“ஒரே ஸ்வதந்த்திரயம், ஒரே சமீபனம்” என்ற பெயரில் கேரள அரசு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரள அரசின் இத்திட்டத்திற்குத்தான் தற்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இத்திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகக் கூறியுள்ளது. மேலும் பள்ளியில் கற்பிக்கும் பெண் ஆசிரியைகளின் உடையை மாற்றாமல் இருக்கும்போது, மாணவிகளின் ஆடைகளை மட்டும் மாற்றுவதா? ஏன் மாணவர்களின் உடையை மாணவிகளிடம் வற்புறுத்துகிறீர்கள் என்று முஸ்லீம் லீக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து, “பாலியல் சமத்துவத்தில் முன்னேற்றத்துக்கான முயற்சி. தங்கள் குழந்தைகளை யார் விரும்புகிறார்களோ அவர்கள் இந்த முற்போக்கு முயற்சியை எதிர்க்க மாட்டார்கள். இதை எதிர்ப்போர், கேரளாவின் நலனுக்கு எதிரானவர்கள்” என்று பதிலளித்துள்ளார்.
இந்தத் திட்டம் முதல் கட்டமாக கோழிக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 260 மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 60 பேர் மட்டுமே மாணவர்கள், 200 பேர் மாணவிகள்.
கேரள அரசு கொண்டுவந்துள்ள இத்திட்டத்துக்கு அம்மாநில நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாலின சமத்துவத்தைக் கொண்டுவரும் நடவடிக்கை என்றுபலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் “ஒரே ஸ்வதந்த்திரயம், ஒரே சமீபனம்” திட்டம் குறித்து தமிழக கல்வி ஆர்வலர்கள் என்ன கூறுகிறார்கள்? என்று சிலரிடம் பேசினோம்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:
”காலநிலையும், நில அமைப்புமே ஆடைகளைத் தீர்மானிக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ராஜஸ்தானில் இருப்பவர்கள் வெப்பம் காரணமாக அதற்கு ஏற்றாற்போல் உடை அணிகிறார்கள், காஷ்மீரில் இருப்பவர்கள் குளிர் காரணமாக அதற்கேற்ப உடை அணிகிறார்கள். தமிழகத்தில் இருப்பவர்கள் அனைத்து விதமான உடைகளையும் அணிகிறார்கள். எனவே உடை என்பது அவர்கள் வாழும் பருவநிலையைப் பொறுத்தே அணியப்படுகிறது.
அடுத்தது நமது வசதிதான் நமது உடையைத் தீர்மானிக்கிறது. என் வசதிக்குத்தான் நான் ஆடை அணிகிறேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் ஆடை அணிவதில்லை. எனக்கான ஆடையைத்தான் நான் அணிந்து கொள்கிறேன்.
பள்ளிக் கூடத்தில் மாணவ, மாணவியருக்கு சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்துதான் முக்கியமானது. அதுதான் ஜனநாயகமான முடிவாக இருக்கும். இரண்டாவது பேண்ட், சர்ட் என்பது உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் அணியும் ஒரு உடை. ஆண், பெண் இருவர் பேண்ட், சர்ட் அணிவது அவர்களது வசதியைப் பொறுத்தது.
அதனை வசதியில்லை என்று நீங்கள் கூறினால் அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும். எல்லாவற்றையும்விட பள்ளிச் சீருடை என்பது பார்வைக்கானது அல்ல. அரசு கொண்டுவந்துள்ள இந்தத் திட்டத்தில் உங்களுக்கு உண்மையில் முரண்பாடு இருந்தால் அது என்ன முரண்பாடு என்பதை விளக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த உடை நிச்சயம் மாணவ, மாணவியருக்கு வசதியானதுதான்.
கேரள அரசின் இந்தத் திட்டம் குழந்தையைக் குழந்தையாகப் பாருங்கள், மாணவர்களை மாணவர்களாகப் பாருங்கள் என்றுதான் வலியுறுத்துகிறது. உடை அணிபவர்கள்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். கேரள அரசின் இந்தத் திட்டம் சாதி, மதம், பாலின வேறுபாடில்லா சமத்துவமான சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது” என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.
சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா:
”என்னைப் பொறுத்தவரை ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாகத்தான் உடை இருக்க வேண்டும். இதனை முதலில் வலியுறுத்தியர் பெரியார்தான். இதனைக் கட்டாயச் சட்டமாக மாற்றினால் கூட நான் வரவேற்பேன். கேரள அரசு கொண்டுவந்துள்ளது அருமையான விஷயம். யாருக்கும் பயந்து அவர்கள் பின்வாங்காமல் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஆக்கபூர்வமான விஷயத்தை வைத்தால் அதனைப் பரிசீலனை செய்யலாம். ஆனால், விதண்டாவாதமாக எதிர்த்தால் தவறு. இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஆண்கள் அடையும் ஆடைதான் வசதியானது. அவ்வாறு இருக்கையில் அந்த ஆடையைப் பிற பாலினத்துக்குக் கேட்பது அறிவுடைமையே” என்று ஓவியா தெரிவித்தார்.
ஆசிரியர் உமா மகேஸ்வரி
”இந்தத் திட்டத்தில் எனக்கு முரண்பாடு உள்ளது. சீருடை என்பதே அனைவருக்கும் சமமான உடைதான். உடை மூலமாக மட்டுமே பாலின சமத்துவம் நிகழ்ந்துவிடாது. பாட வழிமூலமாகவும், உரையாடல் மூலமாகவும்தான் பாலின சமத்துவம் ஏற்படும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
அதுமட்டுமல்லாது இம்மாதிரியான ஆடைகள் நகரத்துப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். கிராம மாணவர்களுக்கு இதில் சிரமம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் அணியும் உடை கண்ணியமாக இருக்க வேண்டும். அது இருவருக்கும் சமமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை” என்று உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
கல்வியாளர் வசந்தி தேவி:
”ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இருவருக்கும் ஒரே மாதிரியான் ஆடை கொடுப்பதை நான் வரவேற்கிறேன்.
ஆடை மாற்றம் மட்டுமே பாலின சமத்துவத்தைக் கொண்டுவராது எனினும், பாலின சமத்துவத்துக்கான ஒரு படியாக இது இருக்கும். நிச்சயம் பழமைவாதிகள் இத்திட்டத்தை எதிர்ப்பார்கள்தான். ஆனால், வளரும் குழந்தைகளுக்குப் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு இதன் மூலம் உண்டாகும். கேரள அரசின் திட்டத்தை நான் வரவேற்கிறேன். தமிழகத்திலும் இதனைச் செயல்படுத்தினால் நிச்சயம் எனது ஆதரவு உண்டு” என்று வசந்தி தேவி தெரிவித்தார்.
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கேரள அரசின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது. பள்ளிப் பருவத்திலிருந்தே பாலின சமத்துவம் குறித்தான புரிதல் உண்டாக இந்த ஆடை மாற்றம் நிச்சயம் உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.