‘ஒருபக்கம் பெரிய கோயிலிங்கற பண்பாட்டு விசயத்துக்காக அவன நாம் மெச்சிக்கிட்டாலும் அவனோட ஆட்சிக் காலத்துல ஜனங்க பாடு திண்டாட்டமா இருந்தத மறைக்கக் கூடாதுல்ல.’
‘இப்ப நாம டிமான்ஸ்ட் ரேசன்லால, ஜி.எஸ்.டி.னால, நீட் எக்சாம்னால, இந்தி திணிப்புனால பாதிக்கப்பட்ட மாதிரி, அவன் காலத்துல ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம்பூட்சி, தரகுப்பட்டம், தறிஉறை, மீன்பாட்டம், வட்டிநாழி, கண்ணாலக்காணம், வண்ணாரப்பாறை, குசக்கானம்ன்னு ஏகப்பட்ட வரி விதிப்பு. இதுல பாதிக்கப்பட்டவனுங்க எல்லாம் பணக்காரனுங்க இல்ல, பாவப்பட்ட மீன்காரன், விவசாயி, வண்ணான், நெசவாளி, ஆடு மேய்க்கிறவன், ஓடக்காரன், கள் எறக்குறவன்…..கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்ணாலக் காணம்ங்குற வரி கட்டணும்னு சொல்லி கெடுபிடி வசூல் பண்ணுனவன் உலகத்திலேயே நம்ம தலைவன்தான். வரி கட்டாதவன்லாம் சிவ துரோகிகள்….அதுக்கு தண்டனையா அவங்க நிலங்களைப் பறிச்சு பிராமணர்களுக்கு குடுத்தான்.
அதுதான் பிரம்மதேயம், சதுர்வேலி மங்கலம்…’
‘சமஸ்கிருதத்து பாசை மேல ராஜராஜனுக்குப் பெரிய மோகம் இருந்திருக்கு. அவன் தொடங்கிய பள்ளிக்கூடங்கள்ல மீமாம்சம், வியாகரணம், இதிகாசம், சிவதருமம்னு வடமொழி இலக்கண இலக்கியங்கள் தான் கற்பிக்கப்பட்டிருக்கு. பெரிய கோயில் கல்வெட்டுகள்லதான் தமிழ்நாட்டிலேயே முதன்முதலா சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டிருக்கு…’
‘எங்க ளடியாள் அங்காடியும்
இவள் மகள் பெருங்காடியும்
இவள் மக்களும்
திருவக்கரை உடைய மாதேவர்க்கு
தேவரடியாராக நீர் வார்த்துக் கொடுத்தோம்…’
‘என்னடா இது ஏதோ செய்யுள் ஒப்பிக்கிறே’.
‘செய்யுள் இல்லடா மச்சி. கல்வெட்டுல செதுக்கியிருக்கிற வரிகள். ஒரு விவசாயி தன் நிலத்துல ஒரு பயிருக்கு ஊடு பயிரா இன்னொரு பயிர் வளர்த்தா ‘ஊடுபோக்குவரி’ன்னு ஒரு வரி வசூலிச்சான் ராஜராஜன்.
வரிக்கொடுமை தாங்க முடியாம நிறைய குடும்பங்கள் அவங்கள அவங்களாகவே கோயிலுக்கு வித்துக்கிட்டாங்க. கல்வெட்டு அந்த கண்ணீர்க் கதைங்களச் சொல்லுது. சோழ மண்டலத்துல பல பாகங்களிலிருந்தும் நானூறு பெண்களை ஒடம்பில் சூடு போட்டு தஞ்சாவூருக்கு இழுத்திட்டு வந்து தளிச்சேரி ஒண்ண உருவாக்கி அதுல வச்சு பராமரிச்சவர்ப்பா ராஜராஜன்’.
‘தாஜ்மகால் கட்னப்பவும் இது மாதிரி கொடுமைகள் நடந்திருக்கும் தானே?’
‘நடந்திருக்கும். ஆனா தளச்சேரி மாதிரி ஒண்ண ஸாஜகான் உருவாக்கலையே?’
‘ஏண்டா, மொகல்ஸோட அந்தப்புரங்கள்ல இல்லாத பெண்களாடா? அரவாணிகளைக் கூட அவங்க விட்டு வைக்கலியே?’
(கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய ‘ஞாயிறு கடை உண்டு’ நாவலில் வரும் ஒரு உரையாடல்.