சங்கராபரண நாயகன் கே. விஸ்வநாத் இன் நினைவலைகள்….

மறுபுறம் பளபள உடைகளுடன் கிருஷ்ணா போன்றவர்கள் கட்டுமஸ்தான இளைஞனாக இளமையாக இளம் பெண்களுடன் பூங்காக்களில் ஆடும் நாயகனாக வலம் வர…. கூடவே காதலுக்காக உருகி உயிர்விடும் கதையின் நாயகனாக நாகேஸ்வரராவ் என்று கோலோச்சிய காலத்தில்

புது வரவாக முறுக்கேறிய கறுப்பனாக…

கதாநாயகனை வில்லன்கள் அடித்து நொருக்கி கை கால்களைக் கட்டி மயக்க நிலையில் 10 அடி ஆழத்தில் கிடங்கு வெட்டி அதற்கு தாழ்த்தும் விடுவார்கள்….. அதுவும் போதாது என்று அதற்கு மேல் கொங்கிறீட் கலவையினால் சமாதி போல் கட்டியும் விடுவார்கள்….

சில நிமிடங்கள் கழித்து கதாநாயகனின் தங்கை அல்லது காதலி சில வேளைகளில் அம்மா இதே வில்லன்களால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு கொடுமைப்படுத்துவார்கள்…. அந்த பெண்ணும் கதாநாயகனின் முறையை சொல்லி காப்பாற்றுமாறு அலறுவாள்
தற்போதுதான் அதிசயம் நடைபெறும் அந்த புதைகுழியின் கற்கள் மெதுவாக அதிரும்.. அந்த குழியில் இருந்து கதாநாயகன் ஒரே மூச்சில் எம்பிக் குதித்து தாவி வில்லன்களை சூரசம்சாரம் செய்து அந்த பெண்ணைக் காப்பாற்றுவார்….

தியேட்டரே குதூகலிக்கும் நம்பும் கொண்டாடும்…. இப்படியாக இருந்த ஏன் தற்போதும் அதிகம் இருக்கும் ஒரு திரை உலகமான தெலுங்கு திரை உலகத்தில்…

காதலையும், கனிவையும், சங்கீதத்தையும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை பெண் அபலைகளின் குரலை அவளே எதிர் கொண்டு போராடி வெற்றி கொள்வதாக சங்கீதமாக நடனமாக போராட்டமாக இன்னும் பல வாழ்வியலாக படைப்புகளை செய்து தெலுங்கு மக்கள் மத்தியில் அவர்களின் உண்மையான உணர்வுகளை வெளியில் கொண்டு வந்தவர் தான் கே. விஸ்வநாத்(தன்).

அது தெலுங்கு என்ற திரைப்பட உலகத்திற்கு அப்பால் இந்தியாவின் தென் மாநிலங்களைக் கடந்து தற்போதைய ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த காலங்கள் சோவியத் இந்திய நட்புறவுக் அமைப்பின் மூலம் சோவியத்தில் நடைபெற்ற இந்தியத் திருவிழாவில் இந்தியாவின் அடையாளமாக காட்டப்பட்ட திரைப் படமாக வாழ்வியலாக கொண்டாடப்பட்டவர் கே. விஸ்வநாதன்.

எம்மில் பலருக்கும் அவரை ‘சங்கராபரணம்’ என்ற படத்தின் மூலம் அதன் பாடல்கள் மூலம் அதிகம் அறியும் வாய்ப்புகள் எற்பட்டிருந்தாலும்….
‘சிற்பிக்குள் முத்து’ என்ற கமலஹாசன் ராதிகா நடித்த ஒரு திரைப்படம் அழுகையும் ஆனந்தமும் அவள் வாழ வேண்டும் அதற்கு உறுதுiயாக மாற்றுத் திறனாளியான கமல் உடன் இணைய வேண்டும் என்று கரங்கள் கூப்பி வேண்டுதல் செய்யத திரைப்படமாக அமைந்தது.

‘சங்கராபரணம்’ என்ற திரைப்படம் அவருக்கு மட்டும் அல்ல மதிப்பிற்குரிய பாடகர் பாலசுப்ரமணியத்திற்கும் சங்கராபரணத்திற்கு முன்பு…. பின்பு…. என்ற வகையாக அவரின் அடையாளத்தை உயர்த்திவிட்டது என்பது எம்மில் பலரும் ஏற்கும் விடயமாகவும் இருக்கின்றது.

என்னையும் பலரைப் போல் ஸங்காராஆ…ஆ…ஆ… என்று வீதியெங்கும் பாடித்திரிய வைத்தும் இத்திரைப்படம்தான்.

பலரும் ‘சிப்பிக்குள் முத்து’ திரைப்படத்தையும் அதில் நடித்த கமலஹாசனை, ராதிகாவையும்

‘துள்ளித் துள்ளி நீ பாடம்மா…” என்ற பாடலுக்கு கடற்கரையில் கமலஹாசன் கெந்தி…. கெந்தி போட்ட ஆட்டத்தையும்

அந்த ராதிகா கமலஹாசன் முதல் இரவை அழகாக ஒழுங்கமைந்த காட்சிகளையையும் நினைவில் வைத்திருந்தாலும்

இதனை உருவாக்கிய சிற்பி விஸ்வநாதன் என்பதை அதிகம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவாகவே…? இருந்திருக்கின்றது என்பது என் அனுமானம்

நாம்தானே ஓடவிட்டு சினிமாவைப் பார்த்து அந் திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் யார…? யார்…?; என்று ‘தோட்டா தரணி’ வரை அறியாதவர்களாக எம்மை தகவமைத்துக் கொண்டுள்ளோமே…?
இந்த விமர்சனத்தை ஒரு சராசரி சினிமா இரசிகனாக எம்மை பாவித்து நான் முன்வைக்கும் கருத்தாக எடுத்துக் கொள்ளுங்கள்… இதற்கு விதிவிலக்கானவரகள் மிகச் சிலரும் உள்ளனர்.

இதற்கு முன்பு ‘சிரி சிரி முவ்வா’ என்ற கிராமிய காதல் திரைப்படம் திரைப்படம் ஒரு ஆண்டு கடந்து ஆந்திராவிற்கு வெளியிலும் ஓடி இருந்தாலும் அதில் ஜெயப்பிரதா நடித்திருந்தாலும்
‘சங்கராபரணம்’தான் விஸ்வநாதனை பலருக்கும் அதிகம் அடையாளப்படுத்தியதாக நான் உணர்கின்றேன்.

அதே போல் அவரின் இன்னொரு படைப்பான ‘ஸ்வாதி கிரணம்’ திரைப்படம் மம்மூட்டி, ராதிகாவை வைத்துக் கொண்டு இந்திய இசை மீது இராஜாங்கம் நடாத்திய அவர் மேற்கத்திய இசையைத் தவிர்த்த செயற்பாட்டின் அடையாளமாக பலராலும்
பார்க்கப்பட்டதில் உண்மைகள் உண்டு. அருமையான திரைப்படம். இதில் மம்மூட்டியின் நடிப்பு அபாரம் சொல்லி வேலையில்லை அதுவும் அந்த இறுதிப் பாடல் காட்சியில்.

இவரது அனேக படங்களில் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனுடன்(மாமா என்று திரையுலகத்தினரால் அழைக்கப்படும்) இசைப் பிரவாகம் அமைத்து இருப்பார. (பிற்காலத்தில் இளையராஜாவும் இசையமைத்துள்ளார்) அப்படியொரு இசை இணைப்பு இருவர் இடையேயும். இவற்றில் எல்லாம் விஸ்வநாதனின் இசைஞானமும் இந்தியப் பண்பாட்டுப் பற்றும் வெளியே கொட்டித் தெறிக்கும்.

இவரது திரைப்படங்கள் அளவிற்கு பெண்களை மையப்படுத்தி அந்த பாத்திரத்தை திரைபடத்தின் கதாநாகனுக்கு சம அளவில் ஏன் சற்று மேலதிகமாக எடுத்திருப்பது இந்தியத் திரைவானில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை அவரது அதிக திரைப்படங்களை பார்த்திருப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

உதாரணங்களாக……

விஸ்வநாத் பலவிதமான மனித மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதில் ‘சப்தபதியில்’, தீண்டாமை மற்றும் சாதிய முறையின் தீமைகளை அவர் விமர்சித்தார்.

‘சுபோதயம்’ மற்றும் ‘ஸ்வயம்’ ‘க்ருஷி’ ஆகியவற்றில் அவர் உடல் உழைப்பின் கண்ணியத்தையும் மரியாதையையும் வலியுறுத்துகிறார்.

‘சுபலேகாவில்’, இன்றைய சமூகத்தின் முக்கிய தீமைகளில் ஒன்றான வரதட்சணை முறையை நகைச்சுவையாகக் கையாள்கிறார்.

அகிம்சையின் இலட்சியங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய சமுதாயம் அங்கீகரிக்குமாறு ‘சூத்ரதருலு’ வலியுறுத்தும் அதே வேளையில்,

‘ஸ்வாதி கிரணம்’ ஒரு மனிதன் எவ்வளவு சாதித்திருந்தாலும், பொறாமை மற்றும் கோபத்தின் அடிப்படை உள்ளுணர்வுகளால் ஏற்படக்கூடிய தீங்குகளை சித்தரிக்கிறது.

ஐந்து தடவை இந்திய அரசின் அதிஉயர் விருதிகளும் அதேயளவு ஆந்திர மாநில அரசு விருகளையும் பெற்றவர் கே. விஸ்வநாதன்
இவை நெறியாள்கை நடிகர் இன்ன பிறவிற்காக பெற்றுக் கொண்டவர்.

சோசலிச சோவியத்தினால் கருத்தியல் ரீதியில் அவரின் திரைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவை கொண்டாடப்பட்டவை. இதற்கான அங்கீகாரங்களை சோவித் திரைப்பட விழாவில் பெற்றுக் கொண்டவர்.

கூடவே பத்மசிறீ(1992), தாதாசாகேப் பால்கே(2016), தெலுங்கு தேசத்தின் பல்கலைக் கழகத்தினால் கௌரவ கலாநிதிப் பட்டம் போன்றவற்றையும் பெற்றவர்.

வயது மூப்பின் காரணமாக 92 வயதில் ஏற்பட்ட இயற்கை மரணம் ஒரு சினிமாப் பல்கலைக் கழகத்தின் அனுபவங்களை கலைப்படைப்புகளை எம்மிடம் விட்டு சென்றிருப்பதாக உணர்கின்றேன்.

அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.