ஆயினும் மைக்கல் பாங்ஸ் தமது ஆய்வு முடிவுகளை CASTE IN JAFFNA (யாழ்ப்பாணத்தில் சாதி) என்னும் கட்டுரையாக எழுதி வெளியிட்டார். இக்கட்டுரை E.R லீச் என்னும் மானிடவியலாளர் பதிப்பித்த ’தென்னிந்தியா, இலங்கை, வடமேற்குப் பாகிஸ்தான்’ ஆகிய நாடுகளின் சாதிகள் பற்றிய சில அம்சங்கள் நூலில் சேர்க்கப்பட்டது.பாங்ஸ் அவர்களின் மேற்குறித்த கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு தழுவியும் சுருக்கியும் இத்தமிழ் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பாங்ஸ் தமது கட்டுரையில் யாழ்ப்பாணத்தின் சாதிகளிடையேயான இடையூட்டாட்டத்தில் (caste interaction) முக்கியமான வகிபாகத்தைப் பெறும் 10 வரையான சாதிகள் பற்றிய தகவல்களைத் தருகின்றார். அவரது ஆங்கிலக் கட்டுரையில் சாதிப் பெயர்கள் வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையில், யாழ்ப்பாணத்தில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் சாதிப்பெயர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்படுவதில்லை என்பது மரபு. இதனை சமூகவியலாளர்களும் மானிடவியலாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். “சாதி” என்ற சொல்லிற்கு பதில் சமூகம் என்ற சொல்லாடல் உபயோகிக்கப்பட்டு வருவதையும், குறித்த ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிடுவதற்கு பதிலாக அச் சாதியின் தொழிலைக் கொண்டு சுட்டுவதையும் யாழ்ப்பாணத்தின் மரபாகக் காணலாம்.பாங்ஸின் ஆங்கிலக் கட்டுரையில் அவர் சாதிகளின் பெயர்களை ஆய்வு மரபுக்கேற்ப வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். ஆயினும் இத்தமிழ்க் கட்டுரையில் சாதிப் பெயர்கள் இயன்ற அளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. பாங்ஸ் கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதற்காக அவரது கூற்றாக அமையும் ஆங்கிலப் பெயர்கள் இடையிடையே தரப்பட்டுள்ளன. பாங்ஸ் கள ஆய்வு செய்த காலம் 1950 களின் முற்பகுதி என்பதும் அவர் குறிப்பிடும் சமுதாய உறவுகள் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம்.இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு சுண்ணாம்பு கற்பாறைகளினாலான புவிச்சரிதவியல் பண்பைக் கொண்ட நிலப்பகுதியாகும். இங்கு தரைமேற்பகுதி நீர் நிலைகள் மிகக் குறைவு: ஆனால் தரைக்கீழ் நீரை போதிய அளவு கிணறுகள் மூலம் பெற முடிகிறது. நெல் இங்கு மனாவாரியாகப் பயிரிடப்படுகின்றது. கிணற்று நீர்ப்பாசனம் மூலமாக புகையிலை, வெங்காயம், மிளகாய் ஆகிய தோட்டப் பயிர்கள் சந்தைக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. வான் பயிரான பனை மரங்கள் குடாநாடு எங்கும் காணப்படுகின்றன. வீட்டு வளவுகளில் தென்னைகள் நிறைந்து சோலையாகக் காணப்படும். சுருட்டு உற்பத்தி முக்கியமான சிறு கைத்தொழில் ஆகும். சிமெந்துத் தொழிற்சாலையொன்றும் தேங்காய் எண்ணெய் வடிக்கும் ஆலை ஒன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. இவை தவிர கைத்தொழிற்சாலைகள் என்று சொல்லக்கூடிய எவையும் யாழ்ப்பாணத்தில் இல்லை. யாழ்ப்பாணத்தை வெளி உலகத்துடன் தொடர்பற்ற ஒரு பிரதேசம் எனவும் கூற முடியாது. யாழ்ப்பாணத்தின் கல்வித்தரம் மிக உயர்வானது. அது தென்னிலங்கைக்கு பெருமளவில் மனித வளத்தை ஏற்றுமதி செய்துள்ளது. படித்த யாழ்ப்பாணத்தவர்கள் மலாயாவிற்கும் தொழில் வாய்ப்புத் தேடிச் சென்றுள்ளனர்.வரலாற்று நோக்கில் பார்த்தால் யாழ்ப்பாணம் தென்னிலங்கையுடனும், இந்தியாவின் தமிழகத்துடனும் தொடர்புடையதாக உள்ளது. இன்று யாழ்ப்பாணத்தின் மொழி, பண்பாடு, சமயம் என்பனவற்றில் இந்து சமயத்தின் செல்வாக்கு அதிகமாக வெளிப்படுகின்றது. ஆனால் இத்தகைய செல்வாக்கு கடந்த காலத்தில் தொடர்ச்சியாக இருந்ததாகக் கொள்ள முடியாது. சாதி என்னும் நிறுவனம் இந்தியத் துணைக் கண்டத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுவதுண்டு. நான் இந்தக்கட்டுரையில் தென்னிந்தியாவின் தஞ்சாவூர்ப் பகுதியின் சாதிய அமைப்பையும் சாதி முறையையும் யாழ்ப்பாணத்தின் சாதி முறையுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்ட முயன்றுள்ளேன். யாழ்ப்பாணம், பாக்கு நீரிணைக்கு அப்பால் தென்னிந்தியாவிலிருந்து ஏறக்குறைய 28 மைல் தூரத்தில் உள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள் யாவும் தென்னிந்தியாவிலிருந்து பெறப்பட்டவை எனக் கூற முடியாது. யாழ்ப்பாணத்திற்கே உரிய தனித்துவக் கூறுகள் பலவும் உள்ளன.யாழ்ப்பாணத்தின் சமூக அடுக்கமைவுயாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் முக்கியமான இயல்புகள் பின்வருவன : 1. இங்கு பல அகமணக் குழுக்கள் உள்ளன. இவை மேல், கீழ் என்ற அடுக்கமைவுப் பாங்கில் அமைந்துள்ளன.2. துடக்கு எனும் கருத்து யாழ்ப்பாணத்தின் சாதி நடைமுறையில் உள்ளது.3. சடங்கியல் சேவைகள் மூலம் சாதிகள் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கும் முறை செயற்படுகின்றது.4. அடுக்கமைவில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தரவரிசையில் (Rank Order) ஒரு இடத்தைப் பெற்றிருக்கும். ஒவ்வொரு சாதிக்கும் வழமைப்படியான நடத்தை முறைகள் இருக்கும். இந்நடத்தை முறைகள் சாதி வேற்றுமையின் குறியீடுகள் (Symbols of Rank difference) ஆகும்.மேலே குறிப்பிட்ட அடுக்கமைவுகள்*பொருளியல் தங்கியிருத்தல், *அரசியல் தங்கி இருத்தல், *சமயச் சடங்கு நிலையில் தங்கி இருத்தல் என்ற மூன்று வழிகளில் இணைகின்றன.சமூக அடுக்கமைப்பைத் தீர்மானிக்கும் சமூக வர்க்கங்கள் (Social class) என்ற கருத்து யாழ்ப்பாணத்திற்குப் புதியது. யாழ்ப்பாணத்தின் நகர அல்லது பட்டினப் பகுதிகளில் மட்டுமே இது ஓரளவுக்குக் காணப்படுகின்றது. கிராமங்களில் வர்க்கம் என ஒன்று கிடையாது. இதற்குக் காரணம் பொருளாதாரம், கல்வி என்பனவற்றில் உள்ள வேறுபாடு கிராமங்களில் நேரடியாகவே சாதி வேறுபாடாக, சாதி உறவில் வெளிப்படுகின்றது. வர்க்கம், சாதி என்று இரண்டையும் யாழ்ப்பாணச் சமூகச் சூழலில் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடியாது. வர்க்கம் பிரமிட் மாதிரி அமைப்பில் உருவகப்படுத்தப்படுவது. ஒரு பிரமிட் அமைப்பின் அடிப்பகுதி விரிந்ததாக இருக்கும். விரிந்த இந்த அடிப்பகுதியில் கீழ் அடுக்குகளில் உள்ள உழைப்பாளர்களான அடித்தள மக்கள் உள்ளடக்கப்படுகின்றனர். இவர்களே எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர். பிரமிட்டின் மேற்பகுதி ஒடுங்கியது. இப்பகுதி சிறிய எண்ணிக்கையினரான உயர் வகுப்பினரைக் உள்ளடக்கியது. யாழ்ப்பாணத்தில் உயர் சாதியினராகக் கருதப்படுவோர் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராகவும் சாதிப்படியில் தாழ் நிலையில் உள்ளோர் சனத்தொகையில் சிறிய பங்கினராயும் உள்ளனர். இந்தக் காரணத்தினால் யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பை விளக்குவதற்குப் பிரமிட் உருவகம் பொருத்தமற்றது.உயர்சாதியினர் பெரும் எண்ணிக்கையில் இருப்பதனால் அவர்களுக்கு சமூகத்தின் மீது கட்டுப்பாட்டைச் (Social control) செலுத்துவது எளிதாகக் கைகூடுகிறது. அவர்கள் அரசியல் மேலாதிக்கம் (Political dominance) உடையவர்களாய் உள்ளனர். ஆயினும் உயர்சாதி என்பதை உயர்வர்க்கம் (Upper class) எனப் பொருள்கொள்ள முடியாது. வேளாளர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக உள்ளமையினால் அரசியல் மேலாத்திக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆயினும் இவர்களில் பெரும்பான்மையோர் உழவுத் தொழிகளில் ஈடுபடுகின்ற உழைப்பாளர்களாக இருப்பதனால் பொருளாதார ஆதிக்கமுடைய உயர் வர்க்கமாக வேளாளர்களைக் கருத முடியாது.சாதி, வர்க்கம் என்ற அடுக்கமைவை விட இன்னொரு அடுக்கமைவு யாழ்ப்பாணத்தில் உள்ளது. இதனைச் சொந்தகாரச் சாதி அடுக்கமைவு என்று கூறலாம். வேளாளர் என்ற பெயரை உடைய சாதிக்குள், பெயரில்லாத உபசாதிக் குழுக்களாக சொந்தக்காரச் சாதிகள் உள்ளன. பேச்சுவழக்கில் ’என்னுடைய சொந்தக்காரர்’ என்ற தொடர் சாதிக்குள் சாதியாக அமையும் ‘அகமணக் குழுக்களை’ குறிப்பிடுகின்றது. பெயர் இல்லாத இச் சொந்தக்காரச் சாதிகள் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற அடுக்கமைவை சாதிக்குள் உருவாக்கியுள்ளன. சுருங்கக்கூறின் மூன்று வகையான சமூக அடுக்கமைவுகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன.1. வேளாளர் முதலிய பெயருடைய சாதிகளின் அடுக்கமைவு2. வர்க்க அடிப்படையிலான அடுக்கமைவு3. சொந்தக்காரச் சாதி என்னும் அடுக்கமைவுயாழ்ப்பாணத்தின் சாதிமுறையாழ்ப்பாணத்தின் சாதிகள் அனைத்தும் ஒருசேர வாழும் குடியிருப்புகளை உடையவை. யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கிராமம் எதனையும் குடாநாட்டில் காணமுடியாது. சிறுப்பிட்டி என்ற கிராமத்தின் தரவுகளைப் பிரதான ஆதாரமாகக் கொண்டும் ஏனைய கிராமங்களில் பெற்ற தரவுகளைத் துணையாக கொண்டும் யாழ்ப்பாணத்தின் சாதிமுறை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. சாதிகளுக்கு இடையிலான இடையூட்டாட்டத்தை (Caste Interaction) ஒரு கிராமத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு விளக்க முடியாது. சாதிகளுக்கு இடையிலான இடையூட்டாட்டத்தை மட்டுமல்லாது சாதிகளின் தரவரிசையினையும் (Rank order) ஒரு கிராமத்தை ஆதாரமாகக் கொண்டு தெளிவாக எடுத்துக் கூற முடியாது. இதற்குரிய பிரதான காரணம் யாழ்ப்பாணத்தின் எந்தவொரு கிராமமும் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுச் செயற்பாடுகளில் குவிமையமான தனித்த நிர்வாக அலகாக காணப்படவில்லை.யாழ்ப்பாணத்தில் 48 வரையான சாதிகள் உள்ளன. இவற்றுள் ஒரு சில சாதிகள் பெரும்பாலான கிராமங்களில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் அளவில் சிறியன. அவற்றில் எல்லாச் சாதிகளும் ஒருசேர வதிவதைக் காணமுடியாது. யாழ்ப்பாணத்தின் 11 கிராமங்களில் மட்டும் 17 சாதிகள் ஒருங்கே வதிவதைக் காணலாம். அங்கு 18 கிராமங்கள் ஒரு சாதிக் கிராமங்களாக உள்ளன.சிறுப்பிட்டிக் கிராமத்தின் முக்கியமான சாதிகளாக பிராமணர், வெள்ளாளர், கோவியர், நாவிதர், வண்ணார், பள்ளர் என ஆறு சாதிகளைக் குறிப்பிடலாம்.இவை முக்கியமானவை எனக் கூறுவது அவற்றின் சனத்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் அன்று. சாதிகளுக்கு இடையிலான இடையூட்டாட்டத்தில் (Caste Interaction) அவை பெறும் முக்கியத்துவத்தினாலேயே அவை இவ்விதம் அடையாளப்படுத்தப்பட்டன. இவை இடையூட்டாட்டத்தில் முக்கியமான செயலைச் (Function) செய்கின்றன. சிறுப்பிட்டியில் சாதிகளுக்கு இடையிலான இடையூட்டாட்டத்தில் எவ்வித பங்கும் பெறாத முக்கியமற்ற சாதிகள் (Un-important castes) சில உள்ளன. சிறுப்பிட்டியின் சில சாதிகள் தனது கைவினை உற்பத்திகளைச் சந்தையில் விற்போர் என்ற முறையில் பிறருடன் தொடர்பு கொள்கின்றன. இது சந்தை உறவாக (Market relationship) அமைந்ததுள்ளதால், சாதி ஊடாட்டத்தில் இச்சாதிகள் பங்கு கொள்வதில்லை. சிறப்புத் தொழில் தேர்ச்சி உடைய சாதிகளான தச்சர், கொல்லர், தட்டார் எனும் மூன்று சாதியினரும் யாழ்ப்பாணக் கிராமங்களில் சாதி ஊடாட்டங்களில் பங்குபெற்றுவதில்லை. அவர்களின் உறவு சந்தை உறவாக அமைந்துள்ளது. பண்டாரம், நட்டுவர் ஆகிய இரு சாதியினர் சிறிய எண்ணிக்கையினராயினும் கோவில்களிலும் வீடுகளிலும் நடைபெறும் சடங்குகளில் இவர்களின் பங்கேற்பு முக்கியம் பெற்றுள்ளது.கிராமக் கோவில்கள் பலவற்றில் பிராமணர்கள் பூசை செய்வதில்லை இவ்வகை நாட்டார் கோவில் சடங்குகளின் போது பறை வாத்தியம் இசைக்கப்படும். பறையிசை வழங்கும் சாதியினரும் இடையூட்டாட்டத்தில் முக்கியம் பெறுபவர்கள். இவர்கள் மரணச் சடங்கின்போது பறையிசை வழங்கும் வேலையை செய்வர். சாதிகள் இடையூட்டாட்டத்தில் பங்குபெறாத பிறசாதிகளைப் பற்றி இக்கட்டுரையில் விவரித்துக் கூறும் தேவை எழவில்லை.யாழ்ப்பாணச் சாதியமைப்பின் தனித்துவ இயல்புகள்யாழ்ப்பாணத்திற்கு உரியதான தனித்துவமான இயல்புகள் சில, தென்னிந்திய தமிழர்களின் சாதி அமைப்பில் இருந்து அதனை வேறுபடுத்திக் காட்டுவனாக உள்ளன. அவற்றை அடுத்து நோக்குவோம்.1.விதவை மணம் கணவனை இழந்த பின் மறுமணம் செய்யும் பெண்கள் தூய்மை அற்றவர்கள் என்ற கருத்து யாழ்ப்பாணத்தில் இல்லை. பிராமணர்களிடம் மட்டுமே விதவை விவாகத்திற்கு தடை உள்ளது. இவ்வாறு கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதற்குத் தடை விதிப்பது அவர்களுக்கே உரிய புறநடையான வழக்கமாகவே பார்க்கப்படுகிறது. அதனை நல்லது என்றோ, போற்றத்தக்கது என்றோ யாழ்ப்பாணத்தவர்கள் கருதுவதில்லை. பிராமணர் அல்லாத எல்லாச் சாதியினரும் 31 நாட்கள் துடக்கைப் பேணுவதை இங்கு காணமுடிகின்றது. பிராமணர்கள் குறைந்த நாட்கள் துடக்கைப் பேணுவதால், வெள்ளார் தம்மை விட பிராமணர் உயர்ந்தவர் எனக் கருதுவதில்லை. யாழ்ப்பாணத்தில் வருணாசிர தர்மத்தை பற்றிய அறிவு பொதுவாக இல்லை. அதனைப் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. அதனைத் தெரிந்தவர்கள் கூட ’நாம் சூத்திரர் தான் அதனால் என்ன, நாம் இழிந்தவர்கள் அல்லவே’ என்றவாறு சிந்திக்கின்றார்கள். பிராமணர்கள் போன்று கோயில் சடங்குகளுடன் தொடர்புடைய பண்டாரம் (துணைப் பூசகர்) நட்டுவர் (இசைக் கலைஞர்) என்ற இரு சாதியினரும் குறைந்த அளவு நாட்களே துடக்கை அனுசரிக்கின்றார்கள். அந்தக் காரணத்தால் வேளாளர் அவர்களை சாதித் தரவரிசையில் உயர்ந்தவர்களாகவோ, தூய்மையுடையவர்களாகவோ கருதுவதில்லை. யாழ்ப்பாணத்தில் பூணூல் அணிவது அந்தஸ்து உயர்வை வழங்குவதாகக் கருதப்படுவதில்லை. பிராமணர்களும் இங்கு வந்து குடியேறியவர்களுமான கைவினைச் சாதியினர் சிலரும் மட்டுமே பூணூல் அணிகின்றனர்.2. சலவைத் தொழில் சமூகக் குழுசலவைத் தொழில் செய்பவர்களான வண்ணார் யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் முடி திருத்தும் தொழிலைச் செய்யும் நாவிதர் கோவில்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இவை தென்னிந்திய வழமைக்கு மாறுபட்ட ஒரு நடைமுறை. அங்கே இது எதிர் வழமாக உள்ளது. இதனை யாழ்ப்பாணத்தவர்கள் நன்கு அறிவர். இந்த வேறுபட்ட நடைமுறையை அவர்கள் நியாயப்படுத்தும் காரணத்தைக் கூறுகின்றார்கள். கோயில்களுக்கு சேலைகளைக் கட்டி அலங்கரிக்கும் பணியைச் செய்பவர்கள் சலவைத் தொழிலாளர்கள். அவர்கள் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் எனக் காரணம் கூறப்பட்டுள்ளது. எவ்விதம் இருப்பினும் துடக்கு சீலையைச் சலவை செய்தல் துடக்கை ஏற்படுத்தும் தொழில் எனவும் நம்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் தஞ்சாவூரிலும் பிற இடங்களிலும் மேற்படி இரு சாதியினருக்கும் இடையில் யார் தரவரிசையில் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்பது தொடர்பான சர்ச்சை உள்ளது. இரு சாரரும் தாமே உயர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்வர். இந்தப் பிரச்சினையில் பிற சாதியினர் உறுதியான முடிவைத் தீர்மானிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் இந்தப் போட்டியும், சர்ச்சையும் எழுந்தமானமானது. இதற்கு அமைப்பியல் முக்கியத்துவம் (Structural significance) எதுவும் கிடையாது. யாழ்ப்பாணத்தில் இன்று (1952 இல்) அவதானிக்கக் கூடிய இன்னொரு விடயம் கவனிப்புக்குரியது. வண்ணார் சாதி, யாழ்ப்பாணத்தின் பணக்காரச் சாதிகளில் ஒன்றாக மாறி வருகின்றது. அதேவேளை நாவிதர்கள் வறியவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் தரவரிசையில் இப்போது உள்ள நிலை மாறும் எனக் கூறுவதற்கில்லை. 3.யாழ்ப்பாணத்தவர் கண்ணால் காணாத சாதிதமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ‘துரும்பர்’ என்னும் பெயருடைய சாதி இருப்பதை பற்றி ஹட்டன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் (Hutton 1946:199). யாழ்ப்பாணத்திலும் கண்ணால் காண முடியாததாக இச்சாதி இருந்து வருகிறது. பள்ளர், நளவர், பறையர் ஆகிய சாதியினரின் உடைகளைச் சலவை செய்யும் தொழிலை இவர்கள் செய்து வருகின்றனர். பகல் வேளைகளில் வெளியே இவர்கள் நடமாடுவதில்லை. இரவு வேளையில் பனையின் காவோலை ஒன்றை இவர்கள் தம் பின்னால் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியதாய் இருந்ததாம். ’காவோலைச் சத்தத்தை எழுப்புவதன் மூலம் தாம் உலாவுவதை அறிவித்தல்’ என்று இதற்கு ஒரு விளக்கம் உள்ளது. மறுநாள் விடிந்ததும் காவோலை இழுபட்டதால் ஏற்பட்ட அடையாளத்தைக் கொண்டு அவர்கள் நடந்த பாதையில் மிதிப்பதை உயர் சாதியினர் தவிர்ப்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டது என்ற இன்னொரு விளக்கமும் உள்ளது. இப்பொழுதும் கூட துரும்பர்கள் பகல் வேளைகளில் வெளியே வருவதில்லை. பெரும்பான்மையினரான வேளாளர்களுக்கு அப்படியொரு சாதியினர் இருப்பது பற்றியே தெரியாது. இருப்பினும் செய்வினை – சூனியம் செய்வதில் வல்லவர்களான இந்தச் சாதியினரோடு பிற சாதியினர்களுக்கு தொடர்பும் பரிச்சயமும் இருந்து வருகிறது. இவ் வேலைக்குப் புகழ் பெற்றவர்களான செய்வினைக்காரர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு எதிரிகளைக் கொலை செய்யவோ அல்லது அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ சக்தியுடையவர்களாக உள்ளனர். ஆயினும் சாதாரணமாக யாழ்ப்பாண சமூக முறைமையில் இருந்து வேறுபடுத்தியே இவர்கள் நோக்கப்படுகின்றனர். 4.சடங்கியல் சமத்துவமும் – உலகியல் சமத்துவம் இன்மையும்வேளாளர் – கோவியர் உறவுகளில் சடங்கியல் அதிகாரம், உலகியல் அதிகாரம் பிளவுபட்டு இருப்பதைக் ((The sacred secular split) காணமுடியும். வேளாளர் – கோவியர் அந்தஸ்து உறவுமுறை புதுமையானது. வேளாளர் கோவியர்களைவிட அந்தஸ்தில் உயர்வானவர்கள் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட விடயம். குறிப்பாக வேளாளர்கள் உலகியல் அதிகாரத்தில் உயர்ந்து நிற்பது வெளிப்படை. முற்காலத்தில் கோவியர்கள் வேளாளர்களின் அடிமைகளாக இருந்தனர். ஆயினும் இன்று சடங்கியல் நிலையில் சமத்துவம் உடையோர் (Ritual equals) என்றே பார்க்கப்படுகின்றனர். கோவியர் சமைத்த உணவை வேளாளர் உண்பர். அவர்களைத் தமது வேலையாட்களாக வேளாளர் வைத்திருப்பதும் உண்டு. கோவியர் வீட்டு திருமணச் சடங்கில் வேளாள எசமான் விருந்தினராக அழைக்கப்படுவதுண்டு. அங்கு அவர்கள் உணவு உண்பதுண்டு. வேளாளர் வீட்டுத் திருமண நிகழ்வுகளில் உணவு சமைத்தல் வேலையைக் கோவியர் செய்வர். முற்காலத்தில் வேளாளர் கோவியப் பெண் ஒருவரை இரண்டாவது பெண்ணாக (Concubine) வைத்திருப்பதுண்டு. அவ்வுறவால் பிறந்த பிள்ளைகள் இன்று வேளாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். வேளாளர்களின் மரணச் சடங்கின் போது பிணத்தைப் பாடையில் வைத்து சுடலைக்கு எடுத்துச் செல்லும் வேலையைக் கோவியர் செய்வர். வேளாளர் ஒருவருக்குப் பணிவிடை செய்த கோவியர் ஒருவரின் மரணச் சடங்கின் போது குறித்த வேளாளர், பிணம் சுடலைக்கு எடுத்துச் செல்லப்படும் முன்னர், பாடையில் கையால் தொடுவார். அதன்பின் பிணம் தூக்கிச் செல்லப்படும். இவ்வாறு தொடுதல் மூலம் தான் கோவியருக்கு சமத்துவமானவர் என்பதை உறுதி செய்கின்றார். அல்லது அதனை ஒப்புக் கொள்கின்றார்.வேளாளர் – கோவியர் சடங்கியல் சமத்துவத்தை நியாயப்படுத்தும் தோற்ற மூலப் புனைவு (Origin myth) இன்றும் வழக்கில் உள்ளது. வேளாளர்களால் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட சிங்கள கொவிகமவின் சந்ததியினரே கோவியர் என இந்தக் கதை குறிப்பிடுகின்றது. இப்புனைவு கோவியர் அடிமையாக்கப்படுவதற்கு முன்பு சமத்துவம் உடையவர்களாக இருந்தனர் என்பதை உணர்த்துகிறது. கோவியர் தரவரிசையில் வேளாளருக்கு அடுத்த நிலையைப் பெறுகின்றனர். வேளாளர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் எனக் கொண்டால் தரவரிசையில் பிராமணர் இரண்டாம் இடத்தையும், பிராமணர் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றால் இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே வேளாளருக்கும் கோவியருக்கும் கிடைக்கும். 5. பிராமணர் – வேளாளர் உறவு : தெளிவற்ற புதிர்இந்துச் சாதி அமைப்பின் உச்சப்படி நிலையில் பிராமணர்கள் உள்ளனர் என்பது இந்து சமூகத்தினர் யாவருக்கும் பொதுவான உண்மை என்ற கருத்து உண்டு. ஆனால் இதற்கு மாறாக இடத்துக்கு இடம் வித்தியாசங்கள் உள்ளன. மிக உயர்ந்த இடத்தை வழங்குதல், தாழ்ந்த இடத்திற்கு தாழ்த்துதல் என்ற இந்த இருமுகப் போக்கு (The ambivalent position of Brahmins) பிராமணர் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. மலையாளத்தில் குறிஞ்சிகன் என்ற அடிநிலைச் சாதியினர் பிராமணர்கள் தம் வீட்டுக்குள் புகுந்தால் வீடு தீட்டுக்கு உள்ளாகிவிடும் என நம்புவதாக ஹட்டன் குறிப்பிட்டுள்ளார். மகா பிராமணர் என்போர் இறந்தவரின் உடலுக்கு மரணச் சடங்குகளைச் செய்பவர்கள் என்ற காரணத்தால் தாழ்ந்தவர்களாக ஒதுக்கி வைக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் என்ற சிறு சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் அந்தஸ்தில் தாழ்ந்தவராக கருதப்படுகின்றனர் (1952 ஆம் ஆண்டு காலம்). தென்னிந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான விசேட புறநடையான நிலைமைகள் காணப்படுகின்றன.சாதி முறையின் குண இயல்புகளில் தூய்மை(Purity), துடக்கு (Pollution) எனும் இரு அம்சங்கள் உள்ளன. தூய்மையுடையது புனிதமானது என்றும் துடக்குடையது புனிதமற்றதென்றும் கருதப்படுகிறது. இந்தக் கருத்தியல் பிராமணர் – வேளாளர் உறவில் தெளிவற்ற புதிராகவே உள்ளது. தோற்றம் வேறு யதார்த்தம் வேறு என்ற உண்மையை யாழ்ப்பாணத்தின் பிராமணர் – வேளாளர் உறவில் காணலாம். குடித்தொகையில் மிகச் சிறிய எண்ணிக்கையுடைய பிராமணர்களில் பெரும்பான்மையினர் கோயில்களில் பூசை செய்பவர்களாகவே உள்ளனர். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலமான 16ம் 17ம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து இவர்கள் துரத்தப்பட்டதால் சிறுபான்மையிராக ஆயினர் எனக் கருதப்படுகிறது. எனினும் இக்கருத்து ஆய்வுக்குரியது. போர்த்துகேயர் காலத்துக்கு முன்பிருந்தே யாழ்ப்பாணத்தில் பிராமணர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்றும் கருத இடமுண்டு.யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் பூசை செய்யும் கோயில்களின் உடைமை அப்பிராமணர்களுக்கு உரியனவல்ல. அதற்குப் புறநடையான சில உதாரணங்கள் உள்ளன. யாழ்ப்பாணக் கோயில்களின் உடைமையாளர்களான வேளாள முகாமையாளர்களிடம் சம்பளத்துக்கு பூசை செய்வோராகவே பிராமணர்கள் உள்ளனர். நகரப் பகுதியில் உள்ள கோயில்களிலும் தல யாத்திரைத் தலங்களாக விளங்கும் கோயில்களிலும் சிலவற்றைப் பிராமணர்கள் தமது உடைமையாக வைத்திருக்கின்றனர். வேறு சில கோயில்களில் உடைமை வேளாளர்களுக்கு உரியதாயினும் பூசை செய்யும் உரிமை பரம்பரை உரிமையாக பிராமணர் குடும்பங்களுக்கு இருந்து வந்துள்ளது. ஆயினும், அவர்கள் வேளாளர்களிடம் சம்பளம் பெறுபவர்களாகவே இருப்பர். கோவில்களின் உடைமையாளர்களான வேளாளர்களின் செல்வாக்கு முகாமை என்ற எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதன்று. கோவில்களில் சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற நுணுக்க விபரங்களிலும் தலையிடும் உரிமை அவர்களுக்கு உள்ளது.கோவில் பூசை உரிமை, கோவிலின் உடைமை என்பன தொடர்பாக பல நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. சில வழக்குகளில் பரம்பரை பரம்பரையாகத் தமது மூதாதையர்கள் காலம் முதல் கோயில் பூசகர்களாகத் தாம் இருந்தமையைக் கூறித் தமக்கே கோயில் உடைமையானது என பிராமணர்கள் வாதாடினர். ஆனால் நீதிமன்றங்கள் இவ்வாதங்களை ஏற்காமல் வேளாளர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தன. யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் அபிப்பிராயமும் வேளாளர் உடைமைக்கு சாதகமானது. சில வழக்குகளில் பூசை உரிமை பிராமணர்களுக்கு உண்டு எனத் தீர்மானிக்கப்பட்டது.கோயில்களின் பூசகர்களான பிராமணர்கள், முகாமையாளர்களின் கீழ் சேவை செய்பவர்கள். இவ்வாறு சேவை செய்பவர்கள் புனிதம் (Sacred) என்ற அந்தஸ்து நிலையுடன் முரண்படுவதென்பது கவனிக்கத் தக்கது (STEVENSON 1954). வேளாளர்கள் சனத்தொகையில் 50 வீதத்தினராக இருப்பது அவர்களுக்குப் பலத்தை அளிக்கிறது. இதனைவிட அரசியல் பலமும், பொருளாதார வளப்பலமும் அவர்களிடம் உண்டு. இருந்த போதும் பிராமணரைக் கண்டதும் மரியாதை செய்து இருக்கையில் இருந்து எழுந்து நிற்பதும், பணிவான சொற்களில் உரையாடுவதும் வேளாளர்களின் நடத்தையில் காணப்படும். இந்தப் பணிவு உண்மையில் ஒரு வெளித் தோற்றமாகும். பிராமணர்கள் திமிரான மிடுக்கான போக்கில் நடந்து கொள்வதை வேளாளர் அனுமதிப்பதில்லை. பிராமணர் எப்படி ஒழுக வேண்டும் என்பதை வேளாளர் அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தி உள்ளனர். வேளாளரை நோக்கி பணிவற்ற சொற்களால் விளித்து உரையாடும் பிராமண நடத்தை ஏற்புடையதல்ல. பிராமணர்கள் எளிமை, அடக்கம், பணிவு, பொறுமை, தற்பெருமை இன்மை ஆகிய பண்புகளை உடையவர்களாக இருப்பதே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான பண்பு இல்லாத பிராமணர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை. சில பிராமணர்கள் ஆசிரியர் எழுதுவிளைஞர் போன்ற பதவிகளில் இருந்து வருகின்றார்கள். இவ்வாறான பதிவிகளில் இருக்கும் பிராமணர்களுக்கு பூசர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் சக வேளார்களைப் போன்றே நடத்துப்படுவார்கள். பூசகர் என்ற பதவிக்குக் கொடுக்கப்படும் மரியாதை சக வேளாளர்களைப் போன்றே அவர்கள் நடத்தப்படுவர்.எல்லை மீறி நடக்கும் பிராமணர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வேளாளர் தயங்குவதில்லை. பூசகர்களாக இருந்து கொண்டு கோயில் உடைமை தமக்கே என்று தகராறு செய்த பிராமணர்களை நீக்கிவிட்டு வேறு பூசகர்களை நியமனம் செய்தமைக்குப் உதாரணங்கள் பல உள்ளன. கோயில் நிர்வாகத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் தேவை வேளாளர்களுக்கு இருந்தது. முகாமையாளர் ஒருவர் தமக்கு பின்னர் முகாமையாளர் உரிமையை மகனுக்குக் கொடுப்பார். மகன் இல்லாவிடத்தில் கிட்டிய உறவினருக்கு அவரின் உரிமை கொடுக்கப்படும். இவ்விதமாக கோயில்களின் உரிமையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.திருப்தியற்ற நடத்தைக்காக பிராமணர்கள் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு உதாரணங்கள் உள்ளன. சிறுப்பிட்டிக்கு அருகே உள்ள கிராமத்தில் ஒரு சத்திரம் உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள இரண்டாம் நிலைக் கல்வி நிலையத்துடன் இணைந்து சத்திரம் என்ற நிறுவனமும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாக இருந்து வந்தது. சத்திரத்தை நடத்துவதற்கு பிராமணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததால் வழிபோக்கருக்கு உணவு சமைத்து அன்னதானம் கொடுப்பது அவரது கடமை. இதனை விட ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் இரண்டாம் நிலைக் கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு (பொங்கல், மோதகம் என்பன போன்ற) சுவை உணவை வழங்குவதும் அவரது கடமை. சில ஆண்டுகளுக்கு முன் சத்திரத்தின் பொறுப்பாளராக இருந்தவர் மாணவர்களுக்கு குறித்த ஆண்டு விழா தினத்தில் திருப்தியான முறையில் உணவை வழங்கவில்லை. அவர் சத்திரத்தின் பணத்தை கையாடல் செய்தார் என்ற சந்தேகம் எழுந்தது. வேளாளர் சமூக இளைஞர் குழுவினர் அவரைப் பிடித்து நையப்புடைத்தார்கள். அந்தப் பிராமணர் தாம் திருந்தி நடப்பதாக வாக்குறுதி கொடுத்ததும் அவரை அவர்கள் மன்னித்து விட்டனர். அந்த நிகழ்வின் பின்னர் பிராமணர் தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றி வந்தார்.யாழ்ப்பாணத்தின் பிராமணர்கள், தம்மைச் சமூகம் எவ்வாறு ஒழுக வேண்டும் என்று நினைக்கின்றதோ அதன்படி ஒழுகி வருகின்றனர். இவ்வாறு நல்லொழுக்கம் உடையவர்களாகவே பெரும்பான்மையினரான பிராமணர்கள் இருந்து வருகிறார்கள். வேளாளர் -பிராமணர் உறவு எவ்வித குரோத உணர்வும் அற்றதாக இருந்து வருகிறது. தமது குடும்பத்தின் புரோகிதராக இருக்கும் பிராமணர் குடும்பத்தின் மீது அன்புடையவராக வேளாளர் நடந்து கொள்வர். கிராமத்தின் எல்லா வேளாளர்களுக்கும் சமயச் சடங்கியல் சேவைகளைச் செய்பவர்களாக பிராமணர் உள்ளதால், உயர் அந்தஸ்துடைய சொந்தக்காரச் சாதிக் குடும்பங்களோடும் பிராமணர் குடும்பத்திற்கு சிறப்பான உறவு இருப்பதுண்டு. தமது பிராமணரின் பெருமையைப் போற்றும் உயர்ந்த அந்தஸ்துடைய சொந்தக்காரச் சாதி தமது அந்தஸ்தை அவ்வுறவு மூலம் வெளிப்படுத்திப் பெருமை கொள்வர். பிராமணர்கள் உயர்ந்த அந்தஸ்துள்ள சொந்தக்காரச் சாதிக்கு சேவையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவர். ஒரு பிராமணருக்கும் ஒரு வேளாளருக்கும் இடையே மனக் கசப்பு இருக்கலாம். அது விதிவிலக்கானதும் தனிப்பட்டதுமான விடயமாகவே இருக்கும். ஆனால் பொதுவாக யாழ்ப்பாணத்தில் பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் இடையே பகைமை உணர்வு காணப்படுவதில்லை. தஞ்சாவூரிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பிராமணருக்கு எதிரான உணர்வு உள்ளது. அதனைப் போன்ற பிராமண எதிர்ப்புணர்வு யாழ்ப்பாணத்தில் கிடையாது. யாழ்ப்பாணத்தவர்கள் திராவிடர் கழகம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திராவிடர் கழகத்தின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுக்கு யாழ்ப்பாணத்தில் வரவேற்புக் கிடையாது.கட்டுரையின் இணைப்பு முதல் கமெண்டில்