அவர் ஆட்சிமீது குறை கண்டும்,
இண்டுஇடுக்கில் நுழைந்து
கண்டுபிடிக்க முற்படுவதும் –
பலருக்கு அன்றாட வேலையாயிருக்கிறது!
நான் வள்ளுவன் ஆள்.
கனியிருக்க காய் புசிக்கப் புகாதவன்.
மிகை நாடி மிக்கக் கொள்பவன்.
மெய்ப்பொருள் காண்கிறவன்.
எனக்கு
ரெண்டாமாண்டு ஸ்டாலின் ஆட்சி வரை –
கண்ணில் புலப்பட்டதெல்லாம் …..
அவர் போராடிய மக்களை
சுட்டுக் கொல்லவில்லை.
“அப்படியா, 13 பேர் செத்துப் போய்விட்டார்களா, அய்யோ, டிவி பார்த்திராவிட்டால்
செத்த விஷயம் கூட
எனக்குத் தெரிந்திராமல் போயிருக்குமே ?”
என்று கதைக்கும் முதல்வராக அவர் இல்லை.
200 பெண்களை சீரழித்த
பொள்ளாச்சிகள் நிகழவில்லை.
போதை யாவாரத்தில் –
மந்திரிக்கே கமிஷன் ஒதுக்கப்பட்ட
டைரிக்குறிப்புகள் ஏதுமில்லை.
தலைமைச்செயலாளர் அறையிலேயே
கோடிகோடிகள் ஒளிக்கப்பட்டு கண்டெடுக்கப்படவில்லை.
அரசாங்க கஜானாவைத் திறந்து பார்த்தால்
பாச்சை உருண்டைகள் மட்டுமே கிடக்கவில்லை.
கொடநாடுகளும்
மர்மக் கொலைகளும் நிகழவில்லை.
சுய சிந்தனையும் துணிவும் அற்று,
மத்திய அரசாளர்களின்
கால்பற்றிக் கிடக்கவில்லை.
இவ்விதம் கூடாதவை பலவும்
பலப்பலவும் நிகழவில்லை.
கூடியவை சிலவற்றை மட்டும்
குறிக்கிறேன்.
வர்த்தகத்தில்
நாட்டின் பதினான்காம் இடத்திலிருந்த தமிழகம் இப்போது மூன்றாவது இடத்திலிருக்கிறது.
நாடே தள்ளாடிக்கொண்டிருந்த வேளையில்,
தமிழகம் மட்டும் பொருளாதாரத்தில்
சரிந்து வீழவேயில்லை.
ஏறத்தாழ மூன்று லட்சத்துக்கும் அதிகமான
தொழில் முதலீடுகள் வந்திருக்கின்றன.
வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை
கூடியிருக்கிறது.
லாக்கப் மரணங்களின் பட்டியலுக்காக
நாட்குறிப்புகள் அடிக்கடி விரிக்கப்படவில்லை.
இதுபோல், மகிழ்ச்சியைக் குறித்து எழுத
நிறைய ஆதாரங்களிருக்கின்றன.
முற்பட்டால், ஸ்டாலின் ஆட்சி சாதனைகள் என்று தொடர்தான் எழுத வேண்டும். அதை –
வாய்மூடி மௌனிகளாக இருக்கிற
கழகக் காளைகள்தாம் செய்யவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக –
வலதுசாரிப் பாசிசத்துக்கு எதிரான ஒ
ட்டுமொத்த இந்தியத்தைக் காக்கும் போரில்,
மமதா சந்திரசேகர ராவ் போன்றோர்
கையறுநிலையில் நிற்கும்போது,
எடுத்த வாளை இடைச்செருகாமல் –
போர்க்குரல் ஒன்று தொடர்ந்து கேட்கிறதென்றால்,
அது தெற்கேயிருந்து ஒலிக்கிற
ஸ்டாலின் குரல் மட்டுந்தான்.
எதனினும் முதன்மையான அந்த
ஒற்றைக் காரணத்துக்காகவே,
ஸ்டாலின் அரசைப் போற்றுகிறேன்.
ஒட்டுமொத்த காரணங்களுக்காக –
‘நிறைவுடன் நீடு வாழ்க’வென –
தமிழக முதல்வருக்கு பிறந்தநாள்
வாழ்த்து மலர்களைப் பொழிகிறேன்.
வாழ்த்துப் பூங்கொத்துகளுடன்
ஒரு வேண்டுகோள் கடுதாசியும்
வைக்கிறேன் :
‘குறைகள் தவிர்த்த
மேலும் சிறப்பான ஆட்சியை
நல்குங்கள் !
மக்கள் உங்களுடன் நிற்பார்கள்!’