இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது கடந்த 2020 ஜூலையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.
அவரது உடல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டமை தொடர்பாக அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த வழகறிஞர் சிவகாம சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து தமிழ்நாட்டு சிபிசிஐடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கொடலொக்காவின் நெருங்கிய கூட்டாளியான சானுகா தனநாயக்கா, ஜெயபால் என்ற இருவரும் பெங்களுரில் தலைமறைவாக இருந்தபோது கைதாகியுள்ளனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பொழுது அங்கொட லொக்காவிற்கும், சானுகா தனநாயக்காவிற்கும் விடுதலை புலிகளின் முன்னாள் உளவுபிரிவை சேர்ந்த சபேசன் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
முன்னாள் விடுதலை புலி நிர்வாகி சபேசன் குறித்து சிபிசிஐடி பொலிசார் விசாரணை செய்த போது சபேசன், இலங்கையை சேர்ந்த சின்ன சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் போது NIA அமைப்பினரால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் கொச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிபிசிஐடி பொலிசார் சிறையில் இருந்த சபேசன் உட்பட 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அங்கொட லொக்கா மற்றும் சனுக்கா தனநாயக்கா ஆகியோருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து வெளியேறிய அங்கொட லொக்கா மற்றும் சனுக்க தனநாயக்க ஆகியோர் சபேசன், சின்னசுரேஷ்,இ ஜெயபால் ஆகியோர் மூலம் இலங்கைக்கு போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வந்திருப்பதும் கோவையை மையமாக வைத்து இந்த வேலைகளை இரகசியமாக செய்து வந்து இருப்பதும் சிபிசிஐடி பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.