ஆனால், கட்டுப்படுத்த வேண்டியது ஒரு கடப்பாடாகும். அவ்வாறுதான், நமது நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் 30 நாள்களாக அமலில் இருந்தன. வீட்டிலிருந்து வெளியேறாது, தொலைக்காட்சிகளையும் சமூக வலைத்தளங்ளையும் பார்ப்போருக்கு, கட்டுப்பாடா, அப்படினா? எனக் கேட்குமளவுக்கு இருந்தன.
வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முதல் சீனா என்றதொரு நாடு இருப்பதாக அறிந்திராத கிராமங்களில் வசிக்கும் பாமர மக்கள் வரை, கொரோனாவின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.
சீனா, மெல்லத் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயலும் இலங்கைக்குள்ளும் கொரோனா வைரஸ் ஊடுருவியமை அவ்வளவு புதினமானதாக இருக்கவில்லை.
சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த சீனப் பெண்ணொருவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கைக்குள் முதல் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனையடுத்து, 2020 மார்ச் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அன்றைய தினம் முதல் படிப்படியாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இன்று மூன்றாவது கொரோனா அலைக்குள் நாடு தத்தளிக்கிறது.
இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டே நாடளாவிய ரீதியில் 30 நாள்கள் பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. அதாவது, மே மாதம் 21ஆம் திகதி அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள், ஜுன் 21ஆம் திகதியே நீக்கப்பட்டன. அத்தியாவசியத் தேவைகளுக்காக தொடர்ந்து மூன்று நாள்கள் இந்தத் தளர்வு இருந்தது. பின்னர், பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி மீண்டும் 30 மணித்தியாலங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, நேற்று (25) காலை தளர்த்தப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக, இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புக்கான செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
எனினும், இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் உரிய முறையில், சரியாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதே தற்போது எழும் கேள்வியாகும்.
பல்வேறு அரசியல் தேவைகளுக்காகவும் ஒரு சில மழுப்பல்களுக்காகவுமே பயணக் கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படுவதாக, எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாகக் கூச்சலிடுகின்றர். அத்துடன், ஒருசாராருக்கு மாத்திரம் இறுக்கமாகப் பயன்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு, மறுசாராருக்கு தாராளமாக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாகவே பயணக் கட்டுப்பாடு அமலில் இருந்த போது எடுக்கப்பட்ட இருவேறு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் வைரலாகியிருந்தன. ஒன்று, கடந்த 18ஆம் திகதியன்று கொழும்பு மாநகரில் ஏற்பட்ட வாகன நெரிசல் புகைப்படம். மற்றொன்று, கடந்த 20ஆம் திகதியன்று மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் வீதியில் முழந்தாளிட வைத்த புகைப்படம்.
ஆட்சியில் இருப்போர், என்னதான் ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனக் கூறி வந்தாலும் இவ்விரு புகைப்படங்களுமே ஒரே நாட்டுக்குள் இருவேறு சட்டங்கள் என்பதை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளன.
இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பயணக்கட்டுப்பாட்டிலேயே இவ்வாறான அட்டூழியங்கள் அரகேற்றப்பட்டிருந்தால், யுத்த காலத்தில் எவ்வாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கும் என இராணுவத்துக்கு எதிராகப் பலர் முழங்கினர்.
“ஏறாவூரில் தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவற்காக வீதிக்கு வந்த பொதுமக்கள் சிலரை, வீதியில் முழங்காலில் நிற்க வைத்த சம்பவம், நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
“பயணக் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் நாடு முழுவதும் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் உலாவுகின்றன. அதேபோல, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வீதிகளில் பயணிப்பதை நாம் காண்கிறோம். இந்நிலையில், ஏறாவூர் மக்களை மட்டும் வதைக்கின்ற இச்செயல் நாட்டில் நியாயமான சட்ட ஆட்சி இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.
தவிர, இவ்வாறான அதிகாரத்தை இராணுவத்துக்கு வழங்கியது யார் எனவும் இம்ரான் எம்.பி கேள்வியெழுப்பினார். இவ்வாறு எதிர்ப்புகள் வலுவடைந்திருந்தன.
இந்நிலையிலேயே, இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸ் ஊடாக, முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணைகள் நிறைவடைந்தன் பின்னர், அந்த இராணுவ வீரர்களுக்கு எதிரான கடுமையான ஒழுங்காற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவம் தற்போது அறிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு எனும் சட்டம் என்ன நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டதோ அதை அடைவதற்காக, முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பின் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
கொரோனா வைரஸை நாட்டிலிருந்து விரட்டுவது தனியொரு நபரால் மாத்திரம் முடியாத காரியம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதில் அரசாங்கம், கொரோனா ஒழிப்புச் செயலணி, சுகாதாரப் பிரிவு, இராணுவம், பொலிஸ், நாட்டின் பிரஜைகள் என அனைவருக்கும் ஒவ்வொரு கடமைகள் இருக்கின்றன. அவற்றின் பொறுப்பு என்னவென்பதை உணர்ந்து கடமையாற்றினால் மாத்திரமே கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
ஆனால், அரசாங்கம் அதை விடுத்து, மக்களை வீடுகளுக்குள் முடக்கிவிட்டு, எரிபொருள் விலையேற்றத்தை மேற்கொண்டும் கொலைக் குற்றவாளி என நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்ட துமிந்த சில்வா போன்றோரை விடுவித்தும் வருகின்றது.
அத்தோடு, மேற்குறிப்பிட்ட இராணுவத்தின் அடாவடி நடவடிக்கை மாத்திரமல்ல; பொதுமக்கள் சிலரின் நடவடிக்கைகளும் கொரோனா ஒழிப்புக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் இந்தப் பயணக் கட்டுப்பாட்டு காலத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மதுபானம் தயாரித்தல், கஞ்சா, ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்கள், உரம் கடத்துவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரைக் கண்டால் மாத்திரம் முகக் கவசம் அணிகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். அவ்வாறே, பீடி பிடித்துக்கொண்டு சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர், தூரத்தில் பொலிஸைக் கண்டதும் அவசர அவசரமாக முகக் கவசத்தை அணிந்துள்ளார். இதன்போது, அவரது தாடி, மீசை தீப்பிடித்துடன், பொலிஸார், அவரை எச்சரித்து அனுப்பிய சம்பவமும் நடந்தேறியது.
பயணக் கட்டுப்பாடு, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (24) வரையான காலப்பகுதியில் 42,789 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தக் கைதுகள் அனைத்தும், பொதுமக்களும் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து நடக்கவிலை என்பதையே கட்டுகின்றன. இதனைத்தான் ‘திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ என்று 58 ஆண்டுகளுக்கு முன்னரே எம்.ஜி.ஆர் பாடல் வரிகள் மூலம் உலக்கு உணர்த்தியுள்ளார்.
எனவே, இந்தப் பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் தமது கடப்பாடு (கடமை) என்ன என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் முதல், நாட்டின் பிரஜைகள் வரை அனைவரும் உணர்ந்து நடந்தால் மாத்திரமே, ‘கொரோனாவைக் கட்டுப்படுத்தல்’ எனும் இலக்கை சரியாக அடைய முடியும்.