பட்டைக் கொடி பிடித்து, கிணத்து மிதியடியில் நின்று தண்ணி இறைப்பது சோமர். பெரிஐயா பயிர்களுக்கு அளவாகத் தண்ணி விட்டு பாத்திகட்டுவார். கட்டையர், சோமர் போன்றவர்களை, ஊரிலுள்ள ஒவ்வொரு கமக்காரர்களும், பட்டை இறைப்புக்காகத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள். அநேகமாக பெரிஐயா அதிகாலை இறைப்பையே விரும்புவார். இறைப்பவர்களுக்கு அதிகாலையில் களைப்புத் தெரியாது. பெரிஐயா நாலுமணிக்கு எழும்பி, வீட்டு முற்றத்தில் நின்று உரத்துக் ‘கூ…’ என்பார். கட்டையரும் சோமரும் பதிலுக்குக்; ‘கூ…’ என்பார்கள். அலை பேசியில்லாத அந்தக் காலத்தில் ‘கூ…’ தான், அவர்களின் தகவல் பரிமாற்றத்துக்கான சாதனம்.
பெயர்தான் கட்டையரே தவிர அவர் உருவத்தில் கட்டையில்லை. திடகாத்திரமான நெடிய உடம்பு. இப்பொழுதெல்லாம் ‘Four pack, six pack’ உடம்புக்காக இளஞர்கள் ஜிம்முக்கு அலைவார்களே…? கட்டையர் ஜிம்முக்கு போகாமலே வரகும், குரக்கனும், சாமையும் சாப்பிட்டு அத்துடன் உடல் உழைப்பும் சேரவே அவருக்கு ‘six pack’ உடம்பு தானாகவே வந்தது. அவர் கறுப்பென்றாலும் மினுமினுத்த கறுப்பு நிறம். விதி வசத்தால் அவர் இலங்கையில் பிறந்தார். மேலைத் தேசத்திலென்றால், வெள்ளைக்காரிகள் மத்தியியில் அவர் நல்ல மவுசுடன் வாழ்ந்திருப்பார்.
யாழ் குடாநாட்டில் தோட்டங்களுக்கு அருகே அண்ணமார், வைரவர், புதிராயர், வீரபத்திரர் போன்ற ஏதோவொரு சுவாமிக்கு கோயிலிருக்கும். எண்பதாம் ஆண்டுகள் வரை இச்சுவாமிகள் கல்லாக, மரத்தின் கீழ் மழையில் நனைந்தோ அல்லது ஓலைக் கொட்டிலிலோ குடியிருந்தார்கள். வருடத்துக்கு ஒருமுறை, அறுவடை காலங்களில் பொங்கலோ பூசையோ இக் கோவில்களில் நடைபெறும். கூடுதலாக அண்ணமார் கோயில்களிலே காத்தவராயன் கூத்தும் நடைபெறும்.
கைதடியில் காத்தவராயனாக வேஷம் கட்டுவது எங்கள் கட்டையரே. அவரிடமிருந்த நடிப்பாற்றல், பாடும் திறனெல்லாம் பெரியையாவுக்கு துலாமிரித்ததில் தொலைந்து போனதோ எனப் பிற்காலத்தில் நான் நினைத்ததும் உண்டு. இப்பெழுதெல்லாம் இந்த உபரிச்சுவாமிகள் ‘இன்னாரின் உபயம்’ என்ற பெயர் விலாசத்துடன், வெளிநாட்டுக் காசில், கோபுரத்துடன் கூடிய வர்ணக் கட்டிடங்களில், தினப் பூசைகள் கண்டு சுகமாக வாழ்வது தனிக் கதை.
வரைபடம்: துலா, கிணறு
படம் 1: இறைப்புப் பட்டை, படம் 2: தண்ணி வார்க்கும் பட்டை