பொருட்களிற்கான தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் ஒருபுறம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, அரசியல் பிரதிநிதிகளின் பட்டங்கள் மற்றும் பட்டடிப்பின் படிப்புக்கான கல்வித் தகைமைகள் இப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாத ஒரு சூழலில் கிட்டத்தட்ட முழு என்.பி.பி. அரசாங்கமுமே தலைகுனிவைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இதனை விதி என்று சொல்வதை விட தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அதிமேதாவித்தனத்தின் விளைவு என்றே கூறலாம்.
முட்டை விலை அதிகரிப்புத்தான் முதலில் ஒரு சிக்கலாக உருவெடுத்தது. பிறகு அரிசி தட்டுப்பாடு, தேங்காய் விலை அதிகரிப்பு என பல பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டு, அரசாங்கத்தின் ஆற்றலை உரசிப் பார்த்தது.
எந்த அரசாங்கம் பதவிக்கு வந்திருந்தாலும் பிரச்சினைகள், சவால்கள் வந்திருக்கும். இவற்றுள் நடைமுறையில் இயற்கையாக எழுகின்ற சவால்களும் உள்ளன.
அரசியல் மற்றும் வியாபார மாபியாக்களினால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்படுகின்ற பொருட் சந்தை நெருக்கடிகளும் உள்ளன.
ஆயினும் சாதாரண மக்கள், சந்தைக் காரணிகளைப் பற்றி பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை.
அவர்களது எதிர்பார்ப்பு எல்லாம் ஜனாதிபதி அனுர மற்றும் அக்கட்சியின் வேட்பாளர்கள் கூறியவாறு விலைக் குறைப்புக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆகும்.
ஆனால், நடைமுறை யதார்த்தங்கள் வேறுமாதிரியாக இருக்கின்றன.
தேர்தல் மேடைகளில் எதனை வேண்டும் என்றாலும் கூறலாம். அதிகாரக் கதிரையில் அமர்ந்த பிறகுதான், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களை எந்தவொரு அரசாங்கமும் கண்டு கொள்ளும். அந்த நிலையிலேயே இப்போது அனுர அரசாங்கம் உள்ளது.
விலைத்தளம்பல்கள், பொருட் தட்டுப்பாடுகள் வழக்கமானவையே. ஆனால், வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் எதிர்கொண்டிராத ‘கல்வித் தகைமைசார்’ நெருக்கடிகளையும் சிக்கல்களையும் புதிய அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
அரசியல் அரங்கில் இது பெரும் தலைகுனிவையும், சீரழிவையும் ஏற்படுத்தியிருக்கின்றது. சபாநாயகர் அசோக ரண்வலவின் கலாநிதிப் பட்டம் தொடர்பிலேயே ஆரம்பத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டது. முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகியோர் சபாநாயகரின் கலாநிதிப் பட்டத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பகிரங்கமாகவே கோரினர்.
முதலில் தனது கலாநிதிப் பட்டம் உண்மையானது என்று அசோக ரண்வல கூறியிருந்தாலும் அதனை அவர் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. பாராளுமன்ற இணையத்தளத்தில் இருந்து அவரது பெயருக்கு முன்னால் காணப்பட்ட ‘டொக்டர்’ என்ற பட்டம் நீக்கப்பட்டது. இது, தவறு நடந்திருப்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்வதாகவே கருதப்பட்டது.
உண்மையில் தனக்கு செல்லுபடியாகும் கலாநிதிப் பட்டம் இருக்கின்றது என்றால் அதற்கான சான்றிதழை அசோக ரண்வல பகிரங்கமாக சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அவர் மீது மட்டுமன்றி என்.பி.பி. அரசாங்கம் மீதும் இந்தக் கறை படியாமல் தடுத்திருக்கலாம்.
தே.ம.ச அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதாக கூறியே இரண்டு தேர்தல்களிலும் வரலாற்று வெற்றியைப் பெற்றது. உண்மையில் ஜனாதிபதி உள்ளிட்டோர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இரவும்பகலும் உழைத்துக் கொண்டிருந்தாலும், பட்டம் தொடர்பான விவகாரம் தேவைற்ற ஒரு தடங்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.
புதிய முகங்களை மட்டுமன்றி, நன்கு படித்தவர்களையும் களமிறக்கியுள்ளதாக என்.பி.பி. கூறியது. இவர்களது வைத்திய கலாநிதி, முதுமாணி, துறைசார் கலாநிதி, பட்டப் படிப்புகள் பெரும்பாலும் ஒரு பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன. அது முற்றாக தவறு என்றும் கூற முடியாது.
பல வைத்தியர்கள், கலாநிதிகள், துறைசார் வல்லுனர்களும் என்.பி.பி. ஊடாக இந்த முறை பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றார்கள். ஆனால், இந்த பட்டச் சர்ச்சைகளையடுத்து, இவர்களில் யார் யாருடைய பட்டங்கள் உண்மை என்ற சந்தேகம் இப்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
சபாநாயகர் இராஜினாமாச் செய்தது ஒருபுறமிருக்க மேலும் பலரது பட்டங்களும் போலியானவை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்ற இணையத்தள தரவுப் பதிவேற்றத்தில் ஓரிருவரது தரவுகளை உட்சேர்க்கும்போது தவறு இடம்பெற்றதாகவும் ஒரு கதை கூறப்படுகின்றது. அது உண்மையென்றாலும், அது ஓரிருவக்கே நடந்திருக்கலாம்.
உண்மையாக பட்டம் பெற்றவர்கள் மட்டுமன்றி போலி கலாநிதிகளும் தேர்தல் காலங்களில் தங்களை பொறியியலாளர் என்றும், வைத்திய நிபுணர் என்றும், பட்டதாரி என்றும், முதுமாணி மற்றும் கலாநிதி என்றும் கூறிப் பிரசாரம் செய்தனர்.
இந்தப் பின்னணியில்தான் அமைச்சர் கருணாதிலக, கோசல ஜயவீர, தனுர, றிஸ்வி சாலி என இந்தப் பட்டியல் இப்போது சமூக வலைத்தளங்களில் நீளத் தொடங்கியுள்ளது. பல போலிப் பட்டதாரிகள், கலாநிதிகள் அவர்களாகவே தமது பெயர்களுக்கு முன்னால் இருந்த பட்டங்களை நீக்கியுள்ளனர்.
ஏன் நமக்கு இந்த வம்பு என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் பட்டத்தை, தகைமையைச் சொல்லி மக்களை ஏமாற்றியது யாராக இருந்தாலும் அது மன்னிக்க முடியாத மோசடியாகும்.
பாராளுமன்றத்தில் இதற்கு முன்னர் சண்டியர்கள், சட்டவிரோத வியாபாரிகள், குற்றமிழைத்தவர்களும் எம்.பி.யாக இருந்திருக்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் 94 பேர் சாதாரண தரம் சித்தியடையாதவர்களாகவும் 100 இற்கு மேற்பட்டோர் உயர்தரம் சித்தியடையாத எம்.பி.க்களாகவும் இருந்தனர்.
அதேபோல் கடந்தகாலத்தில் மஹிந்த ராஜபக்ச போன்றோருக்கு கௌரவ கலாநிதி பட்டங்கள் வழங்கப்பட்டமை, நாமல் பட்டம் பெற்றமை முதல் பல விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், அவர்கள் தாம் கலாநிதிகள் என்று பிரசாரம் செய்த ஞாபகம் இல்லை.
மறுபுறத்தில், எம்.பி.யாகவோ சபாநாயகராகவோ வருவதற்கு கலாநிதிப் பட்டம் கட்டாயமும் இல்லை. இந்த நிலைமையில், அதனைப் போலியாக காண்பித்து மக்கள் ஆணையைப் பெற்றமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
வெளிநாட்டில் பணத்தைச் செலுத்தி குறுகிய காலத்தில் இளமானி பட்டத்தை மட்டுமன்றி கலாநிதி பட்டத்தையும் பெறக் கூடிய வசதியும் உள்ளது.
மிக சிரமப்பட்டு கற்று முடிக்க வேண்டிய கற்கையை பணத்திற்காக விற்பனை செய்கின்ற மாபியாவுக்கு அரச அங்கீகார தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.
இதற்கெல்லாம் முடிவுகட்டி, மாற்றத்தைக் கொண்டு வரப் போவதாக கூறியவர்களே தமது தகைமைகளை தமக்கு விரும்பியது போல மாற்றியமைத்திருக்கின்றார்கள் என்பதையும்,அதனை என்.பி.பி. கட்சியோ தேர்தல்கள் ஆணைக்குழுவோ, பாராளுமன்ற அலுவலகமோ சரிபார்த்து உறுதிப்படுத்தவில்லை என்பதையும் நாட்டு மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இலங்கையில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. வைத்திய துறையிலேயே இந்த நிலைமை என்றால் பொறியியல், கனிய அளவையியல் (கியு.எஸ்), இளமானிப் பட்டம், டிப்ளோமா மற்றும் என்.வி.கியு. என ஏனைய துறைகளில் எத்தனையாயிரம் போலி சான்றிதழ்கள் உலவுகின்றன என்பதை கணக்கிடவே முடியாது.
இது மக்கள் ஆணையோடும், ஜனநாயகத்தோடும் விளையாடுகின்ற செயலாகும்.
ஆட்சி அதிகாரத்தையும், எம்.பி. பதவியையும் பெறுவதற்காக தாம் கல்வித் தகைமையில் உயர்ந்தவர்கள் என்றும் கலாநிதிகள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பட்டதாரிகள் என்றும் அதனால் தமக்கு அறிவும் ஆற்றலும் அதிகமிருப்பதாகவும் மக்களை நம்பவைத்து ஏமாற்றிய குற்றத்திற்கு, பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவதாகக் கூறிய தே.ம.சக்தி அரசாங்கம் எவ்வாறு பரிகாரம் தேடப் போகின்றது என்றுதான் மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜே.வி.பி. கட்சியை நம்பியும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்கள் இந்தளவுக்கு வாக்களிக்கவில்லை.
இந்த நாட்டு மக்கள் பிரதானமாக நம்பியது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவையேதான் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதிக்கு இதில் பாரிய பொறுப்புள்ளது. போலி பட்டங்களை பயன்படுத்திய ஆளும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பதவி விலகுவதுடன், அவ்வாறான பட்டங்களைப் பிரசாரம் செய்து தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களும் மக்களை ஏமாற்றிய குற்றத்திற்காக சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.
அப்படி செய்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவாவது தன்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கொஞ்சமாவது காப்பாற்றிக் கொள்ளலாம். இந்தக் கறையை கொஞ்சம் கழுவலாம். இல்லாவிட்டால் பட்டப் பிரச்சினை பதவிகளை மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆட்சியையும் ஆட்டக் காணச் செய்யலாம்.