தமது நிறுவுநரான ஜூலியன் அசாஞ்-இன் இணையத் தொடர்பு, ஈக்குவடோர் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17), விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. கோல்ட்மன் சக்ஷ்ஸ் வங்கியில், ஹிலாரி கிளின்டன் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில், ஜி.எம்.டி நேரப்படி, கடந்த சனிக்கிழமை (15) மாலை, அசாஞ்-இன் இணையத் தொடர்பை, ஈக்குவடோர் நிறுத்தியதாக, தாங்கள் உறுதிப்படுத்துவதாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
விக்கிலீக்ஸின், பெண் ஆதரவாளர்கள் இருவரை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் என்ற வழக்கில், விசாரணையை எதிர்கொள்வதற்காக, சுவீடனுக்கு நாடுகடத்துமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, இலண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் புகலிடம் வழங்கப்பட்ட அசாஞ், 2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, அங்கேயே வசிப்பதுடன், அங்கிருந்தே பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், தாங்கள், பொருத்தமான மாற்று ஏற்பாடுகளைச் செயற்படுத்தியுள்ளதாக, விக்கிலீக்ஸின் டுவிட்டர் கணக்கில், திங்கட்கிழமை, தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸுக்கு நெருக்கமானவர்களின் கருத்துப்படி, விக்கிலீக்ஸின் டுவிட்டர் கணக்கை, பிரதானமாக, அசாஞ் மாத்திரமே இயக்குவதாக கூறுகின்றனர்.
இணையத் தொடர்பு, தொடர்பாக, ஈக்குவடோர் அரசாங்கம், உடனடியாக, கருத்தெதனையும் தெரிவிக்காத போதும், அசாஞ், ஈக்குவடோர் அரசாங்கத்தின் கீழேயே இன்னும் இருப்பதாக, ஈக்குவடோர் வெளிநாட்டு அமைச்சர் குய்ல்லௌமே லொங் தெரிவித்துள்ளார்.
ஈக்குவடோரின் ஜனாதிபதி ரஃபேல் கொரேரா, அசாஞ்-இன் பேச்சுச் சுதந்திரத்தை நீண்ட காலமாக ஆதரிக்கின்ற போதும், ஐக்கிய அமெரிக்ககாவின் ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனின் பின்னாலுள்ளதாக தெரிவித்திருந்தார்.