கிளுவையை ஒரு தரம் ஊன்றினால் அது நிலத்திற்குப் பாதுகாப்பையும், விவசாயிக்கும் தொடர்ந்து வருமானத்தைக் கொடுக்கக்கூடியது.
இருபதைந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஒரு வேலி நிலத்தில் அப்பா தான் எங்கள் பகுதிலேயே முதன் முதலில் கிளுவை வேலி வைத்திருந்தார்.
கிளுவை வேலி வைப்பது ஒரு திறமையான வேலை. சிறு குழித் தோண்டி கிளுவைக் கம்புகளை வரிசையாக ஊன்றி அது நேராக நிற்பதற்கு மூங்கில் சிலாண்டுகளால் சணல் மூலம் கட்டினால் பார்க்கவே அழகாக இருக்கும்.
கிளுவை வளர்ந்தப் பிறகு அதன் மேல் கிளைகளை வெட்டி மற்ற விவசாயிகளுக்கு விற்கலாம்.
சிறுவனாக இருந்த காலத்தில்,”டேய் தம்பி இந்த ஊருல இன்னாரு கிளுவைப் பணம் கொடுக்கனும் வாங்கிட்டு வாடா” என அப்பா அனுப்பி நான் இரண்டு கி.மீ சைக்கிளில் சென்று பணம் வாங்கி வருவதுண்டு.
கிளுவை வேலி எத்தனைப் பறவை இனத்திற்கு வாழ்விடமாகவும்,மூலிகை கொடிகள் படர பந்தலாகவும் இருந்திருக்கிறது.
மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத இக்காலத்தில் உயிர் வேலிகள் அற்று போய்விட்டது. நாகரிக காலம் இப்போது இரும்பு முள் வேலிகளாக மாறி இருக்கிறது.
இருந்தாலும் இன்னமும் எங்க வயல்களில் எங்க அப்பா வைத்த கிளுவை வேலியில் மிச்சம் இருக்கும் சில கிளுவை மரங்கள் எங்கப்பா பெயரை உச்சரித்தப்படியே இருக்கின்றது.
உயிர்வேலி – ஒரு பார்வை
உயிர்வேலி என்னும் தலைப்பில் நான் அறிந்தவற்றையும், நண்பர்கள் வாயிலாக நான் கற்றவற்றையும் உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும் பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தைக் காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது.
மேலும் இந்த உயிர்வேலியானது மண் அரிப்பைத் தடுத்தும், பண்ணையாளரின் அனுமதி இல்லாமல் வாயிலை தவிர வேறு வழியில் வெளி ஆட்கள் பண்ணையின் உள்ளே நுழைய இயலா வண்ணம் அமைந்த ஒரு முள் வேலியாகவும், பல உயிர்கள் வாழும் இடமாகவும், பல உயிர்களுக்கு உணவு கிடைக்கும் ஒரு உணவுத் தொழிற்சாலையாகவும், மனிதர்களின் பழத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு உணவுக்காடாகவும், கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பசுந்தீவனமாகவும், விறகுக்காகவும், மரச் சாமான்களுக்காகவும், பசுந்தாள் உரத்திற்காகவும், பருத்தியின் மூலம் உடை தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், வீட்டுப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் மூலிகைகள் அடங்கிய மூலிகைக்காடாகவும் பயன்படுகிறது. இந்தக் காட்டை சாதாரண முறையில் நடவு செய்தால் பல ஏக்கர் நிலம் தேவைப்படும். அப்படிச் செய்யாமல் அடர்வன முறையாகிய மியாவாக்கி முறையில்.
நண்பர்களுக்கு சந்தேகம் எழலாம் எவ்வாறு இவ்வளவு மரங்களை அதுவும் ஆலமரம், அரசமரம், மாமரம் எல்லாவற்றையும் இவ்வளவு குறுகிய இடத்தில் நட முடியும், அப்படி நட்டால் வருமா என, கேள்விகள் சரியே – அதற்கான விளக்கம் – ஐந்தடுக்கு முறையில் பாலேக்கர் ஐயா கூறும் விளக்கமே இதற்கும் பொருந்தும் – வேர்கள் ஒன்றிற்கொன்று சத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் அதையும் மீறி சந்தேகம் எனில் நமது ஆசான் நம்மாழ்வார் ஐயா கூறும் பழமொழியே இதற்கு பதில் – மரம் நட வேண்டியது நம் கடமை ‘வந்தால் மரம் இல்லையேல் அதுவே மண்ணுக்கு உரம்’ எனும் கருத்தை மனதில் கொள்ளலாம்.
மேலும் இந்த ஒன்பது வரிசையை சுருக்கி நான்கு வரிசையாகவும், ஒரு வரிசையை அந்த நான்கு வரிசைக்குள் இருக்கும் இடைவெளியிலும் நடவு செய்யும் வண்ணம் அமைந்ததே நமது அமைப்பு. வரிசையும், மரங்களின் பெயர்களும்.
முதல் வரிசை – முள் நிறைந்த வேலி மற்றும் உணவு பொருள் மற்றும் ஆட்டுத்தீவனம்
இலந்தை, களாக்காய் (கிளக்காய்), கோணக்கா (கொடுகழிக்கா அல்லது கொடுக்காய் அல்லது கொடுக்கா புள்ளி), காரை முள், சூரை முள்,வில்வம், சப்பாத்திக்கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், முள் கள்ளி, பரம்பை முள், கருவேல், குடைவேல், காக்கா முள், சங்க முள், யானைக்கற்றாழை.,,,
(இன்னும் சில)
இரண்டாம் வரிசை -பறவைக்கான உணவு மற்றும் அதன் வீடு மற்றும் மனிதர்களுக்கான உணவுக்காடு
ஆலமரம், அரச மரம், அத்தி மரம், நாவல், இலுப்பை, கோடை ஆப்பிள், சிங்கப்பூர் செர்ரீ (சர்க்கரை பழம்), வேம்பு, கொய்யா, மாதுளை, மா, பலா, சீத்தா, பேரீச்சை, ஈச்ச மரம், நெல்லி, புளிய மரம், சப்போட்டா, முந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய், பேரிக்காய், எலுமிச்சை, விளாம் பழம்,பாதாம், தென்னை, பனைமரம்,பாக்கு மரம்.,,,(இன்னும் சில)
மூன்றாம் வரிசை – வருங்கால வைப்பு நிதி மற்றும் விறகு மற்றும் பசுந்தாள் உரம் மற்றும் வனக்காடு
சவுக்கு, மூங்கில், சில்வர் தேக்கு, மலைவேம்பு,குமிழ், வேங்கை, புங்கை மரம், புன்னை மரம், வேங்கை, கடம்பு,தீக்குச்சி மரம், வாகை,சந்தனம் ,தேக்கு,ரோஸ்வுட் ,செஞ்சந்தனம் ,கொன்றை, மருதம், கருங்காலி, உசிலை, தடசு, மந்தாரை, நீர் மருது, மஞ்சணத்தி, பூவரசு, மகிழ மரம், வன்னி மரம்,.,,,(இன்னும் சில)
நான்காம் வரிசை – கால்நடை தீவனம்
அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை.,,,(இன்னும் சில)
ஐந்தாம் வரிசை -மூலிகை மற்றும் பூச்சி விரட்டி மற்றும் உணவு பொருட்கள்
அன்னாசி பழம், பிரண்டை, தூதுவளை, முடக்கற்றான், பண்ணைகீரை, கருவேப்பிலை, கோவக்காய், திராட்சை (முடிந்தால்), வெற்றிலை, செம்பருத்தி, வெட்டி வேர், லெமன் கிராஸ், கற்பூர வள்ளி (ஓம வள்ளி), பூனை மீசை, மருதாணி, சோற்றுக்கற்றாழை, நிலவேம்பு, சிறியா நங்கை, பெரியாநங்கை, முசுமுசுக்கை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, துத்தி, தும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, ஆடாதோடை, ஆடு தின்னாப்பாளை, நொச்சி, ஆவாரை, ஊமத்தை,நெய்வேலி காட்டாமணக்கு, ஆமணக்கு, எருக்கு, நீர்முள்ளி, சிறுகண்பீளை, சிறுநெறிஞ்சிமுள், வேலிப்பருத்தி. (இன்னும் சில).
இடத்திற்கு தகுந்தாற்போல் சில மாறுதலுக்குரியது