலிங்கப்புளியடியில் இருந்து பொடி நடையாக புழுதி கால்களில் பட எம்மைத் தேடி வந்த யாழ் இந்து மாணவர்களே….. ‘ என்று விளித்து அழைத்து ஏதோ சிவலிங்கப்புளியடி என்பது ஏதோ பக்கா கிராமம் என்பதாகவும் அங்கிருந்து தமது பாடசாலைக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாதது போலவும்…. எம்மை கலாய்த்து எமது பாடசாலையில் பல்கலைக் கழக அனுமதிப் பரீட்சைப்பெறு பேறுகளுக்கு அண்மிக்க முடியாத ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினாலும் அந்த கல கல கலப்பு எம்மை அவர்களைப் பார்த்தது கண்களால் மட்டும் பேச வைத்தது.
இந்த கண்களால் பேசிய அந்த வாரத்தைகள் இன்று பல ஆண்டுகள் கழித்து ஓரெ வீட்டிற்குள் குடும்பஸ்தர்களாகவும் சிலரை ஆக்கியும் உள்ளது.
இன்னும் பலருடன் இன்றுவரை நட்பை தொடரும் வைத்திருக்கின்றது என்பது பசுமையான நிகழ்வுகளே .
சரி விடயத்திற்கு வருவோம் அதில் எம் தரப்பு முதன்மைப் பேச்சாளரான மாணவன் ஒருவன் கலகலப்பாக அன்றைய நாகரீக வளர்ச்சியினை மையப்படுத்தி ‘…..பாரதிகண்ட புதுமைப் பெண்களை நாம் தற்போது காண்கின்றோம்… ஆனால் என்ன பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் கையில் இருந்து வளையம்(ல்) தற்போது பெண்களில் காதிற்கு வந்துவிட்டது….’ என்பதாக பேசினார்.
அதற்கு தனது கணிதப் பிரிவு அறிவாற்றலை குறியீட்டு ரீதியாக வெளிப்படுத்தும் விதமாக…. ‘…வளையல் அரை அடி இடுப்பிற்கு வெளியாக சென்று இரண்டு அடி மேலே உயர்ந்து மீண்டும் முக்கால் அடி உள்ளாக வந்து காதில் தொங்குகின்றது மற்றயபடி காப்பு உண்டுதான்…’ என்பதைக் கதையால் கணிதத்தால் ஏற்படுத்திய கலகலப்புகள் இருந்தாலும்…..
‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்ற முற்போக்கு, பெண்விடுதலைப் பாத்திரத்தின் அவசியம் அதுசார்ந்து சமூக விடுதலை பெண்விடுதலை போன்றவை பற்றி பாரதி எவ்வாறு சொல்லி இருக்கின்றான் என்பதாக சமூகத்திற்கு தேவையான கருத்தாடலாக அந்த விவாதை மேடை அமைந்ததை உணர முடிந்தது… அன்றும் இன்றும் .
இவ்வாறு பல விடயங்கள் பாடசாலைகளுக்கு இடையிலான விவாதமேடைகளில் நடைபெற்றன….
ஆனால் இவற்றில் அன்றைய காலகட்டத்தில் சாதிய ஒழிப்பு பற்றி விவாதத் தலையங்கள் அமைந்ததாக என்னால் அறிய முடியவில்லை என்பது துர்அதிஸ்டவசமானதுதான் என்பதையும் இங்கு பதிவு செய்யவிரும்புகின்றேன்.
அண்மையில் கிழக்கு மகாணத்தில் சிறப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலைப்புகளில் அதில் ஒன்றாக ‘போதைப் பொருள் பாவனை’ பற்றிய விழிப்புணர்வை மாணவர் மத்தியில் மட்டும் அல்ல சமூகத்திலும் ஏற்படுத்துதாக தன்னார்வ பொது நிறுவனம் ஒன்று பெற்றோர் ஆசிரியர் இணைப்புடன் பாடசாலை மாணவர் இடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.
ஆசரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் இதில் ஆர்வத்துடன் அதிகம் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக இந்தக் கருத்துகளை மக்கள் மன்றத்திற்கும் கொண்டு சென்றனர்.
இது பற்றி பிரதான நீரொட்டத்தில் உள்ள “தேசிய” ஊடகங்கள் அதிகம் செய்திகளை வெளியிடவில்லை என்றாலும் இதன் தாக்கம் அங்கு சில நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு அங்குள்ள மக்கள் சமூகமாக அது பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என்றாக இணைந்து நல்ல தலைப்புக்களில் சமூக முன்னேற்றத்திற்கு எற்ற நெறிப்படுத்தலாக நிகழ்த்தியது சிறப்பு அம்சம் ஆகும்.
இதன் தொடர்ச்சியாக இதே மாதிரியான கட்டுரைப் போட்டிகளை யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் சிறப்பாக ‘போதைவஸ்து ஒழிப்பு’ பற்றி சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் தலைப்பிலும் ஏனைய ‘சுய பொருளாதாரத்தை கட்டியமைத்துல்’ ‘சுற்றுச் சூழல் பாதுகாப்பு” என்பதாக செயற்படுத்துவதற்கு இதே தன்னார்வ அமைப்பு முயற்சிகளை மேற்கொண்ட போது ‘…..இது அதிகம் இங்கு எடுபடாது….’ என்பதாக இதனை நிராகரித்த வேதனையான விடயத்தை அறிந்து கொணடேன்.
ஏதோ ஒரு வகையில் இச் செயற்பாடுகளில் இணைப்பாக இருந்த எனக்கும் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
இவற்றின் வெளிப்பாடுகளின் அடையாளமாகத்தான் தற்போதைய ‘தலையா….? தளபதியா’ என்பதை என்னால் பார்க்க முடிகின்றது
சமூகத்திற்கு தேவையான பல வழிப்புணர்வு அறிவூட்டல் என்பதாக பல விடயங்கள் எம்மிடையே உள்ள போது மேலே கூறிய தலைப்பிலான விவாதம் இங்கு மிகவும் முக்கியத்துவம் குறைந்ததே ஏன் தேவையற்றது என்றே சமூகமாக நாம் நிராகரிக்க வேண்டும்.
இதற்கும் அப்பால் ஓராயிரம் விவாதிக்கப்பட வேண்டிய பட்டி மன்றங்களும்… வழக்காடு மன்றங்களும்…. விவாத மேடைகளும்… கலந்துரையாடல்களும்…. பேச்சுகளும்… நாடகம் கூத்துக்களும் அவை போட்டியாக அல்லது ஒரு நிகழ்வாக செய்யவேண்டியது மிகவும் பின்னிலையில் இருக்கும் எமது சமூகத்தை பலப்படுத்தி முன்னோக்கி நகர்த்த உதவும்.
நாம் மாணவர்களாக வாழ்ந்த காலத்து உதாரணங்களில் சிறந்தவற்றையும் தற்போது கிழக்கில் நடைபெறும் இது போன்ற நல்ல நிகழ்வுகளையும் திருகோணமலை மாவட்டம் முழுவதும் தமிழ் முஸ்லீம் பிரதேசப் பாடசாலைகள் ஏனைய இடங்களில் ‘நம்மட முற்றம்’ போன்ற சஞ்சிகை மாணவர்களிடையேயும் ஏனையவர்கள் இடையேயும் வாசிப்பு ஏழுத்தாற்றல் போன்றவற்றை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மூலம் நடாத்தும் நிகழ்வுகளை நாம் முன் உதாரணங்களாக கொண்டு இவற்றிற்கான தலைப்புகளை உருவாக்குவோம்
இதன் மூலம் நாகரீகமான பண்பான எமது கலாச்சார விழுமியங்கள் மிக்க எதிர்காலச் சந்ததியினரான மாணவர்களை உருவாக்குவோம்.
எம்டையே உள்ள அதிகரித்து வரும் போதை வஸ்து அரகத்தனத்தை விழிப்புணர்வுகள் மூலம் முற்றாக அகற்றுவோம்.
சுய பொருளாதாரத்தை கட்டியமைப்போம். இதன் மூலம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை எமக்குள் உருவாக்குவோம்.
சுற்றுச் சூழல் வெப்பமாதல் மாசுபடுதல் என்பனவற்றை தடுக்கும் முகமான பசுமைச் செயற்பாடுகளை ஏற்படுத்துவோம்.
கல்வியில் முன்னேறிய சமூகமாக எம்மைத் தகவமைத்து முன்னோக்கிய நகர்த்தல் மூலம் பலமான சமூகமாக அது பொருளாதார ரீதியில் சமூக பண்பாட்டு ரீதியில் எம்மை கட்மைப்போம்.
மாறாக ‘தலையா…? தளபதியா….?’ என்பனவற்றை தவிர்ப்போம்.
இறுதியாக பாரிதியின் கவி வரிகளுடன்…..
ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா…
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா…
களிபடைத்த மொழியினாய் வா வா வா…
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா…
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா…
சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா…
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா…
ஏறுபோல் நடையினாய் வா வா வா…