கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி

வரவேற்புரை, வாழ்த்துரைகளினை தொடர்ந்து,
“திறனாய்வின் செல்நெறி” எனும் தலைப்பில் தென் கிழக்கு பல்கலைகழக தமிழ்த்துறை விரிவுரையாளர் ஜனாப். அப்துல் ரசாக் அவர்கள் உரையாற்றினார்.

அவர் தனது உரையிலே சிராஜ் மஷ்ஹூர் (எதிர்ப்பியல்), ரியாஸ் (முனைப்பியல்) எம். நவாஸ் சௌபி, றியாஸ் குரானா, மிஹாத், பௌஸர், பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், அம்ரிதா ஏயெம், ஆகியோரின் திறனாய்வுகள் பற்றிய தனது பார்வையினையும், கிழக்கிலங்கையின் திறனாய்வுத் தள சஞ்சிகைகளான “மூன்றாவது மனிதன்” “பெருவெளி” சஞ்சிகை பற்றியும் இன்னும் பல விடயங்கள் பற்றியும் கருத்துரைத்தார்.

அடுத்ததாக,
“கவிதைகளின் செல்நெறி” எனும் தலைப்பில் கிழக்கு பல்கலைகழக தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி. மேகராசா அவர்கள் உரையாற்றினார்.

இவர் உரையாற்றுகையிலேயே சிவசேகரம், மலர்ச் செல்வன், ரியாஸ் குரானா, ஷர்மிளா சையித், சோலைக்கிளி, அனார், கிண்ணியா நஸ்புல்லாஹ், பாத்திமா மின்ஹா, சப்னாஸ் ஹாஸிம், ஆத்மா, ஜமீல் போன்ற கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து தனது ஆய்வினை நடாத்திச் சென்றார்.

மேலும் இவர் வெறும் லைக்குகளை அடிப்படையாகக் கொண்டு முகநூலில் வழங்கப்படும் இணைய சான்றிதழ்கள் எழுத்தாளர்கள் மத்தியிலே நோபல் பரிசாக கொள்ளப்படும் மாயை பற்றியும் தனது கருத்துக்களை முன் வைத்தார்.

நிகழ்வின் அடுத்த அம்சமாக,
“நாவல்களின் செல்நெறி” எனும் எனும் தலைப்பிலே தென்கிழக்கு பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் கலாநிதி சத்தார் பிர்தௌஸ் அவர்கள் கிழக்கிலங்கையின் நாவல்துறையிலே ஏற்பட்ட வளர்ச்சி தொடர்பாக பேசுகையில் நற்றிணை, மோகனாங்கி, பெரியமரைக்காயர் சிறிய மரைக்காயர், சாணைக்கூரை, சாம்பல் பறவை, மூன்றாம் சிலுவை, அம்பா போன்ற நாவல்கள் பற்றியும் நாவல் ஆசிரியர்கள் பற்றியும் உரையாற்றினார்.

அடுத்ததாக,
“மொழிபெயர்ப்புப் படைப்புக்களின் செல்நெறி” எனும் தலைப்பில் தென் கிழக்கு பல்கலைகழக பேராசிரியர். அஷ்ரப் அவர்கள் பேசுகையில், வெய்யில் மனிதர்கள் மற்றும் ஒரு சுரங்கை பேரிச்சம் பழங்கள் (அஷ்ரப் ஷிஹாப்தீன்), பாலஸ்தீனக் கவிதைகள்(பேராசிரியர் நுஃமான், சிவசேகரம்), சேக்ஸ்பியரின் நாடகங்கள் (செல்வராசா கோபால்), மூன்றாம் பாலினத்தின் நடனம் (ஜிப்ரி ஹாசன்)
பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் அவர் மொழிபெயர்ப்பு துறையின் வரட்சி பற்றியும் அதற்கான காரணங்களையும் முன்வைத்து தமிழில் உள்ள காத்திரமான படைப்புகள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் எனவும் பிற மொழிகளில் உள்ள காத்திரமான படைப்புகள் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அடுத்து,
“சிறுகதையின் செல்நெறி” எனும் தலைப்பிலே வலயக்கல்வித் திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் அவர்கள் கிழக்கிலங்கையின் சிறுகதை எழுத்தாளர்களான உமா வரதராஜன், ஓட்டமாவடி அறபாத், ஜிப்ரி ஹாசன்,
எஸ் எல்.எம் ஹனிபா, அம்ரிதா ஐயம், மலர்ச்செல்வன், தீரன் நவ்ஷாத், திருக்கோவில் கவியுவன், வஹாப்தீன்,அஹமது ஃபைசல், மாஜிதா ஆகியோரின் எழுத்துக்கள் பற்றியும் சிறுகதைத் துறையில் அவர்களின் பங்களிப்புக்கள் பற்றியும் உரையாற்றியதைத் தொடர்ந்து, இளம் சிறுகதை எழுத்தாளர்கள் இவர்களின் எழுத்துக்களை வாசிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

அடுத்த நிகழ்வாக,
“பெண்படைப்பாளிகளின் செல்நெறி” எனும் தலைப்பில் கிழக்கு பல்கலைகழக தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி. நதீரா அவர்கள் பேசுகையிலே பெண்ணியச் சிந்தனை மரபு தொடர்பில் அமெரிக்கப் பெண்ணிய சிந்தனை மரபு மற்றும் பிரான்சிய பெண்ணியச் சிந்தனை மரபு மற்றும் கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் காத்திரமான படைப்புக்கள், போரின்
போதான பெண்களின் நிலைப்பாடு என்பன பற்றியும் உரையாற்றினார்.

இறுதி ஆய்வாக,
“இலக்கியமும் இலத்திரனியலும்” தலைப்பில் மென்பொருள் கட்டுமானப் பொறியியலாளரும், இலக்கிய செயற்பாட்டாளருமான திரு. மயூரன் அவர்கள், மொழியிலும் இலக்கியத்திலும் தொழில்நுட்ப மாற்றங்களின் தாக்கம், செயற்கை நுண்ணறிவு காலத்தில் ஆக்க இலக்கியம் எதிர்கொள்ளப் போகும் புதிய சூழ்நிலை தொடர்பாகவும்
மேலும் காலனித்துவத்திற்கு முன், கணினிக் காலம், இணையக் காலம், இணைய சமூக வலைக்காலம், செயற்கை நுண்ணறிவு /இயற்றறிவு காலம் என்பவற்றினூடாக ஆக்க இலக்கியங்களின் நிலைப்பாடு பற்றியும்
எதிர்கால சவால்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் (பேராசிரியர்களின் வருகையின்மை) ஆய்வரங்க தலைப்புகளில் சில விடுபட்டுப் போயின.
இறுதி நிகழ்வாக, இவ்வொட்டுமொத்த ஆய்வரங்கின் முழுமையான சுருக்கத் தொகுப்பினை (பார்வையாளர்கள் சார்பாக) கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் வழங்கினார்.

உரையின் போது அவர்கள் எடுத்துரைத்த அனைத்து படைப்பாளிகளின் பெயர் விபரம் ஞாபகத்தில் இல்லை. என் நினைவில் உள்ளவர்களை மட்டுமே எழுதி உள்ளேன். குறைகளை மன்னிக்கவும்.

நிலாத்தோழி
(பரீனா பின்த் இஸ்ஹாக்)