பிறப்புச் சான்றிதழ், விவாகப் பதிவுச் சான்றிதழ் என்பவை ஆறு மாதத்துக்கு உட்பட்ட திகதியினுள் எடுத்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பத்து வருடத்துக்கு முன்னர் எடுத்த சான்றிதழாகக் கூட இருக்கலாம். ஆனால் மூலப் பிரதி கிழியாமல் சேதமடையாமல் இருந்தால் போதுமானது.
நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் ஏற்கனவே எடுத்துப் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டன. உடன் புதிதாகப் படம் எடுத்துத் தருமாறு கேட்டனர். ரூபா 400 கட்டணம் கொடுத்துப் பிரயாணத்தில் களைத்து விழுந்து கவலைக்குரிய தோற்றத்துடன் படம் எடுத்துக் கொடுத்ததைக் கண்டேன்.
காலை 7.30 மணி முதல் விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஏற்கும் பணியைத் தொடங்கினார்கள். நண்பகல் ஒரு மணி வரையும் ஏற்கனவே ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்து முற்பதிவு செய்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டனர்.
பாஸ்போட் விநியோகிக்கும் பணி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நிறைவு பெற்றது. எமக்கு 3.15 மணிக்குக் கிடைத்தது. பக்கத்திலுள்ள ரெயில்வே ஸ்ரேசனுக்கு உடன் சென்று 3.30 மணி யாழ்ராணி ரெயின் மூலமாக 6 மணிக்கு நாவற்குழியில் இறங்கினோம்.
ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்துத் திகதி, நேர ஒதுக்கீட்டைப் பெற்றாலும் நாம் விண்ணப்பத்தைக் கொடுக்கும் ஒழுங்கு முறையிலேயே பாஸ்போட்டைத் தருகின்றனர். காலை 7.30 மணிக்கு விண்ணப்பத்தைக் கொடுக்கும் வகையில் செல்வது நன்று.
ஒன்லைன் மூலமாகப் புகைப்படம் எடுக்கும் அனுமதி பெற்ற ஸ்ரூடியோவில் படம் எடுக்க வேண்டும். பின்னர் ஒன்லைன் பதிவு விடும் நேரத்துக்கு பதிவு செய்ய வேண்டும். ஒன்லைன் பதிவு எந்த நேரம் கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. அதனால் அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். 07 ஒன்லைன் மூலமாகத் திகதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டாலும் பாஸ்போட் விண்ணப்பத்துக்கான படிவத்தை நாம் நிரப்புதல் வேண்டும். ஆண்களாயின் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் போட்டோப் பிரதி ஒன்றை வைத்திருத்தல் வேண்டும். பெண்கள் ஆயின் விவாகப் பதிவுச் சான்றிதழின் போட்டோ பிரதியையும் வைத்திருந்து உங்களுக்குரிய நாளன்று சமர்ப்பித்தல் வேண்டும். ஆங்கில மொழி பெயர்ப்போ ஆறு மாத காலத்துக்குள் சான்றிதழ் பெற்ற திகதியோ தேவையில்லை.
பழைய பாஸ்போட்டைப் புதுப்பிப்போர் பழைய பாஸ்போட்டில் உங்கள் படமுள்ள பக்கத்தின் போட்டோ பிரதியையும் ,பழைய பாஸ்போட்டையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
ஒரே நாளில் பாஸ்போட் பெறுவதற்கான கட்டணம் 20 000 ரூபா, சாதாரண சேவையில் பாஸ்போட் பெறுவதற்கான கட்டணம் 5000 ரூபா. சாதாரண சேவையில் விண்ணப்பிப்போருக்கு நான்கு மாதங்களில் கிடைக்கின்றது.
ஒரே நாள் சேவையில் உங்களுக்குப் பாஸ்போட்டைத் தரும் போது நீங்கள் கையளித்த ஆவணங்கள் யாவற்றையும் ஸ்கான் செய்து ஆவணப்படுத்துவதால் அவற்றை உடனேயே திருப்பித் தருகின்றனர்.
வெளிநாடுகளில் வசித்து இலங்கைப் பாஸ்போட் வைத்திருப்போரும் ஏற்கனவே ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்து திகதி ஒதுக்கீடு பெற்றிருந்தால் மட்டுமே ஒரேநாள் சேவையில் விண்ணப்பித்துப் பெற முடியும். முன்னுரிமை எதுவுமே வழங்கப்படவில்லை. நாம் 25 பெப்ருவரி 2023 இல் விண்ணப்பித்து 27-04-2023 ஆம் திகதியன்றே பெற்றோம். இரண்டு மாதங்களாகியது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையருக்குக் கொழும்பு பாஸ்போட் அலுவலகத்தின் ஊடாக முன்னுரிமை எதுவும் வழங்கப்படுவதாக நான் அறியவில்லை. இதனால் இடைத் தரகர்களை நாடிப் பலஆயிரம் ரூபாக் கொடுத்துப் பாஸ்போட் பெறும் அவலம் தொடர்கின்றது. வேதநாயகம் தபேந்திரன் 05-05-2023