கலாநிதி சி. ரகுராம், 2016 தொடக்கம் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். இதற்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும், வளாகத்தின் பதில் முதல்வராகவும் அவர் கடமையாற்றியிருக்கிறார்.
இவர் தனது கலாநிதிப் பட்டத்தை கொமன்வெல்த் புலமைப்பரிசிலுடன் அபிவிருத்தித் தொடர்பாடல் துறையில் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – இந்தியாவிலும், முதுகலைமாணிப் பட்ட மேற்படிப்பை இதழியியல் மற்றும் வெகுசனத் தொடர்பாடலிலும், காட்சித் தொடர்பாடலில் இளவிஞ்ஞானமாணிப் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் லொயாலோ கல்லூரியிலும் நிறைவுசெய்துள்ளார்.
கல்விசார் வாழ்விற்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒரு பல்துறைசார் ஊடகவியலாளராகவும் அவர் முக்கிய பல பொறுப்புக்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறைகளில் பத்து வருடங்களுக்கும் அதிகமாக வகித்திருக்கிறார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடமானது ஏனைய பீடங்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிக அதிகமான துறைகளையும் பட்டப்படிப்பு மாணவர்களையும் கொண்டது. இக்கலைப்பீட கற்கை நெறிகள் மானிடவியல் பாடநெறிகளாகும். மானிடவியல் பாட நெறிகள் அந்தந்த சமூகங்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களின் அடிப்படையில் சமூக மேம்பாடு, முன்னேற்றம், எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இந்த 21ம் நூற்றாண்டை இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார ஆய்வுகளையும் மேற்கொண்டு தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவில்லை. கைலாசபதி, சிவத்தம்பி போன்ற ஆளமைகளுக்குப் பின் அங்கு கலைத்துறையில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது.
பல்கலைக்கழகம் என்பதற்கு மாறாக ஒரு பெரிய பள்ளிக்கூடம் போன்ற பாணியிலேயே கலைப்பீடம் இயங்கி வருகின்றது. இங்குள்ள விரிவுரையாளர்களுடைய ஆய்வுகள் பட்டப்படிப்புக்கு வரும் பெண்களின் இயல்புகளை ஆய்வதிலேயே இருந்தது. இவ்விளம் பெண்களுடைய பலவீனங்களை அடையாளம் கண்டு யாரெல்லாம் தங்களுடைய இச்சைகளுக்கு மசிய வைக்கலாம் என்று பார்த்து அவர்களை வேட்டையாடுவதிலேயே கவனம் குவிந்து இருந்தது. அதனால் திறமையான மாணவிகள், மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டு விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டனர். சில பத்து ஆண்டுகளாக இந்தக் கலைப்பீடம் இதே பாணியில் இயங்கியதாலும், அங்கு ஒரு சீரான தலைமைத்துவம் இல்லாததாலும் கலைப்பீடத்தில் இருந்து பட்டம்பெற்று வெளியேறும் பட்டதாரிகள் செல்லாக் காசாக ஆக்கப்படுகின்றனர்.
கலைப்பீடத்தின் சீரழிவான கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டவர்கள் தான் வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக, அதிபர்களாகச் செல்கின்றனர். இப்பட்டதாரி ஆசிரியர்களும் அதிபர்களும் தங்களுடைய தொழில் பண்புகளில் பின்னிலையிலேயே உள்ளனர். அதனால் வடக்கு கிழக்கின் கல்வியில் கடந்த சில பத்து ஆண்டுகளாகவே பாரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்தச் சீரழிவுக் கலாச்சாரம் முன்னாள் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளையின் காலத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்டு இன்று கலைப்பீடம் சில விரிவுரையாளர்களினால் அந்தப்புரம் ஆக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளையுடைய ஆசீர்வாதத்தினால் மாவிட்டபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தின் மலரில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு துணைவேந்தரான பேராசிரியர் சண்முகலிங்கன், குருவை மீறாத சிஷ்யனாக தானும் அந்தப்புர சிற்றின்பங்களில் திளைத்து வந்தார். அன்றைய காலகட்டத்தில் இவற்றை அம்பலப்படுத்திய தேசம்நெற் இணையத் தளம் சண்முகலிங்கன் மீளவும் துணைவேந்தராக தெரிவு செய்யப்படக்கூடாது என்றும் கண்ணியத்துக்கும் நிர்வாகத்திறனுக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டான பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் தீவிரமான அழுத்தங்களை வழங்கியது. அதனைத் தொடர்ந்து அன்றும் அமைச்சராக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா ஹூல் உடன் இருந்த முரண்பாடுகள் காரணமாக வசந்தி அரசரட்ணத்தை துணைவேந்தராக்கினார். வசந்தி அரசரட்ணத்தின் தெரிவு பெண்களுக்கு யாழ் பல்கலையில் இழைக்கப்பட்ட அநீதிகள் தீவிரமாகாமல் தடுத்தது. ஆனால் அதனை முற்றாக தடுக்வோ குறைக்கவோ முடியவில்லை.
இப்போது கலைப்பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உண்மையிலேயே அவருக்கு எதிராக கிறிஸ்தவத் துறைசார்ந்த வண பிதா ஒருவர் போட்டியிட விண்ணப்பித்து இருந்ததாகவும் அவர் இறுதி நேரத்தில் அவர் தனது விண்ணப்பத்தை மீளப்பெற்றுவிட்டதாகவும் அல்லது மீளப்பெறவைக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபது ஆண்டுகள் கடமையில் இருந்த காலத்தில் 24 பாலியல் வன்புணர்வு உட்பட 49 பாலியல் குற்றங்கள் இழைத்ததை ஜனவரி 16 2023 அன்று ஒருவர் ஒத்துக்கொண்டுள்ளார். இவர் சட்டங்கள் எதுவும் செய்ய முடியாத பாலியல் துஸ்பிரயோகம் மலிந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்தவரல்ல. அவ்வாறு ஒருவரை சட்டத்தின் முன் கொண்டுவர யாழ் பல்கலைக்கழகத்திற்கு இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆகலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு பற்றியும் நீதி பற்றியும் தம்பட்டம் அடிக்கும் பிரித்தானியாவிலேயே அதுவும் பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள லண்டன் வெஸ்ற் மினிஸ்ரரில் கடமையாற்றிய துப்பாக்கிப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி டேவிட் கிரெக் என்பவரே 20 ஆண்டுகள் கடமையில் இருந்த கொண்டு இந்தப் பாலியல் கொடுமைகளைச் செய்துள்ளார்.
இவன் பெண்களை நிர்வாணமாக தன்னுடைய வீட்டில் உள்ள அலுமாரியிலும் பூட்டி மணித்தியாலங்கள் அடைத்தும் வைத்துள்ளார். அவர்களை நிர்வாணமாகவே தனது வீட்டைத் துப்பரவு செய்யவும் வைத்துள்ளார். இக்காமுகனைப் பற்றிய விபரங்கள் பொலிஸாருக்கு தெரிந்திருந்தும் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி கரிசனை கொள்ளவோ அவர்களை நம்பவோ யாரும் முயலவில்லை. அதனால் அக்காமுகன் 20 ஆண்டுகள் தன்னிடம் அகப்பட்ட பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தி உள்ளான். இக்குற்றங்கள் இழைக்கப்படுவதற்கு கூட இருந்தவர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்துள்ளனர்.
பாலியல் கொடுமுகன் டேவிட் கிரெக்குக்கும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். பாலியல் கொடுமைகளைப் புரிவது எவ்வளவு கொடுமையானதோ அதேயளவு கொடுமையானது பொறுப்பான பதவிகளில் இருந்து கொண்டு அவற்றுக்கு உடந்தையாக இருப்பது. ரஷ்யாவைப் புரட்சிகரப் பாதையில் வழிநடத்திய விளாடிமீர் லெனினின் கூற்று இவ்விடத்தில் பொருத்தமானது, லெனின் சொல்கின்றார் “உன் நண்பர்களை எனக்குக் காட்டு நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்று.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் தலைமையில் யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் சிவசுப்பிரமணியம் ரகுமான் தன்னையொரு மிகத் தீவிர புலித் தேசியவாதியாக கட்டமைத்துள்ளார். மேலும் மாணவ மாணவியரிடையேயும் மிகுந்த மதிப்பையும் நல்லெண்ணதையும் வளர்த்துள்ளார். ஆனால் அதே சமயம் அவருக்கு வெளியே தெரியாத இன்னொரு பக்கம் இருப்பதை சிலர் ஆணித்தரமாக சுட்டிக்காட்டியும் வருகின்றனர். இதுதொடர்பில் சில குற்றச்சாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசம்நெற்க்குத் தெரியவந்துள்ளது.
இங்கு தான் “உன் நண்பர்களை எனக்குக் காட்டு, நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்ற லெனினின் கூற்று நோக்கத்தக்கது. பேராசிரியர் ரகுராம் கலைப்பீடாதிபதியானதற்கு பின்னணியில் நின்று பணியாற்றியவர்கள் பேராசிரியர்கள்: க விசாகரூபனும் த கணேசலிங்கமுமே. இவர்கள் இருவருமே யாழ் கலைப்பீடத்தின் காமுகர் பட்டியலில் தங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள். மற்றும் சிலர் புள்ளிவிபரவியல் பேராசிரியர் இளங்குமரன், தமிழ் துறை விரிவுரையாளர் அருந்தாகரன், … என்று ஒரு பட்டியல் உள்ளது. இவர்கள் தான் பல்கலைக்கழகத்தினை சீரழித்து வடக்கின் கல்வியைச் சீரழிக்கவும் காரணமாக இருப்பவர்கள். இவர்களை விடவும் என்னும் வெளித்தெரியாத பாலியல் குற்றவாளிகள் பலர் கலைப்பீடத்தில் உள்ளனர். விரைவில் அந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.
க விசாகரூபன், இளங்குமரன், அருந்தாகரன் போன்றவர்களுக்கு எதிராக 2010இல் பல்கலைக்கழக மாணவர்களே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதில் ‘மாணவிகளை தமது காம இச்சைகளுக்கு வற்புறுத்தி வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலை கடந்த பத்து ஆண்டுகளின் பின் இன்றும் மாறவில்லை. க விசாகரூபனை இன்றும் பெண் விரிவுரையாளர்களோ அல்லது மாணவிகளோ தனியாக சந்திப்பதற்கு தயங்குகின்ற நிலையே நிலவுகின்றது.
மலையகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி முத்தையா என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் பிள்ளையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய ‘பொங்கு தமிழ்’ பேராசிரியர் தங்கராசா கணேசலிங்கம் தற்போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். யோகேஸ்வரி முத்தையாவை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இவர் மீது நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்த போது இளம் பெண் முத்தையா யோகேஸ்வரி காணாமல் ஆக்கப்பட்டார்.
கம்பவாருதி ஜெயராஜின் பொன்விழா மலர் – ‘ஜெயராஜ்ஜியம்’ நூலில் யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்திறனற்ற வினைத்திறனற்ற பாலியல் துஸ்பிரயோகச் செயற்பாடுகள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது.
இவர்களெல்லோரும் இப்போது தாங்கள் செய்யும் அநீதிகளையெல்லாம் புலித்தேசியத்தைக் காட்டி மறைத்து, காலத்தை ஓட்டிவருகின்றனர். சிறைக் கம்பிகளுக்குள் மரணம் வரை அடைக்கப்பட வேண்டியவர்கள் இன்னமும் தமிழ் பல்கலைக்கழகத்தின் அதிகார மையமாக உள்ளனர். தற்போது புலித்தேசியத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் எல்லோருமே ஏதோவொரு வகையில் தங்கள் சொந்த நலனுக்காகவே அதனை தூக்கி நிறுத்துகின்றனர்.
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ் சிறிசற்குணராஜா மாணவிகளுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கி இருந்தார். அதாவது “விரிவுரையாளர்கள், உங்களுக்கு சொக்லேட், பிஸ்கட் தந்தெல்லாம் உங்களை தங்களிடம் அழைப்பார்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே குறிப்பிடுமளவிற்கு கலைப்பீடத்தில் பெண்களின் நிலைமை மிக மோசமானதாகவே உள்ளது.
இவ்வாறான ஒரு அவலமான சூழலில் கலைப்பீடத்திற்கான பீடாதிபதிக்கான தெரிவு தவறானதாக அமையுமாயின் அதன் விளைவு மேலும் மோசமான நிலைக்கு பல்கலைக்கழகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தள்ளும் என்பது நிச்சயமான உண்மை.
ஒரு சமூகத்தினுடைய நாட்டினுடைய வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு அளப்பெரியது. இலங்கையில் ஜனநாயகம் சீரழிந்து செல்வதற்கும் அரசியல் வாதிகள் ஊழல் மிக்கவர்களாக மாறுவதற்கும் பொறுப்புள்ள ஊடகக் கலாச்சாரம் அங்கில்லாததும் முக்கிய காரணம். பேராசிரியர் ரகுராம் யாழ் பல்கலைக்கழத்திற்குள் உள்வாங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் துறைத்தலைவர், பேராசிரியர் தற்போது பீடாதிபதி என தன்சார்ந்த ஒரு வளர்சியை அடைந்துள்ளார்.
ஆனால் தான் தோண்றிகளாக பல பத்து ஊடகங்கள் தமிழர்கள் மத்தியில் இருந்த போதும் ஊடக விழுமியங்களைப் பின்பற்றுகின்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையால் உருவாக்க முடியவில்லை. ஒரு பெயர் சொல்லக் கூடிய ஊடகவியலாளர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இதுவரை வெளிவரவில்லை.
காரணம் பேராசிரியர் ரகுராம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்குப் பதில் ஜால்ராக்களையே உருவாக்கி வருகின்றார். சமூக அநீதிகளைக் கண்டு கோபம் கொள்ளக்கூடிய சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் உருவாவதை அவர் ஊக்குவிக்கவில்லை. மாறாக சமூக அநீதிக்கு எதிரான விடயங்களை பேசுவதை பேசப்படுவதை அவர் தடுத்தே வருகின்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி புங்குடுதீவு சிதைவுறும் நிலம் ஆவணப்படம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிட இருந்தது. ஆனால் அன்யை தினம் இறுதி நேரத்தில் அதற்கான அனுமதியை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருந்தது. புங்குடுதீவு சிதைவுறும் நிலம் சாதி பற்றிய ஆவணப்படமும் இல்லை. அது அழிந்து கொண்டிருக்கின்ற நிலத்தின் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார பின்புலங்களை ஆராய்கின்ற படம். நிலத்தின் அழிவுக்கும் சாதிக்குமான தொடர்பு அதில் ஒரு பகுதியாகப் பேசப்படுகின்றது.
அவ்வாறிருக்கையில் அதனை சாதியம் தொடர்பான படம் என்ற கோணத்தில் பார்த்து திரையிடலுக்கான அனுமதியை நிர்வாகம் மறுத்திருந்தது. ஒருவேளை அது சாதியம் பற்றிய திரைபடமாகவே இருந்தாலும் கூட அதை நிர்வாகம் தடுத்திருக்க கூடாது. நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பின்புலத்தில் இருந்தவர்களில்; பேராசிரியர் . சி. ரகுராமும் ஒருவர்.
சாதிய அடக்குமுறை தமிழ் சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ள ஒரு விடயம். அதை சமூகத்திலிருந்து அகற்றி சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டிய கடப்பாடு உயர் கல்விப் பீடம் என்றவகையில் பல்கலைக்கழகத்திற்குரியது. அதிலும் ஊடகத்துறைக்கு இதன் மீதான பொறுப்பு மிக அதிகம். ஆனால் பேராசிரியர் ரகுராம் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையே காண முடிகின்றது.
யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடம் செய்ய வேண்டிய ஆனால் செய்ய முயற்சிகூட எடுக்காத, செய்யப்படாத ஆய்வை, கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக தங்கேஸ் பரம்சோதி மேற்கொண்டு தயாரித்ததே இந்த Pungudutivu: A Disintergrating Land என்ற ஆவணப்படம். கலைப்பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கைலாசபதி அரங்கு தான் தெரியுமேயொழிய தென்னாசியா போற்றிய அந்த ஆளுமையை யார் என்று தெரியாது. காரணம் அவரைப் பற்றி விரிவுரை நடத்துமளவுக்கு இவர்களுக்கு அவருடைய ஆற்றல் பரப்பு தெரியவில்லை அல்லது அவரைப் பற்றித் தெரியவந்தால் இவர்களின் பலவீனம் வெளிப்பட்டுவிடும். இப்புங்குடுதீவு தொடர்பான ஆவணப்படத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அப்பல்கலைக்கழகத்தினால் வாழ்நாள் பேராரிரியர் என்று பட்டம் வழங்கப்பட்ட பொன் பாலசுந்தரம்பிள்ளையின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் குகபாலனின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருவருமே புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். ஆனாலும் அவ்ஆவணப்படம் யாழ் பல்கலைக்கழகத்தில் காண்பிக்க அனுமதிக்கப்படவில்லை. ஏன்?
‘நக்குகின்ற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?’ என்று வாழும் அற்ப மனிதர் பொன் அல்ல கறள்கட்டிய பாலசுந்தரம்பிள்ளை. ஒரு பொய்மான். அன்று புங்குடுதீவு ஆவணப்படத்தை தனிப்பட்ட முரண்பாடுகளுக்காக போடாமல் தடுத்த வடமராட்சியைச் சேர்ந்த சி ரகுராம் உட்பட்ட குழுவுடன் பொன் பாலசுந்தரம்பிள்ளை நல்லுறவுடனேயே உள்ளார். இந்த ஆவணப்படத்தில் பொன் பாலசுந்தரம்பிள்ளை இனவதத்தை கக்குகின்றார். நயினாதீவு நாகதீபத்தை வைத்து பௌத்தர்கள் சிங்களவர்கள் வந்து குடியேறிவிடுவார்கள் என்று பொன் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இதே பாலசுந்தரம்பிள்ளை 1990க்களின் முற்பகுதியில் யாழ் பல்கலைக்கழகம் இயங்கா நிலையில் இருந்த போது தன்னுடைய மகளுக்கு கொழும்பில் மருத்துவத்துறையில் கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக யாழ் மருத்துவத்துறையை மூடுவதற்கு முற்பட்டவர். அவ்வாறு மூடினால் தான் அதனைக் காரணம் காட்டி தன்னுடைய மகளுக்கு தென்னிலங்கையில் கற்க அனுமதி பெறமுடியும் என்பதற்காக.
தமிழ் இலக்கியப்பரப்பில் மு தளையசிங்கம் போன்ற பெரும் ஆளுமைகளைத் தந்த புங்குடுதீவை தமிழ் சமூகத்தின் கல்வியை அழித்த பொன் பாலசுந்தரம்பிள்ளை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது அம்மண்ணுக்கு பெரும் இழுக்கே.
புங்குடுதீவு ஆவணப்படம் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடாதது தொடர்பாக இவ்ஆவணப்படத்தின் காட்சிப்படுத்தலை மேற்கொண்ட ஞானதாஸ் காசிநாதரிடம் இதன் பின்னணி பற்றி தேசம்நெற் ஜனவரி 21இல் உரையாடிய போது, யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் பற்றி கதைப்பதே வீண்வேலை என்றும் அவர்களுக்கு சமூகம் சார்ந்த எவ்வித கரிசனையும் இல்லை என்றும் அங்குள்ள தனிநபர் அரசியல் மிக அருவருக்கத்தக்கது என்றும் விசனத்துடன் தெரிவித்தார்.
இந்தப் புங்குடுதீவு பற்றிய மிகக் காத்திரமான அவணப்படத்தை வெளியிடாத, Demons in paradise என்ற 1980க்களின் அரசியல் சூழலை வெளிப்படுத்தும் படத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட மறுத்த பேராசிரியர் சி ரகுராம் தன்னுடைய மாணவர்களின் ஆய்வுக்கு தமிழர்களின் சினிமாரசனை பற்றிய உப்புச்சப்பற்ற ஆய்வுகளையே எழுத வைத்துள்ளார். இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அது எம் ஜீ ஆர், சிவாஜி ரசிகர் மன்றங்கள் பற்றி பிச்சு உதறுகிறது. வித்தியா போன்ற இளம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மண்ணைப் பற்றிப் பேசுகின்ற ஆவணப்படத்தைக் காட்டிலும் எம்ஜீஆர், சிவாஜி ரசிகர்களின் ரசனையை ஆராய்வது தான் முக்கியம் என எண்ணுகிறார் பேராசிரியர் சி ரகுராம்.
2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த இயக்குநரான ஜூட் ரட்ணத்தின் Demons in paradise திரைப்படம் அன்று விழாக்குழுத் தலைவராக இருந்த பேராசிரியர் ரகுராமின் தலையீட்டால் நிறுத்தப்பட்டிருந்தது. குறித்த படம் புலிகளை விமர்சிப்பதாலேயே இந்த நிராகரிப்பு இடம்பெற்றது. இதற்கு தமிழ்த் தேசியவாதிகள் தரப்பிலிருந்து ரகுராமிற்கு பெரும் புகழாரம் சூட்டப்பட்டது.
அப்படம் 1980க்களில் தமிழீழ விடுதலை அமைப்புகளின் அரசியல் செயற்பாடுகளை விமர்சனபூர்வமாக வெளிக்கொணர்ந்து சில சர்வதேச விருதுகளையும் பெற்றிருந்தது. லண்டனில் முதல் தரமான பல்கலைக்கழகங்களைக் கொண்ட யுனிவர்சிற்றி கொலிஜ் லண்டனில் இப்படம் (ஆவணப்படம்) காண்பிக்கப்பட்டும் இருந்தது. அதில் அனைத்து விடுதலை அமைப்புகள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனங்கள் இருந்தது.
“உன்னுடைய கருத்தில் நான் உடன்படவில்லையாயினும்; உனது கருத்தை வெளியிடுவதற்கு உனக்குள்ள உரிமையைப் பாதுகாப்பதற்காக எனது உயிரைக் கூட விடுவதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்” என்றார் பிரெஞ்சு அறிஞர் வோல்டேயர்!
ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கான தாரக மந்திரமாக இது சொல்லப்படுகிறது. ஆனால் ஊடகத்துறை பேராசிரியர் ரகுராமிற்கும் இதற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. தன்னுடைய செயற்பாடுகள் மூலமாக பேராசிரியர் சீ ரகுராம் என்ன சொல்ல முற்படுகின்றார். தமிழர்களை தமிழர்களே அடக்கலாம். ஒடுக்கலாம். சுரண்டலாம். ஆனால் சிங்களவர்கள் அதையெல்லாம் செய்வது தான் பிரச்சினை. அதேபோல் தமிழ் பெண்களை தமிழர்கள் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எப்போதும் சுரண்டலாம், துன்புறுத்தலாம், பாலியல் வல்லுறவும் கொள்ளலாம். ஆனால் சிங்கள இராணுவம் யுத்தத்தின் போது செய்தது குற்றம். இது என்ன லொஜிக்?
தன்னுடைய விருப்பு வெறுப்பைத் தாண்டி அடுத்தவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகளுக்கு சி ரகுராம்; துளிகூட இடமளிப்பது கிடையாது என்பது பல்கலைக்கழக விரிவுரையாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒருவர் உருவாக்கும் ஊடகப்பட்டதாரிகள் எவ்வாறு அநீதிகளுக்கு எதிராக துணிந்து குரல் கொடுப்பார்கள்?
ரகுராம் ஊடகத்துறையைப் பொறுப்பெடுத்த பின் ஊடத்துறையில் விரிவுரையாளர்களுக்கான வெற்றிடம் நிலவியது. அதற்கு கூட தன்னிடம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்ற இருவரையே உள்ளீர்த்திருந்தார். மற்றைய ஒருவரும் ரகுராமிற்கு சலாம் போடக்கூடிய ஒருவரே. ரகுராம் பொறுப்பேற்க முன்னர் 5 வருடங்களுக்கு மேலாக தனித்து நின்று ஊடகத்துறையை கொண்டு நடத்திய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய கிருத்திகா என்ற பெண் விரிவுரையாளர் மிகச் சாதாரணமாக வெளியேற்றப்பட்டார். அவர் தன்னுடைய எந்த பட்டப்படிப்பையும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகத்தில் முடிக்கவில்லை என்பதால் அவரை தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்பதே அவரது வெளியேற்றத்துக்கு சொல்லப்பட்ட காரணம்.
ஆனால் இதேவேளை பேராசிரியர் ரகுராமும் எந்தவொரு பட்டத்தையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு சுயமாக சிந்திக்க முடியாத சுயமாக முடிவெடுக்க முடியாத ரகுராமிற்கு வேண்டப்பட்ட ஆளணியே ஊடகத்துறையில் தற்போது உள்ளது. வருங்காலத்திலும் இந்த நிலையே தொடரும் என்பதே எதிர்பார்ப்பு.
ரகுராம் ஊடகத்துறையை பொறுப்பெடுத்த பின்பு ஊடகத்துறை தன் கட்டமைப்பு சார்ந்து தொழில்நுட்பம் சார்ந்து பெருமளவு முன்னேறியுள்ளது. ஆனால் கருத்தியல் சார்ந்த வளர்ச்சி என்பது பூச்சியமாகவே உள்ளது.
தன் கண்முன் பல்கலைக்கழகத்தில் நிகழும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாதவரால், நன்கு அறியப்பட்ட பாலியல் குற்றவாளிகளின் தயவில் பீடாதிபதியானவரால், மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க முடியாத ஒருவரால் எவ்வாறு சமூகத்தை காவல் காக்கும் ஊடகவியலாளர்களை உருவாக்க முடியும்? எவ்வாறு 2000 மாணவர்களுக்கும் அதிமான மாணவர்களைக் கொண்டுள்ள கலைப்பீடத்தை கொண்டு நடாத்த முடியும். அதிலும் குறிப்பாக 75 வீதத்திற்கும் அதிகமான பெண் மாணவிகளைக் கொண்டுள்ள கலைப்பீடத்தை அவர்களுக்கான பாதுகாப்பான இடமாக மாற்றமுடியும்?
முன்பு ஒருறை ”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என்றும் ”யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அதிகரித்து உள்ளது” என்றும் அன்று யாழ் அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் நிகழ்வுகளில் சுட்டிக்காட்டி இருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் பின்னணியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். யாழ் அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகமார் குற்றம்சாட்டி ஒரு தசாப்தம் கடந்த பின்னரும் இன்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் தற்கொலைகள் தொடர்கின்றது. கல்விக் கனவுகளோடு வரும் மாணவிகள் யாழ் பல்கலைக்கழகத்ததில் வந்ததன் பின் ஏன் தற்கொலை செய்கின்றனர்? இதனைத் தடுக்க ஏன் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. பேராசிரியர் ரகுராம் ஏன் இவ்விடயங்களையொட்டி எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ள முன்வரவில்லை.
இந்தப் பின்னணியில் நோக்குகின்ற போது உண்மையிலேயே பேராசிரியர் ரகுராம் யார் நல்லவரா? கேட்டவரா? என்ற கேள்வி இன்னும் பல கேள்விகளையே எழுப்புகின்றது.
(Thesam Jeyabalan)