கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 02

நான் சிரித்துக்கொண்டேன். நீங்க நினைக்கமாதிரி சாப்பாடு எனக்கு ஒரு பிரச்சினை இல்லை. சாப்பிடுறதும் குறைய. நல்ல பத்தியம். அடுத்தது தங்குறதும் பிரச்சினை இல்லை. வாங்க வந்த வேலையப் பார்ப்போம் என்றேன்.

பெனடிக்ற் சின்னமணி கதைக்கத் தொடங்கினார்.

தீவகமெங்கும் பரந்து கிடக்கும், அழிக்க முடியாத, அழிச்சாட்டியமான சீமைக்கருவேலம், பார்த்தீனியம் காடுகளுக்கூடாக என்னை அழைத்துச் சென்றார். மெலிஞ்சிமுனை மீன்பிடித்துறை அருகே வந்து சேர்ந்தோம்.

எங்கும் நீலம், எதிலும் நீலம். கடல் நீலமும், கறுப்பாயும், குளிராயும் உறைந்து கிடந்தது. கொண்டு வந்த மூஸாவின் (மோசஸின்) அசாக் கோலினால் நீரில் தட்டினார். நீர் விலகிக் காணாமல் போனது. உள்ளே இறங்கி நடக்கச் சொன்னார். நடந்தேன். கடலுக்குள் நடந்து கிழக்குப் பக்கம் போகிறோம். இருவர் இணைந்து கொண்டனர் அவரது பாட்டனும். பூட்டனும். வலதுக்கொண்டு, இடதுக்கொண்டு. துாரத்தே தமயந்தியும் தெரிகிறார். அவர்கள் அமைதியாகவிருக்கிறார்கள். இவர்தான் கதைக்கிறார். பாட்டனும், பூட்டனும் பாவித்த மரக்கோலால் தாங்கி, வேட்டியை பாயாய் கட்டி ஓட்டிய மரவள்ளத்தை காட்டுகிறார். நரையான் பிட்டியில் அவரது பண்டையோர் தங்கியிருந்து பிடிப்பதையும் காட்டுகிறார். பிரண்டையாறு முழுக்க தண்ணீர் வற்றவில்லை. கழிமுகம் வருகிறது. ஆழம் தாண்டுகிறோம். அதற்குப் பிறகு புட்டிக் கடல் இருந்த தடம். நரையான் பிட்டி வருகிறது. அந்த தனித்த மனிதர்கள் யாரும் வாழா தீவில் 100 அடிக்கு மேல் இயேசு கடலையும், பிள்ளைகளையும் சேவிக்கிறார். கண்ணாபிட்டி வருகிறது. அதற்கு அப்பால் 30 வருடங்களுக்குள் உருவான சிறுகண்ணாபிட்டி தீவும் வருகிறது. புங்குடுதீவை எட்டிப் பாய்கிறோம். அது வரை புட்டிக் கடல். நடக்கிறோம். நடந்தே செல்கிறோம். நெய்னாதீவு வருகிறது. இரு தீவுகளுக்கும் கத்தியாப்பிட்டிக்கல்லு ஆறு பாய்கிறது. புளியந்தீவில் ஒரு எட்டு. அது முடிய சீராமபார் கல்லில் ஓய்வெடுக்கிறோம். புறக்கரை, உட்கரை காட்டி, அனலைதீவு, எழுவை தீவு, மெலிஞ்சிமுனை என பழைய இடத்திற்கு வருகிறோம்.

கடல் ஏறி இறங்கும். வெள்ளம் வந்து போகும். உப்பும், வெப்பமும் கூடும். போசணைகள் ஏறும். நஞ்சுகள் இறங்கும். விலங்குகள் மேய்ச்சலுக்கு வரும். கூடு, பாளி, அழை கட்டும். அழைக்கும். பெண்கள் முட்டையிடும். ஆண்கள் விந்து சொரியும். கருக்கட்டும். பின் பொரிக்கும். குஞ்சுகளாகும். கடல்அறுகு, சாதாளை, பாசி ஒரு கூட்டம் உண்ணும். அடிச்சேற்றை இன்னொரு கூட்டம் உண்ணும், இன்னொரு கூட்டம் உண்ட இவைகளையே உண்ணும். நண்டுகள், மீன்கள், கணவாய்கள், இறால்கள், கடல் அட்டைகள் வளரும். பெருகும். ஓடும். கடல் ஆமை நடக்கும். டொல்பின்கள் பாயும். திருக்கை புட்டிவந்து குட்டிபோடும். வண்ண வலசைப் பறவைகள் வந்துசேரும். தங்கும். இனம்பெருக்கும். பாடும், ஆடும். வானவில் காட்டும். வண்ணமீன்கள் அணிவகுக்கும். பவளப் பாறைக்குள் பதுங்கும். கடல்அட்டைகள் அடியில் சோம்பெறியாய் துாங்கும். களங்கண்டி, இறால்கூடு கொக்குகள், நாரைகள், கடற்காகங்கள், பருந்துகள் உறுமீன் வரும்வரை வாடி மீன் கொத்தக் காத்திருக்கும். பருந்துகள், ஆலாக்கள் வட்டம் போடும். கடல்அறுகு, கடற்சாதாளைகள் வளையும். நெளியும். நடனமாடும்.

வெள்ளம் வரப் பார்க்கிறது. அசாக் கோலைப் பார்க்கிறேன். நீரில் தட்டுகிறார்.

சின்னமணி கதிரையில் இருந்தவாறு கதையை முடிக்கிறார். ஐந்து, ஆறு கடல் பேராசிரியர்களுக்குரிய திராணியுடன் கதையை முடித்தார். கடல் அடித்தளத்தை தொட்டு, அதன் நிலவியல் அமைப்பை, நீரியல் அமைப்பை சொல்லி, கடல்சார் சூழலியலை விளக்கி, கடர்சார் உயிரியலை விளக்கி, அதன் உயிரியல் பல்வமையை சொல்லி, அதன் எதிர்கால கடல் உயிர்வளங்களின் நிலைபேறான முகாமைத்துவத்திற்கு என்ன செய்யலாம் என்று சமூகவியல், பொருளாதாரம், வர்த்தகம், உயிரியல், புவியியல் கலந்து ஒரு பாடத்தை எடுத்து முடித்தார். தமயந்தி சைமனும் இவ்வாறுதான் பாடமெடுப்பார். சிறிய வித்தியாசம் இருந்தது. உடம்பெல்லாம் நீர் நனைத்ததால் குளிர்ந்த மாதிரி இருந்தது. தொட்டுப் பார்த்தேன். குளிரவில்லை.

உங்களுக்கு இதெல்லாம் தெரியும்தானே என்றார். நான் வெறும் புத்தகப் பூச்சி. கற்கிறேன் என்றேன்.

ஏன் உள்ளுர் அறிவை, பெரிய அறிஞர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. அவர் ஒரு மணித்தியாலமாக எனக்கு பாடம் நடாத்திய வரிகளுக்கும், பந்திகளுக்கும் இடையில் பொருத்தமான catamaran, canoe, boat, mechanized, island, mangrove, Avicenia, tide, spring tide, neap tide, low water, high water, fish, crab, cuttle fish, prawn, dolphin, breeding peak, major peak, minor peak, sea cucumber, tidal mud flat, tidal creek, delta, clay, sand, bottom, lagoon, phytoplankton, nutrients, food web, food chain, fishing catch, fish composition, landing sites, coral reefs, rock reefs, primary productions, marine turtle, hatchery, shallow water, foraging, territory, reproduction, nest, incubation, parental care, birds, migratory birds, migratory routes, fishing gears, gillnets, nesting ground, breeding ground, cast nets, hook and line, hook and rods, drag net, hand net, fish pots, pen culture, eutrophication, BGA-toxins, sea weeds and sea grasses, maze gear, Kraals, dredging nets, demersal, benthic, pelagic, epi pelagic போன்ற சொற்களை ஆங்காங்கே போட்டால், புள்ளிகளுக்கும், உயர்வுகளுக்குமான கட்டுரை தயார்.

உள்ளுர் அறிவு என்பது உள்ளுர் சமூகம் ஒன்று தனது நீண்ட கால சரித்திரத்திலும், அனுபவத்திலும் இயற்கையுடன் இடைத்தொடர்புற்று பெற்று, சேகரித்து விருத்தி செய்துகொண்ட புரிதல்கள், திறன்கள், தத்துவங்கள் என யுனஸ்கோ வரையறுக்கின்றது.

இயற்கை பாதுகாப்பு, உணவு உற்பத்தி, காடுருவாக்கம், மருத்துவம், பேண்தகு நில, நீர் வளபாவனை முகாமைத்துவம், சூழல்சுற்றுலா, காலநிலை மாற்றம், அனர்த்தங்களை குறைத்தல், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் உள்ளுர் அறிவுச் செயற்பாடானது முக்கிய பங்காற்றுகின்றது.

ஒரு சமூகத்தின் உள்ளுர் அறிவானது அச் சமூகத்திற்காக நடைமுறப்படுத்தப்படவிருக்கும் எல்லா திட்டங்களின் முடிவடிடுக்கும் அல்லது தீர்மானமெடுக்கும் நிலைகளில் உபயோகிக்கப்பட வேண்டும். அத்துடன் மேற்கத்தைய அறிவுசார் அபிவிருத்தித் திட்டங்களினால் உருவாகும் பாதகங்களைக் களைவதற்கும் உள்ளுர் அறிவுப் பொறிமுறை அதனுடன் சேர்ந்து உபயோகித்தல் ஒரு சிறந்த முறையாகவும் கருதப்படுகின்றது. எனவே யாதாவது அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன் அந்தத் திட்டங்களினால் நன்மையடைய அல்லது பாதிப்படையப்போகும் சமூகங்களின் பங்குபற்றுதலுடன் செய்யப்பட வேண்டும். எல்லா அவத்தைகளிலும் (திட்டமிடுதலிலிருந்து, இறுதிமுடிவெடுக்கும் வரை) சமூகங்களின் பங்குகேற்பு இருப்பது உறுதி செய்யப்படவேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அந்தத் திட்டம் பேண்தகு அபிவிருத்தி திட்டமாக நிலைத்திருக்கும்.

சிவத்தப் பிட்டு, கணவாய், நண்டு, இறால் கறிகளை வைத்தார்கள். கறிகளில் எதுவுமே நான் சாப்பிடுவதில்லை. நண்டு ஆணத்துடன் சிவத்த பிட்டை சாப்பிட்டேன். என்னை சரியாக கவனிக்கவில்லையென்று அவர்களுக்கு ஒரு கவலை இருந்தது. விளங்கப்படுத்தினேன். புரிந்துகொண்டார்கள். அவ்வப்போது தமயந்தியும் தொலைபேசிக் கொண்டிருந்தார். சின்னமணி நீ ஊருக்கு வா கட்டிப்போடுவேன் என்று கத்திக்கொண்டிருந்தார். அவருக்கு என்ன பிடிக்கும் என்று ஒன்றுமே சொல்லவில்லை என்று.

நான் எனது அறைக்கு போனேன். நாளை அதிகாலை 5.00 மணிக்கு கடலுக்கு போவோம் தயாராக இருங்கள் என்றார். எனது அறைக்கு வெளியில் சின்னமணி துாங்கிக் கிடந்தார். அடிக்கடி தமயந்தி சின்னமணியுடன் தொடர்பிலிருந்தார். அவர் இன்னும் துாங்கவில்லை எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்கிறார் என்று என்னைப் பற்றி சொல்வது புரிந்தது. நேரம் 2.00 மணி. துாங்கப் போனேன்.

என்னை அதிகாலையில் எழுப்புவதற்காக கதவைத் தட்டினார்கள். நான் தயாரான நிலையிலேயே வந்தேன். வீட்டுக்கும், வள்ளங்கள் தள்ளிவைக்கும் கரைக்குமிடையில் ஒன்றரை கிலோமீற்றர் இருக்கும். றெஜினோல்ட் மோட்டார் சைக்கிளில், இருட்டையும், குளிரையும் கிழித்து கரையடியில் விட்டுவிட்டு, பெனடிக்ற் சின்னமணியை ஏற்றிவரப் போனான்.

நான் தனிமையில். கும்மிருட்டு. துாரத்தில் அப்போதுதான் பல வள்ளங்கள் தரை தட்டி மீன்களை கழற்றிக் கொண்டிருந்தார்கள். தெளிவாக தெரியவில்லை. புரிந்துகொள்கிறேன்.

தனிமையும், இருளும், நுளம்புகளும் நானும். அனலை, எழுவை, நெய்னா, புங்குடு, இரணை தீவுகளின் வெளிச்சங்களும் மங்கலாக ஆறுதலாக தெரிந்தன. எத்தனையாயிரம் பேர் தளம், பின்தளம் என்று தியாகிப்பதற்கு இவ்வாறு நின்றிருப்பார்கள் கையில் பிடித்துக்கொண்டு நின்றிருப்பார்கள். மனம் இறுகுகிறது. மோட்டார் சைக்கிள் சத்தம், சீமைக்கருவேல, பார்த்தினிய காடுகளின் இருள்களைக் கிழித்து வந்துகொண்டிருந்தது.

தொடரும்….