இலங்கையின் மீன்பிடித் தொழிலானது கடல்நீர், உவர்நீர், நன்னீர் என மூன்று பிரதான பகுதிகளாக இடம்பெறுகின்றது. கடல் நீர் சார்ந்த மீன்பிடித் தொழில் கடற்கரைக்கு அண்மையிலும், ஆழமற்ற, மற்றும் ஆழ்கடலிலும் நடைபெறும் மீன்பிடித்தொழில் என இரு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது.
ஆழமற்ற கடல்மீன்பிடி இலங்கையைச் சூழவுள்ளதும், கடற்கரைக்கு அண்மையிலும் சுமார் 26000 சதுர கிலோமீற்றர பரப்பில்;, சுமார் 22 கிலோமீற்றர் தூரத்திற்கு நடைபெறுகின்றது. இலங்கை மீன்பிடியில் கடற்கரைக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களே மீன் உற்பத்தி கூடிய இடங்களாகும். கடலின் அடிப்பகுதி வரை சூரியஒளி செல்வதன், தாவரங்கள் ஒளித்தொகுப்பு செய்வதன் காரணமாக, முதலுற்பத்தி அதிகரிப்பதும், தாவரங்கள், விலங்குகள் வேகமாகவும் வளர்ச்சியடைவதும் இதற்கு காரணமாகும். மேலும் நீரில் வளரும் கொடி வகை தாவரங்கள் நீரின் அடியிலிருக்கும் போசணைப் பொருட்களை மேலே கொண்டுவருவதனால், இந்தப் பிரதேசத்தில் போசணைப் பொருட்கள் அதிகமாகவும் காணப்படுகின்றன. இதனால் மற்றைய பிரதேசங்களோடு ஒப்பிடும்போது கடற்கரையை அண்டிய பகுதிகளில் ஓரலகு பரப்பில் மீன் செறிவு மிக அதிகமாக இந்த ஆழமற்ற கடற் பிரதேசங்களில் காணப்படுகின்றன. சிறிய கடல்மீன்களான நெத்தலி, சாளை, சூடை, கீரிமீன் போன்றவை இங்கு ஏராளமாகக் கிடைக்கின்றன. இலங்கையின் மீன் உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்தினை இச்சிறிய மீன்ளே வகிக்கின்றன. அத்துடன் இறால், நண்டு, சிங்க இறால், மற்றும் ஓரளவு பெரிய மீன்களான கொடுவா, வாளை, மற்றும் கடலின் அடித்தளத்தில் வாழும் கல்மீன் வகைகள் (முருகைக்கற்பாறைகளை அண்டி) பிடிக்கப்படுகின்றன.
இந்த ஆழங்குறைந்த கடல்கள் மத்திய கோட்டுக்கு அருகில் காணப்படுவதனால் முருகைக்கல், கடல்நீரேரி போன்ற சூழற்றொகுதிகளும் இங்கு காணப்படுகின்றன. இதனால் போசணைப் பொருட்களின் செறிவும், உணவும், உணவுச் சங்கிலி, உணவு வலை வினைத்திறன் காரணமாக மீன்களின் அளவு இன்னும் அதிகரிக்கின்றது. முருகைக்கல்லைச் சார்ந்து பல வகையான கல்மீன்வகைகள், கடல்விலாங்கு, சிஙக இறால், பன்றிவாயன், பாரை வகைகள் போன்ற பல மீனினங்கள் இங்கு பிடிபடுகின்றன.
கடனீரேரிகளில் போசணைப் பொருட்கள் அதிகமாகக் காணப்படுதல், குறைந்த உவர்த்தன்மை, அதிக சூரியஒளியின் ஊடுருவல் போன்றவை காரணமாக அல்காக்கள் அபரிமிதமாக வளருகின்றன. இதன் காரணமாக அல்காக்கள் ஏராளமான விலங்குகளுக்கு உணவாகின்றன. இலங்கையின் மொத்த கடனீரேரிகளின் அளவு சுமார் 120000 ஹெக்டேயர்களாகும். இருந்தும் நாளாந்த மனித நடவடிக்கைகள் காரணமாக கடனீரேரிகளும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றன. இந்த ஆழமற்ற கடலில் மணல்சார்ந்த பகுதிகளில் சிங்க இறால்களும், மற்றைய பகுதிகளில் பல வகையான மீனினங்களும் பிடிபடுகின்றன.
ஆழ்கடலில், கடற்கரைக்கு அண்மையிலுள்ள கடலும், அதற்கு அப்பாலுள்ள கடலும் அடங்கும். இங்கு தாவரங்களும், உயிரினங்கள் குறைவாக காணப்படுவதால் மீன்களின் அடர்த்தி குறைவாகக் காணப்படும். இங்கு பெரிய மீன்கள் பிடிபடுகின்றன.
கடனீரேரிகள், கழிமுகங்கள் உவர் நீருக்கு உதாரணங்களாகும். இங்கு உவர்த்தன்மை கடல்நீருக்கும், நன்னீருக்கும் இடைப்பட்டதாக காணப்படும். கண்டல் தாவரங்களும் காணப்படும். சிற்றாறுகள், பேராறுகள் போன்றவைகளும் இங்கு கலப்பதால், அவை கொண்டு வரும் சேதனப் பொருட்களின் அளவு அதிகரிப்பதால் போசணைப் பொருட்களின் அளவும் அதிகரிக்கும். உவர்த்தன்மை மாற்றத்தை தாங்கும் உயிரினங்களே இங்கு வாழுகின்றன. எனவே நீர் அளவு கூடிக் குறையும்போது, மாற்றமுறும் உவர்த்தன்மைகளுக்கேற்ப விலங்குகள் கடலை நோக்கியும், உவர்நீரை நோக்கியும் தொடர்ச்சி இடம்பெயர்ந்துகொண்டிருக்கும். கண்டல் சூழற்றறொகுதி கடல் விலங்குகளின் இனம்பெருக்கும், குஞ்சு வளர்க்கும், வாழிடங்களாக தொழிற்படுவதால், இங்கு மீன்கள் அதிகமாக காணப்படும். இங்கு மரபுரீதியான மீன்பிடி முறைகள் பாவிக்கப்படுகின்றன.
இலங்கை அதிகமான சிறந்த கடல்வளங்களையும், மீன்வளங்களையும் கொண்ட நாடு. மீன்பிடிமூலம் கரையோர சமூகங்கள் இலங்கையின் சமூக, பொருளாதாரத் துறைக்கு கணிசமான பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். கடந்த ஆண்டு மீன்பிடி ஏற்றுமதி மூலம் இலங்கை அரசாங்கம் 287 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொண்டாலும் (பெரும்பாலான வருமானம் இறால் ஏற்றுமதி மூலம்), 116 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 52246 மீன், மீன்பிடி பொருட்களை இறக்குமதி செய்துள்ளது என்பது எமது கடல்வளங்கள் வினைத்திறனாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாகும். தற்போது இலங்கையிலுள்ள டொலர் பிரச்சினை இல்லாமல் இருந்தால் இந்த இறக்குமதி தொகை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதும் வெளிப்படையானதே.
சுமார் 1 மில்லியன் மக்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மீன்பிடிக் கைத்தொழிலுடன் (மீன்பிடி, மீன் பதப்படுத்தல், நீரியல் வளர்ப்பு போன்றவை) தொடர்புபட்டுக் காணப்படுகின்றார்கள். இலங்கையின் புரதத் தேவையில் 50 சதவீதமானவை மீன்களினால் நிறைவுசெய்யப்படுகின்றன. அதுவும் கடல்மீன்களினால் 70 சதவீதம் நிறைவு செய்யப்படுகின்றன. இது உலக சராசரி தேவையில் மூன்று மடங்கு அதிகமாகும். ஒருவர் ஆராக்கியமாக இருப்பதற்குஒரு நாளைக்கு 65 கிராம் புரதம் (வருடத்திற்கு 22 கிலோகிராம்) சாப்பிடவேண்டும் என்று ஆய்வொன்று கூறுகின்றது. இலங்கையில் 38 – 48g ஆக இந்த அளவு காணப்படுகிறது. தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பிற்கும், புதிய தொழில் வாய்ப்புகளிற்கும், ஏற்றுமதிக்கும் இலங்கை மீன்பிடிக் கைத்தொழில் முக்கியமானதாகும்.
எல்லைதாண்டிய அயல்நாட்டு மீன்பிடி, யுத்தம், மீன்பிடித்தடை, நீருயியிர் வளர்ப்பில் ஆர்வம் காட்டாமை, குறைந்த வினைத்திறனைக் கொண்ட மீன்பிடி சாதனங்கள், கலங்கள், நிதி போன்றவை கடற்றொழில் மீன்பிடியின் விருத்திக்கு பாரிய சவாலாக காணப்படுகின்றன. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை உரிய முறையில் உபயோகிப்பதால், அந்த நீரியல் வளங்களின் பேண்தகு அபிவிருத்தியை விருத்திசெய்வதன் மூலம், எதிர்காலத்தில் பொருளாதார அபிவிருத்திக்கு கடற்றொழில் மீன்பிடி பாரிய பங்களிப்பு செய்யக்கூடிய வாய்பப்புக்கள் பிரகாசமாக உள்ளன. இடைக்கடல், ஆழ்கடல் மீன்பிடி மூலமும், உள்நாட்டு மீன்பிடி, நீர்உயிர் வளரப்பு ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலமும், அவற்றை மேம்படுத்துவதன் மூலமும், இந்த கடல் வளங்களை சரியான முகாமைத்துவம் செய்வதன் மூலமும், அறுவடைக்குப் பிந்திய இழப்புக்களை தடுத்ப்பதன் மூலமும் எதிர்காலத்தில் மொத்த தேசிய உற்பத்திக்கு கடற்றொழில் மீன்பிடி பாரிய பங்காற்றவும் முடியும்.