அதிரடியாக முன்னெடுத்துவிட்டு, அமைதியாகிவிடக்கூடாது

அரசாங்கம் எவ்வளவோ மிரட்டினாலும், அந்த மிரட்டல்களை அரிசி ஆலை உரிமையாளர்கள் பொருட்படுத்துவதில்லை; இல்லையெனில் அந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து அரிசி ஆலைகள் அரிசி பிரச்சினைக்கு தீர்வை வழங்கியிருக்க முடியும்.

அரிசி விலை மற்றும் அரிசி தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கடுமையான நடவடிக்கை என்னவாக இருக்கும்? முதலாவதாக, இந்த நாட்டின் அரிசி ஆலைகளை முற்றாக மறந்து வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்த நேரத்தில், விலை உயர்ந்த கீரிச் சம்பா மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. 5-6 மாதங்களுக்கு முன்பு 5 கிலோ கிராம் கீரி சம்பா பொதி 2,350 ரூபாய்க்கு மேல் இருந்தது. ஆனால் அன்றைய காலத்தில் நாட்டு அரிசி ஏராளமாக இருந்தது. கீரிச் சம்பாவைப் போன்று சுவையாகவும், விலை குறைவாகவும் இருப்பதால், நாட்டு அரிசிக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கீரிச் சம்பா அரிசியை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது என்ற கருத்தும் நிலவுகிறது. எந்த வகையான அரிசியையும் சமைக்கும் போது, ​​பசையம் என்ற மூலப்பொருள் இருக்கும் அப்போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

இந்த நாட்டில் தேங்காய் நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை  ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன முதலில் கண்டுகொண்டார்.  அவர்   தென்னை அபிவிருத்தி அமைச்சை நிறுவினார். அப்போது தென்னைக்கு ஏன் அமைச்சு என்று கேள்வி எழுப்பிய எதிரணிகள்,  கிண்டலாக பேச ஆரம்பித்தனர். தெங்கு முக்கோண வலயம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது நிலம் பிரித்து ஏலம் விடுவது மிகக் குறைவாக இருந்தது. எனினும், தற்போது தெங்கு பயிரிடுவதற்கு நிலம் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது. தென்னை மரங்கள் வெட்டப்பட்டு, கட்டாந்தரையாக்கி, துண்டு, துண்டுகளாக விற்பனை செய்யப்படுகின்றது.

இன்றைய நிலையில் ஒரு தேங்காய் 200 ரூபாய்க்கு மேல் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது மோசமான நிலையாகும்.  இதனால் கோவில்களில் சிதறு தேங்காய் அடிப்பதும் குறைந்துள்ளது. அரிசி ஆலைக்காரர்கள் மற்றும் தேங்காய் விற்பனை செய்வோரை எதிர்த்து போராடக்கூட தேங்காய் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை. இதனால் ஒரு நாள் மக்கள் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் அரிசி ஆலைகளின் வீடுகளுக்குச் சென்று சிதறு தேங்காய்க்குப் பதிலாக ஏதாவது ஒன்றை எடுத்துதான் சிதறுதேங்காய் என நினைத்து அடிப்பார்கள்.

இந்நிலையில், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (10)   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்பவர்கள், அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை புதன்கிழமை (11) முதல் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை ஓரிரண்டு நாட்களுக்கு மட்டுமே அதிரடியாக முன்னெடுத்துவிட்டு, பின்னர் அமைதியாகிவிடக்கூடாது என்பதே எமது அறிவுறுத்தலாகும்.

(Tamil Mirror)

Leave a Reply