2024 ஐ.பி.எல் நட்சத்திரங்கள்

அபிஷேக் ஷர்மா

சண்றைசர்ஸ் ஹைதரபாத்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியான ஆரம்பங்களை அணிக்கு வழங்கியிருந்தார். 16 போட்டிகளில் 100 பந்துகளுக்கு 204.21 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 484 ஓட்டங்களை அபிஷேக் ஷர்மா வீசியிருந்தார். அணித்தலைவர் பற் கமின்ஸ், புவ்னேஷ்வர் குமார், தங்கராசு நடராஜன், ஜெய்தேவ் உனத்கட், ஷபாஸ் அஹ்மட் எனப் பல பந்துவீச்சுத் தெரிவுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பாலும் சகலதுறைவீரரான அபிஷேக் ஷர்மா பந்துவீசியிருக்காதபோதும் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

ட்ரெவிஸ் ஹெட்

அபிஷேக் ஷர்மாவுடன் ட்ரெவிஸ் ஹெட்டும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நிலையிலேயே சண்றைசர்ஸ் இமாலய ஓட்ட எண்ணிக்கைகளை எட்டியிருந்தது. 100 பந்துகளுக்கு 191.55 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 567 ஓட்டங்களை ஹெட் பெற்றிருந்தார்.

பில் ஸோல்ட்

சம்பியனான கொல்கத்தா நைட் றைடர்ஸின் பெறுபேறுகளுக்கு ஒத்திசைவாக பில் ஸோல்ட் காணப்பட்டிருந்தார் என்பதால் மறுப்பதற்கில்லை. ஏலமெடுக்கப்பட்டிருக்காத ஸோல்ட், ஜேஸன் றோய் விலகிய நிலையிலேயே கைச்சாத்திடப்பட்டிருந்தார். அந்தவகையில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக 12 போட்டிகளில் விளையாடி 100 பந்துகளுக்கு 182 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 435 ஓட்டங்களை ஸோல்ட் பெற்றிருந்தார்.

சுனில் நரைன்

நைட் றைடர்ஸின் சுனில் நரைனே தொடரின் பெறுமதி மிக்க வீரராகத் தெரிவாகியிருந்த நிலையில், அதற்கு கேள்வி எதுவுமில்லாத வகையிலான பெறுபேறுகளை நரைன் வழங்கியிருந்தார். பிரதானமாக பந்துவீச்சாளரான நரைன் 15 போட்டிகளின் 14 இனிங்ஸ்களில் ஒரு ஓவருக்கு 6.69 ஓட்டங்களே வழங்கி 17 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமல்லாமல், நைட் றைடர்ஸ் உரிமையாளர் ஷாருக்கானால் அழைத்து வரப்பட்ட கெளதம் கம்பீரின் நகர்வால் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 100 பந்துகளுக்கு 180.74 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 488 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஜேக் பிறேஸர்-மக்குர்க்

டெல்லி கப்பிட்டல்ஸின் லுங்கி என்கிடி தொடரில் பங்கேற்காத நிலையில் கைச்சாத்திடப்பட்ட ஜேக் பிறேஸர்-மக்குர்க், ஆரம்பத்தில் காயத்துக்கான பிரதியீடாக உள்ளே வந்து அணிக்கு அதிரடி ஆரம்பங்களை வழங்கியிருந்தார். ஒன்பது போட்டிகளில் 100 பந்துகளில் 234.04 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 330 ஓட்டங்களை பிறேஸர்-மக்குர்க் பெற்றிருந்தார்.

அபிஷேக் பொரேல்

இதேபோன்று தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராக ஆரம்பித்திருந்த அபிஷேக் பொரேலும் கப்பிட்டல்ஸுக்கு வேகமாக ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 100 பந்துகளுக்கு 159.51 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 12 இனிங்ஸ்களில் 327 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஹென்றிச் கிளாசென்

அபிஷேக் ஷர்மாவும், ட்ரெவிஸ் ஹெட்டும் சண்றைசர்ஸுக்கு அதிரடியான ஆரம்பங்களை வழங்கியிருந்தபோதும் அவ்வணி மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறுவதற்கு காரணமாய் அமைந்தவர்கள் ஹென்றிச் கிளாசென் ஆவார். இனிங்ஸின் நடுப்பகுதியில் களமிறங்கும் கிளாசென், 100 பந்துகளில் 171.07 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 479 ஓட்டங்களை கிளாசென் பெற்றிருந்தார்.

ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்

சண்றைசர்ஸின் கிளாசென் ஆற்றிய பணியையே கப்பிட்டல்ஸில் ஸ்டப்ஸ் ஆற்றியிருந்தார். 13 இனிங்ஸ்களில் 100 பந்துகளில் 190.90 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 378 ஓட்டங்களை இனிங்ஸின் இறுதிப் பகுதிகளில் களமிறங்கி ஸ்டப்ஸ் பெற்றிருந்தார்.

நிதிஷ் குமார் ரெட்டி

சண்றைசர்ஸின் ஆரம்ப விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பின்னர் நெருக்கடியான நேரங்களில் களமிறங்கும் நிதிஷ் குமார் ரெட்டி, 11 இனிங்ஸ்களில் 100 பந்துகளில் 142.92 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 303 ஓட்டங்களைப் பெற்றதோடு தேவைப்படும் நேரங்களில் தனது பந்துவீச்சின் மூலம் உதவியிருந்தார்.

ஷஷாங்க் சிங்

ஏலமெடுக்கப்பட்டது போல ஷஷாங்க் சிங்கை மாறிக் கைச்சாத்திட்டது போல பஞ்சாப் கிங்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்திருந்தபோதும், கிங்ஸின் ஆரம்ப, மத்திய வரிசைகள் தகர்க்கப்படும்போது களமிறங்கும் ஷஷாங்க் சிங் 14 போட்டிகளில், 100 பந்துகளுக்கு 164.65 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 354 ஓட்டங்களை ஷஷாங்க் சிங் பெற்றிருந்தார்.

ரியான் பராக்

ராஜஸ்தான் றோயல்ஸ் தொடர்ந்தும் இவரை ஏன் தக்க வைக்கிறது என்பதற்கான பதிலை இத்தொடரில் பராக் வழங்கியிருந்தார். 14 இனிங்ஸ்களில் 100 பந்துகளுக்கு 149.21 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 573 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

வருண் சக்கரவர்த்தி

நைட் றைடர்ஸ் சம்பியனாவதற்கு வருண் சக்கரவர்த்தியும் ஒரு தூணென்றால் மிகையாகாது. 14 இனிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளை வருண் கைப்பற்றியிருந்தார்.

ஜஸ்பிரிட் பும்ரா

மும்பை இந்தியன்ஸானது மோசமான தொடரைச் சந்தித்தபோதும் ஜஸ்பிரிட் பும்ராவின் பெறுபேற்றில் எவ்வித மாற்றமும் காணப்பட்டிருக்கவில்லை. மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கைகள் குவிக்கப்பட்டபோதும் 13 போட்டிகளில் ஓவருக்கு 6.48 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து 20 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றியிருந்தார்.

தங்கராசு நடராஜன்

ஓட்டக் குவிப்புகள் நடைபெறும் இனிங்ஸின் ஆரம்பம், இறுதியில் பந்துவீசவரும் தங்கராசு நடராஜன் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

ஹர்ஷித் ரானா

நைட் றைடர்ஸின் இனிங்களில் எப்பகுதிகளிலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவ்வணிக்கு வெற்றிகளை ஹர்ஷித் ரானா வழங்கியிருந்தார். 11 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை ரானா கைப்பற்றியிருந்தார்.

அன்ட்ரே ரஸல்

நைட் றைடர்ஸுக்காக 14 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த அன்ட்ரே ரஸல், விக்கெட்டுகளை நெருக்கடியான நேரங்களில் கைப்பற்றி தனதணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருந்தார்.

மாயங்க் யாதவ்

வெறும் நான்கு போட்டிகளில் மாத்திரமே லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸின் மாயங்க் யாதவ் விளையாடியிருந்தபோதும் தனது பெயரைக் கூற வைத்திருந்தார். மிக வேகமாக மற்றும் நேர்த்தியாக பந்துவீசியிருந்த மாயங்க் யாதவ், ஓவருக்கு 6.98 ஓட்டங்களையே வழங்கி ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

(Tamil Mirror)