2016-ஆம் ஆண்டு தான் நான் முதன்முதலில் மணல்மகுடி என்றொரு நாடகக்குழு இருப்பதாகவும், அவர்கள் தொன்மங்களிலிருந்தும் நாட்டார்வியலில் இருந்தும் தங்கள் படைப்புகளை உருவாக்குவதாகவும் கேள்விப்பட்டேன். அக்குழுவின் மீது அதீத ஆர்வம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது, அதன் இயக்குனராக இருக்கும் முருகபூபதியின் தாத்தா ‘மதுரகவி பாஸ்கரதாஸ்’, நாடக உலகில் தழைத்தோங்கியிருந்த பிராமணியத்தை எதிர்த்து, பிராமணர் அல்லாதோரையும், நடிப்பில் முறையான பயிற்சி இல்லாதவர்களையும் வைத்து நாடகங்கள் இயற்றியதாக சொல்லப்பட்டதும் தான். இந்த ஆர்வம் தான் என்னை கோவில்பட்டிவரை சென்று அவர்கள் ‘நாடகநிலத்தை’ பார்க்கத் தூண்டியது.
.ஆனால் நான் அங்கு சென்று பார்த்தவை அனைத்துமே நான் எதிர்பார்த்து சென்றதற்கு நேர்மறையாக இருந்தது. அனைவருமே முருகபூபதியை ‘அண்ணா’ என்றே விழித்தார்கள். அவர் சிறு மேட்டில் அமர்ந்திருந்தால், நடிகர்கள் அனைவரும் அவருக்குக் கீழே பணிவுடன் அமர்ந்திருப்பர்.சமுத்துவத்தை முன்னிலைப்படுத்தும் நாடகங்களை இயக்குபவர், தனது குழுவிற்குள் ஏற்றத்தாழ்வுகளுடன் நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பயணத்தின்பொழுதுதான் அங்கிருந்த நடிகர்கள் பலருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பான்மையான நடிகர்கள் முருகபூபதியை ஓர் ஆசானாகவே வழிபட்டனர், ஆனால் அவர்கள் நாடகம் எதைப் பேசுகிறது, அதுகுறித்த தங்களது பார்வை, கதை உருவாக்கத்தில் தங்களுக்கான பங்கு என்ன என்பவை குறித்து பெரிதும் அறிந்திறாதவர்களே இருந்தனர். அவற்றைக் குறித்து நான் சந்தேகம் எழுப்பியபொழுது கூட, அவர்கள் மணல்மகுடிக்கும், அதை இயக்கிக்கொண்டிருந்தவர்களுக்கும் ஆதரவாகவே பேசினர். அவர்கள் நாடகங்களில் வரும் சமூகம் எந்த காலகட்டத்துடையது? முருகபூபதி கூறும் ‘ஆதி நிலம்’ எத்தகையது? சாதியும் ஆணாதிக்கமும் கரைபுரண்டோடும் நிலமா? அவர் படைக்கும் மூதாய் என்பவள் யார்? பால் பேதமற்ற சமூகத்தின் அங்கமா அவள்? யாரிடமும் விடை கிடையாது.
2017-ஆம் ஆண்டு மீண்டும் அவர்களைச் சந்தித்தேன். இம்முறை அவர்களின் நாடக நிலத்திற்கு வெளியே – திருச்சூர் நாடகவிழாவில். நடிகர்களில் பலர் அடிக்கடி தனியே கூடிக்கூடி ஏதோ பேசிக்கொண்டே இருந்தனர். ஏதோ பெரிய பிரச்சனை என்பது தெரிந்தது. அப்பொழுது மணல்மகுடியில் நடித்துக்கொண்டிருந்த நண்பர் ஒருவர், தன்னிடம் கோணங்கி தவறான முறையில் நடந்துகொண்டதாகவும், அதை எப்படி வெளியே சொல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபொழுது, அத்தகைய அத்துமீறல்கள் அங்கிந்த மற்ற சில நடிகர்களுக்கும் நடிந்திருப்பதை அப்பொழுது தான் தெரிந்துகொண்டதாகவும், அதை பூபதியிடம் சென்று முறையிடப்போவதாகவும் சொன்னார்.
அடுத்தடுத்த நாட்களில், அவர்கள் கூடிப் பேசி, அதை பூபதியிடமும் எடுத்துச் சென்றனர். ஆனால் அவரோ, இன்று போல அன்றும், தனக்கு இதைக்குறித்து எதுவுமே தெரியாது என்றும், தெரிந்திருந்தால் இவர்களை எப்படியாவது காப்பாற்றியிருப்பேன் என்றும் நடித்தார். அன்றைய நிலையில், அனைவருமே அதை உண்மை என்றே நம்பினர். இந்த முறை மட்டும் கோணங்கியை மன்னித்து விட்டுவிடுவதாகவும், மீண்டும் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்ள பூபதி இருக்கிறார் என்ற நம்பிக்கையுடனும் அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதன்பிறகு அவர்களை நான் சந்திக்கவில்லை என்றாலும் வெவ்வேறு தரப்புகளில் இருந்து அவ்வப்பொழுது கோணங்கியின் அத்துமீறல்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கும். என் நண்பர்கள் 3 பேர் இவரால் பல இன்னல்களுக்குள்ளானது மட்டுமல்லாமல், நிம்மதியிழந்து, கலை மீதான ஆர்வம் இழந்து, உளவியல் ரீதியாக பாதிப்படைந்து, வாழ்க்கை மீதே வெறுப்புறும் நிலைக்குத் தள்ளபட்டனர். ஆனால் இவர்கள் அனைவருமே இதில் இருந்து மீண்டுவருவதற்காகப் போராடிக்கொண்டிருந்ததால், இந்த பிரச்சனையை மேலும் வளர்த்தெடுக்க விரும்பாமல், மணல்மகுடியில் இருந்து வெளியேறினர்.
ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது, பாதிக்கப்பட்டவர்கள் என் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல என்று! இழைக்கப்பட்ட அநீதிக்காகக் குரல் கொடுக்கும்பொழுது, மீண்டும் அவர்களின் குரல்களை நசுக்கப்பார்ப்பதா கலை? அதையா உங்கள் இலக்கியங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது? வைரமுத்துவிற்கு ஒரு நிலைப்பாடு, பூ.கோ.சரவணனிற்கு வேறு நிலைப்பாடு, கோணங்கிக்கு ஒரு நிலைப்பாடு என்று…அனைவருமே அவரவர் சார்பு நிலை சார்ந்தே இயங்குவது மேலும் வேதனை அளிக்கிறது.
விகடனில் வெளிவந்திருக்கும் பேட்டியை அனேகமாக கோணங்கியே கைப்பட அச்சடித்துக் கொடுத்திருப்பார் போல. தான் தான் மணல்மகுடிக்கு அவ்வப்பொழுது பொருளாதார உதவி செய்ததாகக் கூறுகிறார். இது தான் ஒரு typical abuser-இன் குணம். தங்களை என்றுமே ஒரு ரட்சகராக/ஆசானாக/காவலராக நிறுவிக்கொள்வர்.
அவர்கள் பிடியிலிருந்து தப்பிவிடமுடியாக கம்பிவளைகளைப் பிண்ணிக்கொண்டே இருப்பார்கள், அவர்கள் உறவுகளையும் தங்கள் உறவாக மாற்றிக்கொள்வார்கள். grooming என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்- பாதிப்புக்குள்ளாபவர்களின் செயல்கள், எண்ணங்கள் எல்லாவற்றையும் இவர்களுக்கேற்றவாறு வடிவமைப்பர்.
இது தான் இங்கும் நடந்துள்ளது. பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்டு கொண்டே, தன்னைப் பெரும் இலக்கியவாதியாகவும், அண்ணனாகவும், குருவாகவும், நலன்விரும்பியாகவும் அவர்களை நம்ப வைத்தது.
பாலியல் துன்புறுத்தல்களுக்கும் வன்புணர்வுகளுக்கும் ஆளாகும் அனைவரிடமும் முன்வைக்கும் முக்கியமான கேள்வி – ‘ஏன் இப்பொழுது?’.
தான் அத்துமீறப்பட்டோம் என்பதை நம்மிடம் ஒத்துக்கொள்வதற்கே மனிதமனம் தடுமாறும். அதை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்வது அதைவிடக் கடினம். மேலும், பாலியல் கல்வியற்ற நமது சமூகத்திடம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்துவது அதனிலும் கடினம். 30-40 இளைஞர்கள் பாதிப்புக்குள்ளானதாகப் புகார் அளிக்கும்பொழுதே அதை நம்ப மறுக்கும், அதிகாரம் கொண்டு ஒடுக்க முயலும் இந்த சமூகத்திடம், தன்னிடம் ஒரு எழுத்தாளர் அத்துமீறினார் என்று எப்படி சொல்ல முடியும்?
இத்தகைய கொடுஞ்செயல்களுக்கு ‘கலைப்பித்து’ என்று முட்டுக்கொடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் ‘ பெண்ணியவாதிகள் எங்கே?இதுவே பெண் களுக்கு நடந்திருந்தால் பேரணியே நடந்திருக்கும் என்று வசைபாடும் அபிலாஷ் போன்ற ஆணியவாதிகள் மறுபுறமும் இப்பிரச்சனையை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், செய்ய வேண்டியது என்ன?
- விசாரணை குழு அமைத்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்களிடம் கோணங்கி பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
- ஆண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல்- அவர்களையே மேலும் மேலும் குறை சொல்வது, ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டுமே தெரிந்த மணல்மகுடியை அழிக்க நினைக்கும் செயல் என்று நீலிக்கண்ணீர் வடிப்பது, கலைஞன் என்றாலே அப்படித்தான் என்று முட்டுக்கொடுப்பது, கோணங்கி என்னும் கலைஞனை கொலை செய்துவிட்டீர்கள் என்று கூச்சலிடுவது… இத்தகைய செயல்களை விட்டுவிட்டு, உண்மையாகவே இலக்கியம் எதையாவது கற்றுக்கொடுத்திருக்கிறது என்றால், அது அறத்தின் பக்கம் நிற்பதுதான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்! //
Via Charu Ravichandran