அருவிஆறு ( மல்வத்து ஓயா )
தேக்கம் அணைக்கட்டு அநுராதபுரத்திற்கு தெற்கே உற்பத்தியாகி மன்னாரில் கடலுடன் கலக்கும் (இதன் இன்னொரு கிளையாறு மன்னாரில் அரிப்பு என்ற இடத்தில் கடலுடன் கலக்கிறது) 164 கி. மீ நீளமான அருவியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும். அருவி ஆற்றின் நீரை இரண்டு கிளை நதிகளாக திசை திருப்புவதற்காக நீரின் வேகத்தை குறைக்கும் நோக்கில் இவ் அணைக்கட்டு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அருவி ஆற்றை இரண்டு கிளைகளாக பிரித்து வலது பக்கம் கட்டுக்கரைக் குளத்திற்கும் இடது பக்கம் அகத்தி முறிப்புக்குளத்திற்கும் நீரை திசை திருப்பி நீரின் வேகத்தை குறைத்து இவ் அணைக்கட்டை பலப்படுத்தி உள்ளனர்.
அருவிஆறு நீளத்தில் இலங்கையில் இரண்டாவது இடத்திலும், நீரோட்டத்தில் 12 இடத்தையும், மன்னாருக்கான நீர் விநியோகத்தில் 85 வீதமான பங்கையும் கொண்டுள்ளது. இவ்வருவியாறே வன்னியில் முகத்தான்குளம், மடுக்குளம், இராட்சதகுளம், பாலாவி மற்றும் கட்டுக்கரைக் குளம் போன்றவற்றிற்கு நீர் வழங்கும் பிரதான அருவியாகக் காணப்படுகிறது.
அருவியாற்றின் குறுக்கே பறையனாளன் குளத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு ஏறத்தாழ 200 மீற்றர் நீளமும், 7மீற்றர் அகலமும், 15 மீற்றர் உயரமும் கொண்டு அதுவே அருவியாற்றின் மறுகரையைக் கடந்து செல்ல உதவும் பாதையாகவும் பயன்படுத்தப்படுகிறது.இவ்வணைக்கட்டிற்கு மேற்காக குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சற்சதுரவடிவிலான மூன்று கலிங்குகள் காணப்படுகின்றன.
தேக்கம் அணைக்கட்டு நீர்வளம் கொண்ட அருவியாற்றை மறித்துக் கட்டப்பட்டமையால் வருடத்தில் கோடை காலத்தில் ஒருசில மாதங்களை தவிர, ஏனைய பெரும்பாலான காலங்களில் அணைக்கட்டிற்கு தெற்கு பக்கமாக வேகமாக நீர் வீழ்ந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இங்கு நீர் வீழ்கின்ற காட்சி மலைநாட்டில் மலைகளிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் நீர்வீழ்ச்சிகள் போல இரைச்சலுடனே காணப்படுகின்றது. இவ் அழகான நீர்வீழ்ச்சி வடஇலங்கையில் இங்கே தான் சிறப்பானதாக காணப்படுகின்றது. ஆனால் இவ் நீர்வீழ்ச்சி இங்கு உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. இப்பகுதிகளில் மக்கள் காணப்படாத அடர்ந்த காட்டுப்பகுதியாகவே காணப்படுகின்றது.
இத்தேக்கம் பிரதேசத்தை அண்மித்து பிச்சம்பிட்டி, மங்கலம்பிட்டி, நரிஇழைச்சான், பன்னவட்டுவான், உப்பன், நவிந்தமடு, கள்ளிக்குளம், பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்கள் காணப்பட்டன. ஆனால் இன்று குஞ்சுக்குளம் பெரியமுறிப்பு போன்ற கிராமங்களைத் தவிர ஏனைய கிராமங்கள் இன்று மக்கள் குடியிருப்புக்கள் அற்ற காட்டுப்பிரதேசமாகவே காணப்படுகின்றன. இக்கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பொருளாதாரமானது விவசாய நடவடிக்கைகளிலும், வேட்டையாடல் மற்றும் தேன் சேகரித்தல் போன்றவற்றில் தங்கியுள்ளது. இங்கு மான், மரை, பன்றி மற்றும் பெரிய பறவை இனங்கள் காணப்படுகின்றன.
இவ்வணைக்கட்டுடன் இணைந்த சிறிய பாறைகளுக்கு இடையே விழும் நீர் பட்டு தெறிப்படைந்து நடுவில் தீவு போல காட்சியளிக்கும் மணற்திட்டுக்களை சுற்றி இரண்டும் பக்கமும் ஓடும் நீரோட்டங்களும் அவற்றின் மத்தியில் காணப்படும் அழகான உயர்ந்த மரங்களும நீருற்றுக்குள் ஒன்று சேர்ந்து ஆறாக ஓடும். பாதையின் இரு மருங்கிலும் நீண்டு செல்லும் உயர்ந்த மணல் மேடுகளும் அருவியாற்றின் இரு மருங்கிலும் உள்ள பரிமரங்களுக்கு மத்தியில் உள்ள அழகான குழிகளும் பார்ப்போருக்கு அழகான இயற்கைக் காட்சிகளாகவே காணப்படுகின்றன.
வன்னியின் இயற்கை அமைப்பு,கனிமங்கள், காட்டுவளங்கள், இயற்கையாக ஊற்றெடுத்துப்பாயும் அருவிகள், வரலாற்றுப்பழமை வாய்ந்த குளங்கள், கால்வாய்கள், கலிங்குகள், அணைக்கட்டுகள், தொங்குபாலங்கள் என்பன அதற்குள் அடங்குகின்றன. அருவியாற்றைக் கடந்து வேட்டையாடச் செல்வோருக்கும், பொழுதைக் கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்கு காணப்படும் அழகான தொங்குபாலமும், தேக்கம் அணைக்கட்டுமே காட்டினுள் காணப்படும் ஒற்றையடிப் பாதையுமே பிரதான நடைபாதையாகக் காணப்படுகின்றது.
சமகாலத்தில் இலங்கையின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது. அவற்றுள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப்பெரிதும் கவரும் இயற்கை மரபுரிமை அம்சங்கள் நிறைந்த சிறப்புக்குரிய ஒரு இட மாகவும் தேக்கம் அணைக்கட்டு காணப்படுகின்றது. இவ்வாறு பல சிறப்பம்சங்களைக் கொண்டு காணப்படும் தேக்கம் அணைக்கட்டானது எமது அரும் பொக்கிசம் என்றே கூறலாம்.
பயண வழி
மதவாச்சி – தலைமன்னார் நெடுஞ்சாலையில் பறையனாயங்குளச் சந்தி அல்லது ஆலங்குளம் சந்தியிலிருந்து மதவாச்சி நோக்கச்செல்லும் பிரதான வீதியின் குறிப்பிட்ட தூரத்திலிருந்து வலது பக்கமாகவுள்ள கிறவல் பாதையூடாக பயணம்செய்து, பின் தேக்கம் அணைக்கட்டின் மூலம் திசைதிருப்பப்பட்ட அருவியாற்றிற்கு மேலாக கம்பியினால் தொடுக்கப்பட்ட தொங்கு பாலத்தில் பயணித்து எதிர்ப்படும் கிறவல் பாதையினூடாக சுமார் 100m வரையில் நடந்துசென்றால் இவ்வணைக்கு சென்று விடலாம். மேலும் தேக்கம் அணைக்கட்டின் மேலதிக நீர் வெளியேறும் ஆற்றுப்படுக்கையை அடைவதற்கு அங்கு காணப்படும் அதர் வழியாக நடந்துசெல்ல வேண்டும்.
நன்றி :
பொ.வருண்ராஜ் & பரமு புஷ்பரட்ணம் வலைப்பூவில் இருந்து தகவல்கள் இணையத்தில் தமிழில் கிடைத்த தரவுகளில் இருந்து தொகுத்து இருக்கின்றேன்.