ஐக்கிய அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையிலுள்ள அகதிகள், அவர்களின் அகதிக் கோரிக்கைகள் தனித்தனியாக ஐக்கிய அமெரிக்க நீதிமன்றங்களில் அனுமதிக்கப்படும் வரை அவர்கள் மெக்ஸிக்கோவிலேயே இருப்பர் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று டுவீட் செய்துள்ள நிலையில், தாங்கள் எந்தவொரு இணக்கத்துக்கும் வரவில்லையென மெக்ஸிக்கோவில் புதிதாகப் பதவியேற்கவுள்ள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவின் எதிர்கால அரசாங்கத்துக்குமிடையில் எந்தவிதமான இணக்கமொன்றும் இல்லை என மெக்ஸிக்கோவின் உள்நாட்டமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஒல்கா சந்தேஸ் கொர்டெரோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் மெக்ஸிக்கோவின் எதிர்கால அரசாங்கம் உள்ளதாகத் தெரிவித்துள்ள, அடுத்த மாதம் முதலாம் திகதி மெக்ஸிக்கோவின் ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள அன்ட்ரேஸ் மனுவல் லோபேஸின் முக்கிய உள்நாட்டு கொள்கை அதிகாரியுமான ஒல்கா சந்தேஸ் கொர்டெரோ, தாங்கள் அரசாங்கத்தில் இன்னும் இல்லாததால் தங்களால் எந்தவொரு இணக்கத்தையும் மேற்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
இதுதவிர, அகதிக் கோரிக்கையாளர்களுக்கான பாதுகாப்பானதொரு மூன்றாவது நாடொன்றாக மெக்ஸிக்கோ பிரகடனப்படுத்தப்படும் என்பதையும் ஒல்கா சந்தேஸ் கொர்டெரோ நிரகாரித்துள்ளார்.