கடம்பநதி, அருவியாறு என்பன மல்வத்து நதியின் பழைய பெயர்கள். ஹபரணைக்கு அருகே மகாவம்ச காலத்தில் ‘அரிட்ட பர்வதம்’ என்று அறியப்பட்ட ரிதிகலையில் தோன்றி, அனுராதபுரத்தை அடுத்து ஓடி, பசவக்குளம், கட்டுக்கரைக் குளம் முதலியவற்றுக்கு நீராதாராமாகப் பாய்ந்து மன்னார் அரிப்பு பகுதியில் கடலில் கலக்கிறாள் மல்வத்து நதி மங்கை. மன்னார் மடுவுக்கு அருகே பறையனாலங்குளத்தில் தேக்கம் அணை மூலம் ‘யோத எல’ கால்வாயாகப் பிரிக்கப்படும் அருவியாற்றின் கிளை ஒன்று, யோத வெவ என்றும் இராட்சதவாவி என்றும் அழைக்கப்படும் கட்டுக்கரைக்குளத்தை நிரப்பி மறைகிறது.
யோத எல கால்வாயும் கட்டுக்கரைக் குளமும் இலங்கை வரலாற்றில் மகத்தான பொறியியலாளனாகப் போற்றப்படும் தாதுசேனனால் (பொ.பி 455-473) கட்டப்பட்டவை. அவன் அமைத்த தேக்கம் அணைக்கட்டை இலங்கையின் கல்லணை எனலாம்.
ஆனால் அருவியாற்றின் உண்மையான கழிமுகம் இன்றைய அரிப்பு அல்ல; மாந்தை தான். எப்படி மாவலி கங்கையின் கழிமுகமான கொட்டியாரக் குடாவில் இன்றைய திருக்கோணமலைத் துறைமுகம் அமைந்ததோ, அதே போல, அருவியாற்றின் கழிமுகமான மாந்தையில் அமைந்த துறைமுகம் தான் மாதோட்டம். மாந்தை பத்தாம் நூற்றாண்டுக்கு முன் வரை கிரேக்கரும் யவனரும் சீனருடன் பண்டமாற்று செய்த, ஆசியாவின் இடைத்தங்கல் துறைமுகமாக விளங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஏதோ காரணத்தால் அருவியாறு திசைமாறி ஓடத் துவங்கியதாலும், கடல் நீரோட்ட மாறுபாட்டால் மண்மூடிப்போனதாலும் மாந்தைத்துறைமுகம் தூர்ந்து போயிருக்கிறது. அப்படி ஓடிய பழைய அருவியாற்றின் எச்சம் தான் இன்றுள்ள திருக்கேதீச்சரப் பாலாவி.
பாலாவியை சம்பந்தரும் சுந்தரரும் பாடுவதால் (7 – 9ஆம் நூற்.) தாதுசேனனுக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் அருவியாறு திசைமாறியிருக்கலாம். அல்லது இந்த திசைமாற்றத்திற்கு செயற்கையான யோத எல வாய்க்காலும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். கட்டுக்கரைக் குளத்திலிருந்து பாலாவி நோக்கி வருகின்ற தூர்ந்து போன நீர்வரத்து பாதை இன்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
நம் ஆய்வாளர்கள், வரலாற்றை எழுதும் போது இந்தப் புவியியல் மாற்றங்களை கருத்தில் கொள்வதே இல்லை. சில உதாரணங்கள் சொல்லலாம்.
இன்றைக்கு திருக்கோணமலை மாவட்டத்தின் எல்லையில் வெருகல் கங்கையின் வடக்குக் கரையிலுள்ளது வெருகல் சித்திரவேலாயுதர் கோவில். ஆனால் பதினாறாம் நூற்றாண்டில் தம்பலகமத்து வீரக்கோன் முதலியாரால் “வெருகல் சித்திரவேலாயுதர் காதல்” எனும் நூல் பாடப்பட்ட போது, அவர் ‘தென்வெருகல்’ என்று பாடுகிறார்.
ஏனென்றால் அப்போது கோவில் வெருகலாற்றின் தென்கரையில் இருந்தது. அதனால் மட்டக்களப்புத் தேசத்தவரும் அக்கோவிலுக்கு உரிமைகொண்டாடினர். வெருகல் கோவில் மதிலை மட்டக்களப்பூரவர் கட்டியதாகக் குறிப்பிடும் கல்வெட்டை இன்றும் காணலாம். வெருகல் சித்திரவேலர் காதல் நூலில் அது “தென்வெருகல்” என்று குறிப்பிடப்படுவதைப் புரிந்துகொள்வதற்கு வெருகலாறு இன்று திசைமாறி தெற்காக ஓடுவது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
இலங்கை போன்ற தீவு நாடுகளில் புவியியல் அமைப்புக்கள் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன. கீழைத்தமிழரின் தலைநகரான பழைய மட்டக்களப்பு நகர் வாவியின் தென்னந்தத்தில் சம்மாந்துறைக்கருகே இருந்தது. போர்த்துக்கேயர் புலியந்தீவில் கோட்டை கட்டி புதிய மட்டுநகரை உருவாக்கினார்கள் (ஏனெனில் கடலூடே வணிகப்படகுகள் நுழைந்த வாவியின் கழிமுகம் புலியந்தீவுக்கருகே பாலமீன்மடுவில் இருந்தது), அவர்களை அடுத்து வந்த ஒல்லாந்தர் ஏன் அவசரமாக கோட்டைக்கல்லாற்றில் கோட்டை கட்டினார்கள் (பாலமீன்மடு கழிமுகம் மண்மூடிக்கொண்டிருந்தது, வாவியின் மையத்திலிருந்த கோட்டைக்கல்லாறு மூலம் கடல்வழி வணிகப்படகுகளையும் போக்குவரத்தையும் இலகுவாகக் கண்காணிக்கலாம்), பின் ஏன் அதையும் விடுத்து கரச்சைக் காரைதீவில் தங்கள் கிழக்கிலங்கைத் தலைமையகத்தை மாற்ற முனைந்தார்கள் (அது சம்மாந்துறை – பழைய மட்டக்களப்பு நகருக்கருகே வணிகக்கப்பல்களை கண்காணிக்க வசதியாக இருந்தது), தெற்கே 15ஆம் நூற்றாண்டு வரை இயங்கிக்கொண்டிருந்த கண்டபாணத்துறையும் (திருக்கோவில்), அப்புறத்தோட்டமும் (அறுகங்குடா) ஏன் காலனித்துவ ஆட்சியில் துறைமுகம் என்ற நிலையை இழந்தன (அவை மாறுபட்ட கடல்நீரோட்டங்களால் மண்மூடிக் கொண்டிருந்தன), தென்னிலங்கையில் சீன – பாரசீக – தமிழக நானாதேசி வணிகர்கள் கூடிக்குலாவிய மாத்துறையும் (மாத்தற) கல்துறையும் (களுத்துறை) பாணந்துறையும் மங்கி மறைய காலியும் கொழும்பும் எப்படி திடுதிப்பென ஐரோப்பியர் கால துறைமுகங்களாக வளர்ச்சியடைந்தன (அதே கடல்நீரோட்ட மாறுபாடு) என்பதெல்லாம் சிந்திக்க சிந்திக்க வரலாற்றின் மறைந்த பக்கங்களைத் தேடித்தருகின்ற அற்புதமான தடயங்கள்.
இந்தக் கடல்நீரோட்ட வரலாற்றை ஆராய்ந்து பார்க்காமல் கடலரிப்புக்கு கூடிய சாத்தியமுள்ள ஒலுவில் போன்ற இடமொன்றில் புதிதாக துறைமுகம் அமைத்ததால் அதை அண்டிய சுமார் 50 கிமீ நீளமான கடற்கரைப் பரப்பு கடந்த பத்தாண்டுகளில் காவுகொள்ளப்பட்டு விட்டது. இன்றும் ஒரு சாதாரண கடற்றொழில் மீனவரிடம் கடல்நீரோட்டம், கழிமுக மடைமாற்றங்கள் பற்றிய போதுமான பரம்பரை அறிவு இருப்பதை நாம் காணமுடியும். அவர்கள் நமக்கு பாமரர்கள்.
அருகில் அமர்ந்திருந்த நண்பனிடம் “அருவியாற்றின் பழைய கழிமுகம் மாந்தை. ” என்பதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒளிபரப்பான ஆவணப்படத்திலும் அதைச் சொன்னார்கள். மாதோட்டத் துறைமுகமே அருவியாற்றின் ஊடாக அனுராதபுர அரசுக்கான குடியேற்றவாசிகளையும் வணிகப்பாதையையும் அனுமதித்தது. மாந்தையில் இருந்து அனுராதபுரம் வரை நீண்டு பள்ளிகொண்டிருக்கும் அருவியாறு உருவாக்கிய தொல்நாகரிகத்தின் வாரிசுகளே இன்றைய இலங்கைக் குடிமக்கள்.
அருவியாறும் தேக்கமும் கட்டுக்கரைக்குளமும் சொல்லவரும் வரலாறு வேறொன்று. கட்டுக்கரைக்குளப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் அங்கிருந்த புராதனக் குடியிருப்பொன்றை சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஆனால் அந்தப்பகுதி அரசால் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குக் கொஞ்சம் தள்ளித் தான் இருக்கிறது மாந்தை. நாவலர் சொன்ன தேன்பொந்து. இன்னும் நாம் முழுவதுமாகச் சென்றடையாத தேன்பொந்து.