சென்னை உணவகங்கள்

சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியின் சிறந்த உடுப்பி ஓட்டல் அல்லது சைவ ஓட்டல் என்று சொல்லக் கூடிய ஓர் ஓட்டல் இருந்தது.இவற்றின் பெயர்களில் பவன், விலாஸ் அல்லது கஃபே என்பது சேர்ந்திருக்கும்.

இவை தவிர, பெயர்ப் பலகையே இல்லாத சின்னச் சின்ன சைவக் கடைகள், மாமி மெஸ், ராயர் மெஸ் போன்றவை மத்திய சென்னையில் இருந்தன.சைவ ஓட்டல்களின் தன்மையை எண்பதுகளில் வந்த சரவண பவன் மாற்றியமைத்தது.

சரவண பவன் ஏற்படுத்திய முக்கிய மாற்றம் ஓட்டல்களின் தூய்மை, தோற்றப் பொலிவு சம்பந்தப்பட்டது.அழுக்கான வேட்டி கட்டிய சர்வர்கள், புதர் போன்ற தலைமுடி, தாடி வைத்த ஊழியர்களை சரவண பவனில் பார்க்க முடியாது.

உடுப்பி ஓட்டல்களில் அப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள். தரை, சுவர், மேசை நாற்காலிகள், தட்டு, டம்ளர் சைஸ் எல்லாவற்றிலும் சரவண பவன் ஏற்படுத்திய மாற்றங்களை இதர பெரிய உடுப்பி ஓட்டல்களும் பின்பற்ற வேண்டியதாயிற்று.

எந்த சரவண பவனுக்குப் போனாலும் உணவின் சுவை ஒரே போல இருக்கும் தன்மை, சாப்பிடச் செல்பவருக்கு ஒரு உத்தரவாதம் போல ஆயிற்று.சரவண பவனின் வருகையின் விளைவால், அதுவரை வாளிகளில் சாம்பாரையும் சட்னியையும் கொண்டு வந்து கரண்டி கரண்டியாக ஊற்றிக்கொண்டிருந்த முறை எல்லா ஓட்டல்களிலும் நீக்கப்பட்டது.

வெள்ளை, பச்சை, சிவப்பு, பிரவுன், மஞ்சள் என்று பல வண்ணங்களில் சட்னிகள் வந்தன.ஆனால் எல்லாம் ஒரு ஸ்பூன் அளவுக்கே பரிமாறப்பட்டன.வாளியில் சட்னி வந்தபோது பல முறை கேட்டு வாங்கிய கஸ்டமர், இப்போது இன்னும் சட்னி வேண்டும் என்று கேட்கத் தயங்கும் மனத் தடையை இந்த புதிய பாணி ஏற்படுத்தியது.

புதிய பாணி உணவகத்தின் அடுத்த மிக முக்கியமான பாதிப்பு விலைகளில்தான். ஒரு காபி 3 ரூபாயாக இருந்தது திடீரென 7 ரூபாய் ஆயிற்று. ஒரு தோசை 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் ஆயிற்று. இப்போது காபி விலை 25 ரூபாய். தோசை 55 ரூபாய்.

நகரத்தின் நடுத்தர, கீழ் நடுத்தர வகுப்பினருக்கா னவையாக இருந்த பவன்கள், விலாஸ்கள், மிலிட்டரி ஓட்டல்கள் எல்லாம் உயர் நடுத்தர வகுப்புக்கும் பணக்காரர்களுக்கானவையுமாக எண்பதுகளிலிருந்து மாறத் தொடங்கின.

ஒரு விதத்தில் இந்த மாற்றத்துக்குக் காரணம் எண்பதுகளில் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் உருவாகத் தொடங்கியிருந்த புதிய அப்பர் மிடில் க்ளாஸ் எனலாம்.

இதே காலகட்டத்தில்தான் குடிநீரை பாட்டில்களில் விற்கும் வழக்கமும் அறிமுகமாயிற்று.ஓட்டல்களில் சாதாரண குடிநீரா, பாட்டிலில் அடைத்த ‘மினரல் வாட்டரா’, எது வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள்.சில ஓட்டல்கள், தங்கள் கடையில் ஆர்.ஓ.முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரே பரிமாறப்படுவதாக அறிவிப்புப் பலகை வைக்க ஆரம்பித்தார்கள்.

இதற்கு முன்பு வரை தெருவில் செல்லும் எவரும், குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் போன்றோர் சகஜமாக ஓர் ஓட்டலில் நுழைந்து டேபிளில் வைத்திருக்கும் தண்ணீர் டம்ளரை எடுத்துக் குடித்துவிட்டுச் செல்வதை நான் நிறைய பார்த்திருக்கிறேன்.இன்று இது சாத்தியமே இல்லை என்ற மிரட்சியான சூழலை ஓட்டல்கள் ஏற்படுத்திக்கொண்டுவிட்டன.

அதிக பணப் புழக்கம் உடையவர்களான புதிய அப்பர் மிடில் க்ளாசின் வருகையால் இந்த ஓட்டல்கள் மாறிவிட்டன.சாதாரண சிமெண்ட் தரை, சுண்ணாம்பையே பார்த்திராத சுவர்கள், பழைய மர பெஞ்சுகள், எவர்சில்வர், பித்தளை பாத்திரங்களுடன் இருந்த மயிலை திருவல்லிக்கேணி குட்டி ஓட்டல்கள் கூட இன்று மொசைக், டைல்ஸ், லாமினேட்டட் டேபிள், பிளாஸ்டிக் தட்டுகள், ஏ.சி அறை என்று மாறிவிட்டன.

இதற்கு முன் இவற்றைப் பயன்படுத்திய கீழ் நடுத்தர வகுப்பினர், அதுவரை ஏழைகள் மட்டும் புழங்கிய டீக்கடைகள், டிபன் சென்டர்கள் நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.இந்த நகர்வு கடந்த இருபது வருடங்களில் படுவேகமாக நடந்திருக்கிறது.

இன்று சென்னையில் பல இடங்களில் டிபன் சென்டர்கள் எனப்படுபவை பழைய சைவ ஓட்டல்களின் இடத்தைப் பிடித்து வருகின்றன.இங்கே செல்ஃப் சர்வீஸ், நின்று சாப்பிட வேண்டிய நிலை எல்லாம் இருந்தாலும், வாளியில் வரும் சட்னி, சாம்பாரைப் பல முறை கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

தெருவோர கையேந்திக் கடைகள் கூட இப்போது விலை களைப் பொறுத்தமட்டில் மிடில் க்ளாசுக்கானவையாக ஆகிவருகின்றன.

நகரத்தின் வளர்ச்சிப் போக்கு அங்கே பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளும் தங்கள் வருவாயில் ஓரளவு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதாகவே அமைய வேண்டும்.

ஆனால் சென்னையின் கடந்த முப்பதாண்டு வளர்ச்சி அப்படிப்பட்டதாக இல்லை என்பதாகவே இருக்கிறது.டீக்கடைகள், ஓட்டல்கள் அவற்றுக்கு சாட்சி.

இணைய பதிவு ஈஸ்வர மூர்த்தி

Leave a Reply