பிராமணர்களிடையே நிலவும் உட்சாதிப் பிரிவுகள் என்ற விடயத்தில் தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. யாழ்ப்பாணத்தில் ‘ஐயர்’, ‘குருக்கள்’, என்ற இரு பெயர்களால் பிராமணர்களை அழைப்பது வழக்கம். இவ்விரு பெயர்களும் தொழில் தரம் பற்றிய வேறுபாடே அல்லாமல் உபசாதிகள் என்ற பெயரை உடையன அல்ல. (தஞ்சாவூரில் ‘ஐயர்’ ஒரு உபசாதிக் குழு. அது ஐயங்காரில் இருந்து வேறுபட்டது.) யாழ்ப்பாணத்தில் பிராமணக் குடும்பத்தில் சாதாரண பூசகர் ஒருவர் ஐயர் என அழைக்கப்படுவார். அதே குடும்பத்தில் அறிவாலும் அனுபவத்தாலும் மூத்தவர் ஒருவர் குருக்கள் பட்டத்தைப் பெற்றவராக இருப்பார். அவர் தொழில் அடிப்படையில் உயர்ந்த தரத்தை உடையவரே அல்லாது உயர்ந்த உபசாதியினராகக் கருதப்படுவதில்லை. ஆகையால் பிராமணச் சமூகத்தின் உள்ளக ஒழுங்கமைப்பைப் பற்றி இங்கு விரிவாகப் பேசும் தேவை இல்லை.
பிராமணர் – வேளாளர் உறவு
யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் வேளாளர்களுடன் கொண்டுள்ள உறவும் யாழ்ப்பாணப் பிராமணர்களின் பொருளாதார நிலையும் அவர்களின் தொழிலின் தன்மையும் தஞ்சாவூர் பிராமணர்களின் நிலையில் இருந்து வேறுபட்டது. வேளாளர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையிலான இடையூடாட்டங்களை ஆராயும் போது இவ் வேறுபாடுகளை மனதில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.
மூவகைக் கிராமங்கள்
யாழ்பாணத்தில் மூவகைக் கிராமங்கள் உள்ளன.
- ஒரு சாதிக் கிராமம் : இவ்வகைக் கிராமங்களில் ஒரு வட்டாரம் (WARD) காணப்படும். அவ்வட்டாரத்தில் ஒரே ஒரு சாதி மட்டுமே காணப்படும்.
- பல சாதிக் கிராமங்கள் : இவ்வகைக் கிராமங்களில் ஒரே ஒரு வட்டாரம் இருக்கும். ஆனால் அந்த வட்டாரத்திற்குள் பல சாதிகளின் குடியிருப்புகள் அருகருகே காணப்படும்.
- பல சாதி, பல வட்டாரக் கிராமங்கள் : இவ்வகைக் கிராமங்களில் பல வட்டாரங்கள் இருக்கும். அவ்வட்டாரங்கள் தனித்தனிச் சாதிக்குரிய குடியிருப்புகளை உடையனவாகக் காணப்படும்.
இவற்றுள் முதல்வகைக் கிராமங்கள் ஆனையிறவுக்குத் தெற்கே காணப்படுகின்றன. ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கிராமங்கள் (வன்னியின் பகுதியாக இருந்தன.) காடுகளால் சூழப்பட்டவை. இவை குளத்தை அடிப்படையாகக் கொண்ட நீர்பாசன விவசாயத்தைச் செய்யும் மக்களைக் கொண்டவை. இம் மக்கள் இந்து சமயத்தினராகவும் தமிழ் பண்பாட்டை உடையவர்களாகவும் இருப்பது ஆனையிறவுக்கு வடக்கே உள்ள கிராமத்தவர்களோடு இவர்களை இணைப்பதாக உள்ளது. ஆனால் ஆனையிறவுக்குத் தெற்கேயுள்ள ஒரு சாதிக் கிராமங்களுக்கும் வடக்கேயுள்ள யாழ்ப்பாணக் கிராமங்களுக்கும் உள்ள வேறுபாடு உள்ளக ஒழுங்கமைப்பு (internal organization) அடிப்படையிலானது. (உதாரணமாக சலவைத் தொழில் செய்பவர்களைக் கொண்ட ஒரு சாதிக் கிராமத்திற்குள் உள்ளக ஒழுங்கமைப்பிலும், குடியிருப்புக்காணிகள், குளம், பயிர்ச்செய்கைக் காணிகள் என்பவற்றின் உடைமை தொடர்பான ஒழுங்கமைப்பில் பிறசாதிகள் சம்பந்தப்படுவதில்லை.) மேலும் குலத்தை அடிப்படையாகக் கொண்ட நெற்செய்கை விவசாயம் இக்கிராமங்களிற்கு யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதிக் கிராமங்களைவிடத் தனித்துவமான இயல்பை வழங்குகின்றது.
இரண்டாம் வகைக் கிராமங்கள் ஆனையிறவுக்கு வடக்கேயுள்ள யாழ்ப்பாணப் பகுதியின் தெற்குப் பகுதியில் காணப்படுகின்றன. மூன்றாம் வகைக் கிராமங்கள் குடா நாட்டின் வடக்குப் பகுதியிலும் மேற்கே உள்ள தீவுப் பகுதியிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் பெரும்பான்மையானவை மூன்றாம் வகையின. அதாவது அவை பல வட்டாரங்களைக் கொண்டவை; பல சாதிகளின் குடியிருப்புகளைக் கொண்டவை. இதைப் பற்றிய உள்ளக ஒழுங்கமைப்பை (Internal Organization) ஆராய்வதன் மூலம் யாழ்ப்பாணம் பற்றிய இயல்புகளைப் பற்றிப் பொது முடிவுகளைக் கண்டறியலாம்.
மூன்றாவது வகை பற்றி ஆராயும்போது வட்டாரம் (WARD) என்ற சொல்லின் பொருள் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். வட்டாரம் என்பது வரையிடப்பட்ட எல்லையுடைய குடியிருப்புப் பகுதியைக் குறிப்பது என்ற பொருளில் நாம் உபயோகிக்கின்றோம். ஒரு வட்டாரம் அயலில் உள்ள பிற வட்டாரங்களில் இருந்து தன்னை வேறுபடுத்தும் தெளிவான எல்லைகளையுடையது. ஒரு கிராமத்தின் குறிப்பிட்டதொரு வட்டாரத்தில், ஒரு சாதியைச் சேர்ந்த உறவுக் குடும்பங்களின் குடியிருப்புகள் இருக்கும். ஒரு கிராமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டாரங்களிலும் குறிப்பிட்ட ஒரு சாதியின் குடியிருப்புகள் இருக்கலாம் (உதாரணமாக வேளாளர் சாதியின் பல வட்டாரங்கள் இருப்பதுண்டு). இவ் வட்டாரங்கள் அருகில் இருக்கலாம் அல்லது தூரத்தில் இருக்கலாம். ஒரு கிராமத்திற்குள் தோட்டக்காணிகளும் வயல் காணிகளும் இருக்கும். அவற்றுக்கு இடையே குடியிருப்புகள் (வளவுகள்) இருக்கும். சமூகவியல் நோக்கில் வட்டாரங்களை மையம் சார்ந்த நெருக்கமான குடியிருப்புகள் (NUCLEATED SETTLEMENTS) எனக் கூறவியலாது. அவை தஞ்சாவூரின் தெருக்களுக்கு (STREETS) ஒப்பானவை. வட்டாரங்களில் வெளிப்பட்டு தெரியும் புவிவெளிப் பிரிவு (SPACE) அவற்றின் சமூக உறவுகளில் வெளிப்படுகின்றது. “THE SPATIAL SEPARATION OF WARDS REFLECTS A SOCIAL SEPARATION” ( பக் 70).
வட்டாரங்கள் இடையிலான சமூக உறவுகள்
வட்டாரம் என்னும் புவியியல் பிரிவு சமூக உறவுகளில் பிரிவினையாக வெளிப்படுகின்றது. ஒரு கிராமத்தின் வெவ்வேறு வட்டாரங்களிடையே சமூக உறவுகள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படும். இப் பண்பை ஒரே சாதி வட்டாரங்களில் வெளிப்படையாகக் காணலாம். ஒரு கிராமத்திற்குள் அமைந்திருக்கும் ஒவ்வொரு வட்டாரமும் தரவரிசையில் (RANK ORDER) தமக்குரிய அந்தஸ்தை உயர்த்தி வைத்துக் கொள்ளும் முனைப்புடன் செயல்படுகின்றன. எந்த வட்டாரத்தினர் தரவரிசையில் உயர்ந்தவர், எவர் அடுத்தபடியில் உள்ளவர் என்பதில் நுண்ணிய சிக்கலுடைய போட்டி இருக்கிறது. இப்போட்டி சமூக உறவுகளைக் குறைந்த அளவில் வைத்துக் கொள்ளக் காரணமாக அமைகிறது.
வட்டாரப் பிளவுகள் காரணமாக ஒரு வட்டாரத்திற்கும் இன்னொரு வட்டாரத்திற்கும் இடையே திருமண உறவு இருப்பதில்லை. பந்தி போசனமும் இருக்காது. ஏனைய சமூக உறவுகளும் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருக்கும். வட்டாரங்களைச் சேர்ந்தவர்களிடையே சிறுசிறு பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்கள் இருக்கலாம். ஒரு வட்டாரத்தில் கோயிலின் ஆண்டுத் திருவிழாவில் பிற வட்டாரத்தவர்கள் பங்குபற்றலாம். ஒரு வட்டாரத்தினர் இன்னொரு வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஆகமக் கோயிலின் ஆண்டுத் திருவிழாவில் ஒரு குறிப்பிட்ட நாளின் திருவிழாவை பொறுப்பேற்று நடத்தலாம். ஆயினும் இவ் வட்டாரங்களிடையே இறுக்கமான சமூக உறவுகள் இருப்பதில்லை. இவை அந்தஸ்துக்காக போட்டியிடும் குழுக்களாக (GROUPS COMPETING FOR STATUS) இருப்பதே இதற்கான காரணமாகும். விலகி நிற்றலும் உறவுத் தவிர்ப்பும் நாமே உயர்ந்தோர் பாவனையும் பேச்சும் நடத்தைப் பாங்கும் சமூக இடைவெளியை அதிகரிக்கின்றன. இவை உலகியல் சாராத (NON-MATERIAL) சாதித் தூய்மை கருத்துக்களுடன் தொடர்புடையவை எனலாம்.
தாம் வாழும் கிராமத்திற்கு வெளியே அருகில் உள்ள கிராமங்களில் வாழும் தமது சொந்தக்காரச் சாதிகளுடன் கிராமத்தவர்கள் திருமண உறவை வைத்துக் கொள்கின்றனர். ஆகையால் ஒரு சொந்தக்காரச் சாதியின் உறுப்பினர்கள் வெவ்வேறு கிராமங்களின் வட்டாரங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர். ஒரு எண்ணக்கரு (CONCEPT) என்ற வகையில் சொந்தக்காரச் சாதி மூடிய அகமணக்குழு முறையாக (A CLOSED ENDOGAMOUS SYSTEM) இருப்பதைக் காணலாம்.
ஒரு சொந்தக்காரச் சாதியைச் சேர்ந்தவர்கள் அயல் வட்டாரத்தில் வாழும் இன்னொரு சொந்தக்காரச் சாதியினரை தம்மை விடத் தரவரிசையில் தாழ்ந்தவர் என்றும் தம்மை உயர்ந்தவர் என்றும் கருதி பெருமை பேசிக்கொள்வதை மேலே குறிப்பிட்டோம். ஆயினும் நடைமுறையில் முரண்கள் தோன்றுவதை அவதானிக்க முடிந்தது. எவ்வித திருமண உறவுகளும் அற்றவர்களாக இருந்த இரு வட்டாரங்களைச் சேர்ந்த குழுக்கள் தம்மை அறியாமலே நேரடியல்லாத உறவுகள் மூலம் தம் உறவுக்காரர்களாகி விடுவதைக் கண்டுகொள்கின்றன. முன்பு தொடர்பற்ற குழுக்களிடையே திருமண உறவுகள் தோன்றுகின்றன. பழைய உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. நேரடியல்லாத இரண்டாம் மூன்றாம் நிலை உறவுகளாகவும் முன்பு தொடர்பற்ற உறவுகளாகவும் இருந்தவர்களிடையே உறவுத் தொடர்புகள் உருவாகிவிடுகின்றன. கள ஆய்வின் போது இவ் உறவுத் தொடர்புகளை நன்கு கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டியதுண்டு. இக்காரணத்தினாலேயே மூடிய அகமணக்குழு என்ற எண்ணுக்கரு நடைமுறையில் உண்மையற்றதாகப் போய்விடுகிறது.
வெவ்வேறு சாதிகளுக்கிடையிலான உறவுகள்
கிராமத்தின் எல்லா உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு யாழ்ப்பாணக் கிராமங்களில் காணப்படுவதில்லை. இவ்வாறான ஒருங்கிணைந்த கட்டமைப்பு (UNITARY STRUCTURE) இல்லாத காரணத்தால் வட்டாரங்கள் தனித்தனியாக அயல் வட்டாரங்களுடன் குறைந்தளவு சமூகத் தொடர்புகளுடன் இயங்குவதைப் பற்றி மேலே குறிப்பிட்டோம். அடுத்து வேளாளர்களுக்குச் சேவைகளை வழங்கும் சேவைச் சாதிகள் (SERVICE CASTE) வேளாளர்களோடு இடையூடாட்டம் செய்வதைப் பற்றிக் குறிப்பிடுவோம். குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தின் வேளாளர்கள் தமது கிராமத்திற்குள் வாழும் பள்ளர் சமூகக் குழுவின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு சேவையை வழங்கும் கோவியர் சமூகக் குழு அயற்கிராமத்தவராக இருப்பர். இன்னொரு சேவைக் குழுவான நாவிதர் வேறொரு அயற்கிராமத்தவராக இருப்பர். இவ்விதமாகச் சாதிகளுக்கிடையிலான இடையுறவும் தொடர்புகளும் கிராமத்துக்குள்ளும் அதற்கு வெளியேயும் பரவிப் பரந்திருக்கும். இதனாலே கிராமங்கள் நெருக்கமான பிணைப்புகளால் பிணைக்கப்பட்டு ஒருமைத் தன்மையுடையனவாய் இருப்பதில்லை. மலினோவ்ஸ்கி என்ற மானுடவியலாளர் குறிப்பிடும் ஒருங்கிணைந்த (INTEGRATED) சமுதாயம் என்ற வருணிப்பு யாழ்ப்பாணத்தின் கிராமச் சமுதாயத்திற்கு பொருத்தமற்றது. இருந்தபோதும் யாழ்ப்பாணக் கிராமங்கள் நிஜமான இருப்பை உடையன என்பதை மறுப்பதற்கில்லை. அவற்றை வெறும் நிர்வாக அலகுகள் என்று குறுக்கிப் பார்க்க முடியாது. அவற்றுக்குப் பல நூற்றாண்டுக்களுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. சிறுப்பிட்டிக் கிராமம் பற்றிய ஆவணச் சான்றுகளில் மிகப் பழமையானது 1645 ஆம் ஆண்டுகுரியது. சில கிராமங்களின் மக்களின் குண இயல்புகளைப் பற்றிய பழமொழிகளும் சொல் வழக்குகளும் வாய்மொழி மரபாக வழக்கில் இருந்து வருகின்றன. பெரும்பாலானவர்கள் தம்மைத் தமது கிராமத்துடன் அடையாளப்படுத்திக் கூறுவர். மேலதிகத் தகவல்களை விடுத்து கேட்டால் மட்டும்தான், வாழும் வட்டாரம் அல்லது பகுதி பற்றிக் கூறுவர். இதனை விட கிராமத்தவர்களிடையே இன்னொரு மனப்பாங்கும் உள்ளது. ஒரு வட்டாரத்தின் கிராமம் முழுவதும் தமது என்ற கருத்துடையவராயும் வேறு வட்டாரங்களும் அங்கு உள்ளனவே என்ற எண்ணம் அற்றவராகவும் பேசுவதைக் காணலாம். ஒரு தடவை ஆண்டுத் தேர் திருவிழாவின்போது தேரை ஒரு வட்டாரத்தின் வேளாளர்கள் மட்டும் வடம் பிடித்து இழுப்பதைக் கண்டேன். கிராமத்தின் பிறவட்டாரங்களின் ஆட்களையும் தேர் இழுப்பதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? என நான் கேட்டேன். எனது வினாவை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அது பொருத்தமற்ற அநாவசியமான வினா என அவர்கள் கருதியிருக்க வேண்டும்.
முழுச் சமூகம் என்ற முறைமை தம்மைச் சுற்றியே சுழல்கிறது என்றும் பிற சாதியினரான தமது சேவகர்கள் தமக்குச் சேவை செய்வதற்காகவே உள்ளனர் என்றும் வேளாளர்கள் சிந்திக்கின்றனர் போல் தெரிகிறது. தமது உலகத்திற்குள் அடங்காதவர்களும் சேவைக் கடமைகளைச் செய்யும் தேவையற்றவர்களுமான சுதந்திரமுடைய சமூகக் குழுக்களான மீன்பிடித் தொழில் செய்யும் சமூகக் குழு, கைவினைத் தொழில் செய்யும் சமூகக் குழுக்கள் தம் மத்தியில் வாழ்கின்றனர் என்ற உணர்வும் இவர்களிடம் இருப்பதாகத் தெரிகின்றது. ஆயினும் வரலாற்று உணர்வுடைய வேளாளர்கள் சிலரும் கிராமங்களில் இருக்கின்றார்கள். அவர்கள் வேளாளர்களின் பொற்காலம் மறைந்து விட்டதே என்று கூறிக் கவலை தெரிவிப்பார்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதற்கு அமைய யாழ்ப்பாணத்தினதும் தஞ்சாவூரினதும் சாதி அமைப்பை ஒப்பீடு செய்வது எமது பிரதான நோக்கமாகும். இம் முடிவுரையில் இரு பகுதிக்கு உள்ள முக்கிய வேற்றுமைகளைக் குறிப்பிடுவோம். இவ்விரு சமூகங்களிற்கும் சாதியடிப்படையில் தெளிவாகத் தெரியும் முக்கிய வேற்றுமைகள் பின்வருவன: - யாழ்ப்பாணச் சமூகத்தில் பிராமணரின் வகிபாகம் தஞ்சாவூர்ப் பிராமணரின் வகிபாகத்தில் இருந்து முற்றிலும் வேறானது. யாழ்ப்பாணத்தின் பிராமண வகிபாகம் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அங்கு சடங்குகளும் (RITUALS) பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் (ECONOMIC OBLIGATIONS) இத்தகைய ஒன்றிணைத்த முறையைச் சாத்தியமாக்கியுள்ளன. தஞ்சாவூரின் வெவ்வேறு கிராமங்களில் வதியும் ஒரே சாதி ஆட்கள் இரத்த உறவு முறையாலும் சாதி என்ற பொதுமை அடையாளத்தாலும் (உதாரணம் பள்ளர் சாதி) ஒன்று சேருதல் உண்மையாயினும், தஞ்சாவூர்க் கிராமங்கள் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து நிற்கும் தன்மை உடையவை.
யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் கிராம ஐக்கியம் (VILLAGE UNITY) குறைந்த அளவிலேயே உள்ளது. ஆயினும் இவ்வாறான ஐக்கியக் குறைவு, கிராமத்தை நிலைகுலைவுக்கு ஆளாக்கும் நிலையை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக் கிராமங்கள் நீண்ட காலம் உறுதிநிலை (STABILITY) கொண்டனவாக இருந்து வந்துள்ளன. (IT IS A SYSTEM OF GREAT STABILITY)
கிராமங்களில் வன்முறை மோதல்கள் உருவாகும் சந்தர்ப்பங்கள் எவை என்பதைக்கொண்டு இரு பகுதிக்கு இடையிலான வித்தியாசங்களை அடையாளம் காணலாம். அத்தகைய மோதல்கள் (EXPLOSIONS) ஏற்படும் சூழல் இருவகையில் அமையலாம். - ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்கும் இடையிலான வன்முறைச் சண்டை.
- ஒரு கிராமத்திற்கு உள்ளேயே ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் இடையிலான சண்டை.
உதாரணமாக தஞ்சாவூரில் பிராமணர்கள் தமது கிராமத்திற்குள் வதியும் மற்றவர்களோடு முரண்பட்டு அவர்களை தண்டித்தல். அதேபோன்று யாழ்ப்பாணத்தின் வேளாளர்கள் தமது கிராமத்துக்குள் இருக்கும் பள்ளர் சாதியினரோடு முரண்பட்டு அவர்களை வன்முறை கொண்டு தண்டித்தல்.
மேற்குறித்த இரு சந்தர்ப்பங்களையும் மோதல் நிலை (EXPLOSIVE SITUATION) எனலாம். யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்கும் வன்முறையான சண்டை என ஒன்று நிகழ்வது கிடையாது. ஆனால் தஞ்சாவூரில் ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்கும் வன்முறைச் சண்டைகள் இடைக்கிடை இடம்பெறுவதுண்டு. யாழ்ப்பாணக் கிராமம் ஐக்கியப்பபட்ட ஒரு முறையன்று. அது தஞ்சாவூரின் ஐக்கியப்பட்ட ஒன்றித்த முறையில் இருந்து வேறுபட்டது. ஒரு கிராமத்தவர் ஒன்றுபட்டு இன்னொரு கிராமத்தோடு வன்முறை மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதில்லை.
அடுத்து, கிராமத்திற்குள் இடம்பெறும், ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்குமான மோதலை எடுத்துக் கொள்வோம். யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றில் பள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவரை அல்லது ஒரு குடும்பத்தை வேளாளர் குடும்பம் ஒன்று பிரச்சினை ஒன்றிற்காக வன்முறையை உபயோகித்துத் தண்டிக்கிறது எனக் கொள்வோம். அந்நிகழ்வு தனிப்பட்ட வேளாளர் குடும்பத்தின் விவகாரமாக முடிந்து போய்விடலாம். மோதலாகவும் மாறலாம். அப்போது குறித்த வேளாளர் குடும்பம் வாழ்கின்ற வட்டாரத்தின் (அல்லது குறிச்சியின்) வேளாளர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட பள்ளர் சாதி வாழும் வட்டாரத்தின் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அவ்வேளை, ஏனைய வட்டாரங்களில் (குறிச்சிகளில்) வாழும் வேளாளர்கள் நடுநிலையை வகிப்பர். அவர்களில் பெரும்பான்மையோர் வெறும் பார்வையாளர்களாக இருப்பார்களே அல்லாமல் வேளாளர் சாதி என்ற முறையில் அணி சேர்வதில்லை. குறித்த பள்ளர் சமூகத்தினர் கிராமத்தில் எல்லா வட்டாரங்களிலும் வேளாளர்களுக்குச் சேவைக் கடமையைச் செய்வார்களாதலால் அவர்களைத் தண்டிப்பதற்கு ஒன்று சேர்வதில் விருப்பம் அற்றவர்களாக நடுநிலையாகி விலகி நிற்பர். தஞ்சாவூரின் நிலை வேறானது. அங்கு பள்ளர் சாதிக் குழுவை பிராமணர்கள் ஒன்று சேர்ந்து தண்டிப்பார்கள். தனிப்பட்ட ஒரு பிராமண நிலக்கிழாருக்கு தன் பண்ணையில் வேலை செய்யும் பள்ளர் சாதிக் குடியானவன் மீது அனுதாபம் இருக்கலாம். ஆயினும் தண்டித்தல் என்ற விடயத்தில் குறித்த நிலக்கழாரின் தனிப்பட்ட அனுதாப உணர்வை பிராமணர் என்ற சாதி உணர்வு மறைத்துவிடும். யாழ்ப்பாணத்தில் மோதல்கள் ஏற்படும்போது கிராம எல்லைகளில் சாதியடிப்படையிலான எதிரணியாக ஒன்று சேர்த்தல் (POLARISATION) இடம்பெறுவதில்லை. இவ்வகையில் தஞ்சாவூரும் யாழ்ப்பாணமும் சாதிமுறையில் வேறுபடுகின்றன. யாழ்ப்பாணத்தின் சாதிமுறை தனித்துவமான பண்புகளை உடையது.
கட்டுரையின் இணைப்பு முதல் கமெண்டில்