நேன்று மாலை, குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று அவரிடம் ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை குடுங்கய்யா என்றேன்.
அவர் 80 ரூபாய் என்றார், பணக்கார கடைகளில் பேரம் பேசாமல் ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம், அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு…
அதனால் நான் என்னங்கைய்யா ஒரு குழந்தை பொம்மை 80 ரூபாயா, 70 ரூபாய்க்கு குடுங்க என்றேன், அவர் என் கண்களை உற்றுப்பார்த்து இதை குழந்தைகளுக்கா வாங்குறீங்க என்றார்.
நான் ஆமாம் என்றேன்..
அவர் கொஞ்சம் மெதுவான குரலில் சரி ரூ .70 குடுங்க என்றார் .
அவர் கண்கள் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன்..
அது மனதை என்னவோ செய்ய….
ஏன் அய்யா என்னாச்சு, ஏன் அழறீங்கன்னு கேட்டேன், ஒன்னும் இல்ல சார் என்றார் , நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, அவர் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் .
என் பெயர் ஆவுடையப்பன் (77), என் மனைவியின் பெயர் பார்வதி (73 )
எங்களுக்கு 6 குழந்தைகள்
மிகவும் ஏழ்மையான குடும்பம்..
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பிள்ளைகளை வளர்த்தோம், பலநாட்கள் நானும், மனைவியும் சாப்பிடுவது கூட இல்லை, இருப்பதை பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவோம் . பலநாள் இரவு பட்டினி இருந்திருக்கிறோம். ஒரு நாள் கூட என் மனைவி இதற்காக என்னோடு சண்டை போட்டதில்லை..
பிள்ளைகள் எல்லாம் திருமணம்
முடித்து அவரவர்கள் தனிகுடும்பமாகச் சென்று விட்டனர். எங்களுக்கோ தடுமாறும் வயது, அதனால் பெற்ற மக்களின் வீட்டில் போய் இருக்கலாம் என்ற எண்ணத்தில், மூத்த மகனிடம் விபரத்தைச் சொன்னேன்.
அதற்கு அவன், என்னால் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் வைத்து பராமரிக்க முடியாது, யாரவது ஒருவர் வரலாம் என்றான். அப்படி நான் மூத்த மகன் வீட்டிற்கும், மனைவி வேறு ஒரு மகன் வீட்டிற்கும் சென்றோம் வேறு வழியின்றி.
47 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்து தனிமையில் இருப்பது பிடிக்காமல் பல நாட்கள் அழுது இருக்கிறேன் . மனைவியின் நினைவுகள் மனதில் போராட இறுதியில் என் மனைவி இருக்கும் மகன் ஊருக்குச் சென்றேன்.
என் மனைவியிடம் சொன்னேன்,
நாம் இருவரும் ஒன்றாக வேறு எங்காவது போய் விடலாமா என்று, மனைவியும் அழுது கொண்டே சம்மதித்தாள்.
மகன்கள் வீட்டிலிருந்து நாங்கள் வெளியே வந்து ஒரு வருடமாகிறது.
பிழைப்புக்காக நான் குழந்தைகளின் பொம்மைகளை நடந்து சென்று விற்கிறேன், தினமும் 80 ரூபாய் முதல் 100 வரை லாபம் கிடைக்கும், இதை வைத்துக் கொண்டு ஜீவனாம்சம் செய்து கொண்டுள்ளோம், இப்போது எனக்கு வயது 77 ஆகிறது, எப்போது வேண்டுமானாலும் நான் இறந்து போகலாம்..
வரும் 100 ரூபாய் வருமானத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து சேமிக்கிறேன், அது எங்கள் மரண செலவிற்க்கு, என் பிள்ளைகளுக்கு அந்த செலவுத் தொந்தரவுகூட வேண்டாம் என அதை மனைவியிடம் கொடுத்து வைக்கிறேன் .
ஒரு நாள், இந்தப் பணம் எதற்கு சேமிக்கிறீர்கள் என்று என் மனைவி
கேட்டாள்.
நம் மரணச்செலவிற்கு என்றேன், சத்தமாக கத்தி அழுது விட்டாள். இப்போது என்மனைவியின் பிரார்த்தனை, என் கணவர் மரணிக்கும் அதே நேரத்தில் எனக்கும் “மரணத்தைக் கொடுத்து விடு கடவுளே என்று”
“என் பிரார்த்தனையும் அதுவே தான்” என்று அவர் சொல்லவும் ,
இதை கேட்டுக்கொண்டிருந்த நான் மனதால் நொறுங்கிப் போனேன் .
நீங்கள் இங்கே இருப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தெரியுமா என்றேன் ?
அவர்களுக்குத் தெரியாது என்றார்.
எனக்கு மனம் கனத்துப் போனது.
சாதாரண மக்களிடம்தான் எத்தனை எத்தனை வலிகள் மனதில் புதைந்திருக்கின்றன
சின்ன சின்ன வியாபாரிகளிடமும் பழக்கடைக்காரர்களிடமும் பேரம் பேசாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற படிப்பினையை நான் இம் முதியவரிடம் உரையாடியதன் மூலம் தெரிந்து கொண்டேன்…!