காரல் மார்க்ஸ்..! கம்யூனிச சித்தாந்தங்களை உலகுக்கு வெளிக்கொணர்ந்த மாமேதை. தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே இவரது ‘மூலதனத்தின்’ ஆரம்பப்புள்ளி. இவருக்கு வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக இருந்தவர் மார்க்ஸின் காதல் மனைவி ஜென்னி.
இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணமில்லை. சிறுவயதில் இருந்தே இருவரும் நண்பர்களாக இருந்து பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்ட காதல். பால்ய வயதில் சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித் தவித்துள்ளார்.
ஆனால் ஜென்னியின் வீடோ பணக்கார பிரபுக்கள் குடும்பம். காரல்மார்க்ஸ் தன் உயர்படிப்பிற்காக படிக்கச்செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லைதான். அவரது ஒரே அக்கறை ஜென்னி மட்டும்தான். கல்லூரிக்கு சென்றவுடன் நண்பர்களுடன் சுற்றித் திரிந்தவர், மதுகுடித்துவிட்டு ஜென்னிக்கு காதல் கடிதம் எழுதிவிட்டு பதிலுக்காக காத்திருந்தவர். மார்க்ஸின் கவனம் ஒரு கட்டத்தில் சமூகத்தின் பக்கம் திரும்ப, அதுவரை காதலுடன் பயணித்த மார்க்ஸ் சமூகத்தையும் தன்னுடன் இணைத்து பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
பணக்கார அழகியான ஜென்னியை திருமணம் செய்ய வரன்கள் வந்துகொண்டே இருக்க, ஜென்னி அதை எல்லாவற்றையும் நிராகரித்து, மார்க்ஸை திருமணம் செய்வதில் உறுதி காட்டியிருக்கிறார்.
இத்தனைக்கும் ஜென்னியின் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானவர்தான் காரல் மார்க்ஸ். ஜென்னியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடிதான். ஆனால் இங்கு பிரச்சனை மார்க்ஸின் வீட்டில். மார்க்ஸின் குடும்பம் பூர்விகமாக யூதர்கள். மார்க்ஸின் அம்மா “ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா? நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என கறாராகச் சொல்லிவிட்டார்.
மார்க்ஸுக்கும் படிப்பு முடிந்தது. மார்க்ஸ் ஜென்னியைத் திருமணம் செய்யவேண்டுமெனில் வருமானத்தை ஈட்டும் வேலையினைத் தேட வேண்டும் என நினைக்கிறார். எனவே, ஜென்னியிடம் எனக்காக காத்திரு நான் உன்னை வேலை கிடைத்ததும் அழைத்துச் செல்கிறேன் என்கிறார். ஜென்னியும் ஏழு ஆண்டுகள் மார்க்ஸ் வருகைக்காக காத்திருக்கிறார்.
இந்த ஏழு ஆண்டுகளில் இவர்களின் காதலை கடிதங்கள் வழியே பரிமாறிக்கொள்கிறார்கள். மார்க்ஸ் ஜென்னிக்காக தான் எழுதிய கவிதைகளை கையெழுத்துப் புத்தகமாகத் தொகுத்து கிறிஸ்துமஸ் பரிசாக அனுப்புகிறார். புத்தகத்தைப் பிரித்த ஜென்னியின் கண்களில் எழுத்துக்கள் தெரியாத வண்ணம் கண்ணீர் ததும்புகிறது. பாரிஸ் நகரில் வேலை கிடைத்ததும் ஜென்னியை திருமணம் செய்கிறார் மார்க்ஸ், ஐவர் மட்டுமே கலந்து கொள்ள, நண்பர்கள் உதவியுடன் திருமணம் மிகவும் எளிய முறையில் தேவாலயத்தில் நடக்கிறது.
இவர்களின் தேன்நிலவுக் கதைகளும் கேலிக்கூத்தாகவே இருந்துள்ளது. மார்க்ஸ் பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். ஜென்னியும் அதற்கு உடன்பட்டு, ‘இருவரும் சேர்ந்தே படிப்போம்’ எனக் கூறியுள்ளார்.
எத்தனை காதலிருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும். ஜென்னி அவருடைய மனைவியாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அவருடைய புத்தகங்களின் முதல் விமர்சகராகவும் இருந்திருக்கிறார்.
காரல் மார்க்ஸுக்கு போக போக சமூகத்தின் மீது பற்று அதிகமாகிறது. இவர் செய்யும் வேலைகளுக்கு எங்கும் எதிர்ப்புகள் கிளம்ப நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். உடன் தன் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்களே என்ற யோசனை இல்லாதவராய் இருக்கிறார் மார்க்ஸ்.
ஆனாலும் மார்க்ஸின் காதலுக்கு முன் வறுமையை துச்சமென நினைத்தார் ஜென்னி. எந்த ஒரு நிலையிலும், ஜென்னி மார்க்ஸிடம் “வீட்டை மட்டும் கவனித்தால் போதும், நாட்டுக்காக ஒன்றும் செய்யவேண்டாம்” என்ற வார்த்தைகளைச் சொல்லியதே இல்லை.
சுற்றிலும் கடன். நண்பர்கள் உதவியுடன்தான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அதீத வறுமையினால் இவர்களின் குழந்தைகளும் அடுத்தடுத்து இறக்க நேரிடுகிறது. “குழந்தை பிறந்தபோது தொட்டில் இல்லை இறந்த போது சவப்பெட்டியுமில்லை” என்று தன் குழந்தை இறந்த தருணம் மனமுடைந்து ஜென்னி கூறிய வார்த்தைகள் வலி மிகுந்தது.
இந்த நிலையிலும் மார்க்ஸ் சமூக சிந்தனையிலே இருக்கிறார்.
வறுமையின் காரணமாய் தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்று சொன்னவர் ஜென்னி. ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஜென்னி கடைசிவரை மார்க்ஸை காதலித்தார். துன்பம் அவர்கள் அன்பை வலுப்படுத்தியது.
இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜென்னி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜென்னியும், மறு அறையில் மார்க்ஸும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஜென்னியின் நோய் தொற்றிவிடுமென, அவர் இறந்து கல்லறையில் அவரைப் புதைக்கும் வரை ஜென்னியின் உடலை மார்க்ஸ் பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. பிரபு வம்சத்தில் குட்டி இளவரசியைப் போல் வாழ்ந்த ஜென்னி வறுமையின் உச்சிக்கு சென்று மடிவாள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்தான்.
இறுதி அஞ்சலிக்கு தன் காதல் மனைவிக்கு கடிதம் எழுதினார் மார்க்ஸ். அதில் “அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்” என்று குறிப்பிட்டுள்ளார். கடிதங்கள் வழியே ஆரம்பித்த இவர்களின் காதல்.. அதே கடிதத்தோடு முடிந்தது. நான்கு நாட்கள் கழித்து கல்லறையில் பூ வைத்துவிட்டு கண்ணில் நீர் வழிய கதறியிருக்கிறார் மார்க்ஸ். அதன் பின்னரும் சமூகத்துக்காக போராடவே நினைத்திருக்கிறார்.
“ஜென்னி இறந்த பின்பு, மார்க்ஸ் ஒரு ஆவியாக மட்டும்தான் இருக்கிறார்” என்று மார்க்ஸின் நெருங்கிய நண்பர் ஏங்கெல்ஸ் கூறியுள்ளார். மார்க்ஸ் என்ற மாமேதையை உலகறிய செய்த பெருமைக்கு அவரது சித்தாந்தங்கள் எப்படி ஒரு காரணமோ, அதேபோல் அவரின் காதல் மனைவி ஜென்னியும் ஒரு காரணம்.
இதுவல்லவோ காதல்….
இந்த சமூகம் வாழ தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த காதல்…
(ஆ.க. முத்தையா)