எம்டி.வாசுதேவன் நாயர்

பத்ம பூஷன் – ஞானபீடம் –
சாகித்ய அகாடமி – கேரள சாகித்ய அகாடமி விருதுகளை வென்ற இலக்கியவாதி
எம்டி எனக்கு அறவே பரிச்சயம் இல்லாதவர்.
ஆனால் – சிறந்த திரைக்கதைக்காக
நான்குமுறை தேசிய விருது வென்ற
‘சினிமாக்காரன் எம்டி’ –
எனக்கு வெண்திரைமூலம் பரிச்சயமானவர்.

திரைமொழியை ஓர் இலக்கிய வடிவமாக
மலையாள ரசிகர்களை ஏற்கவைத்தவர்
என்னும் புகழில் எம்டி எப்போதும்
உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.
சூழ்ச்சி என்றதும் மகாபாரத சகுனி எப்படி
மனத்தில் தோன்றும்படி சித்திரிக்கப்பட்டானோ – துரோகம் என்றவுடன் எட்டப்பன் எவ்விதம்
நம் மனக் கண்ணில் தோன்றும்படி
வரலாறில் சித்திரிக்கப்பட்டானோ –
அதுபோன்றே –
புராண பாத்திரமான ‘சந்து’ –
சதியின் வடிவமாக – ‘சதியன் சந்து’ என்று மலையாளிகளால்
உருவகிக்கப்பட்டு வந்தான்.
ராமன் காலடிபட்டு உயிர்பெற்ற
அகலிகையை மீண்டும் கல்லாக்கி –
புதுமைப்பித்தன் எப்படி ஒரு கதையில்

உருவகித்தாரோ அவ்விதம் –
சந்துவுக்கு ஒரு நியாயத்தைக் கற்பித்து –
ஒரு திரைக்கதை அமைத்த எம்டி –
புராணத்தைத் திருப்பிப் போட்டார்.
அதுதான் –
கேரளத்திலும் தமிழ்நாட்டிலும்
பெரும் வரவேற்பைப் பெற்ற
‘ஒரு வடக்கன் வீர கதா’ எனும்
மம்மூட்டி திரைப்படம்.
இந்தியப் புகழ்பெற்று –
தேசிய விருதையும் வென்ற
‘நிர்மால்யம்’தான் –
எம்டி எழுதி இயக்கிய முதல் திரைப்படம்.
தொடர்ந்து – பந்தனம், கடவு, மஞ்ஞு,
ஒரு செறு புஞ்சிரி திரைப்படங்களை
இயக்கியவர் –
சாஹித்ய அகாடமிக்காக பிரபல எழுத்தாளர்
தகழி சிவசங்கரன் பிள்ளையைச்
சிறப்பிக்கும் ‘தகழி’ ஆவணப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட
அற்புதமான திரைக்கதைகளை
மலையாள சினிமாவுக்கு
எழுதித் தந்தவர் – எம்டி.
அவற்றுள் –
இரண்டு தேசிய விருதுகள் நான்கு
கேரள அரசின் விருதுகள் வென்ற ‘நிர்மால்யம்’ –
நான்கு தேசிய விருதுகளை வென்ற
‘ஒரு வடக்கன் வீரகதா’ –
இரண்டு தேசிய விருதுகளை
வென்ற ‘வைஷாலி’ –
இரண்டு தேசிய விருதுகளைப்
பெற்றுத் தந்த ‘நகக்ஷதங்ஙள்’ –
நான்கு தேசிய விருதுகள்
வென்ற ‘பரிணயம்’ –
நான்கு தேசிய விருதுகளை
வென்ற ‘பழசி ராஜா’ –
சிறந்த திரைக்கதைக்காக
தேசிய விருது வென்ற ‘சதயம்’ –
இரண்டு தேசிய விருதுகளை
வென்ற ‘பெருந்தச்சன்’ –
சிறந்த மலையாளப் படத்துக்காக
பிலிம்பேர் வென்ற ‘தாழ்வாரம்’ –
ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருது
இரண்டு கேரள அரசின் விருதுகள்
பெற்ற ‘பஞ்சாக்னி’ –
சிறந்த திரைக்கதை உள்ளிட்ட
நான்கு கேரள அரசின் விருதுகளை
வென்ற ‘அநுபந்தம்’ –
ஒரு பிலிம்பேர் இரண்டு கேரள விருதுகள்
பெற்ற ‘அடியொழுக்குகள்’ –
சிறந்த திரைப்படத்துக்காக
பிலிம்பேர் வென்ற ‘த்ரிஷ்னா’ –
மூன்று தேசிய விருதுகள்
வென்ற ‘ஓப்போல்’ –
‘அக்ஷரங்ஙள்’ – ‘உயரங்ஙளில்’….
போல இன்னும் படங்களையெல்லாம்
காணக் கிடைத்த வரத்தை
நான் பெற்றவன்!

இலக்கியத்திலும் சினிமாவிலும்
சாகாத எழுத்துகளைப் பொறித்த
அவரின் மரணச் செய்தியை
நேற்று முன்னிரவில் –
‘எம்டி வாசுதேவன் மரிச்சு’
இப்படி ஒரு
தொலைபேசிக் குறுஞ்செய்தியாக
தோழர் லதாராணி பூங்காவனம்
அனுப்பியபோது ‘ஓ!’ என்று
ஒருகணம் திகைத்தேன்.
மூப்பில் இறப்பது இளமையில் இறப்பது
என்கிற அளவுகோல்களில் –
இறப்பின் தன்மை எடை போடப்பட்டாலும் –
இறந்த மனிதரின் இழப்பைக் கணக்கிடும்போது – அந்தத் தராசுக்கு மதிப்பு குறைகிறது.

தொண்ணூற்றொரு வயது
கடந்து மரித்தாலென்ன…
மாடத்து தெக்கேக் காட்டு
வாசுதேவன் நாயரின் மரணம்
ஒரு பேரிழப்புத்தான் !
அந்தப் படைப்புக் கலைஞனுக்கு
என் இறுதி வணக்கம்