அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து சம்பவம் தொடர்பில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் வெளியாகி சர்ச்சையானதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன்படி பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது வெளியாட்கள் எளிதில் செல்ல முடியாதபடி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர் நடவடிக்கைகளுக்காக பல்வேறு கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் நலன்கருதியும், அவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு அமைத்துள்ளது. 

இந்தக் குழுவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது 140 பாதுகாவலர்கள் ரோந்து பணியில்  பணிபுரிந்து வருகின்றனர். அத்துடன், கூடுதலாக 40 பாதுகாவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். 

இதுதவிர அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் தற்போது 70 சிசிடிவி கமெராக்கள் இருப்பதாகவும், அதில் 56 கமெராக்கள் மட்டுமே செயற்பாட்டில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இதையடுத்து, ஏற்கெனவே பழுதாகியிருக்கும் சிசிடிவி கமெராக்களை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், கூடுதலாக 30 சிசிடிவி கமெராக்களை புதிதாக பொருத்தவும் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

மேலும் பல்கலைக்கழகத்துக்குள் செயற்பட்டுவரும் விடுதிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயற்படவும் விடுதி கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Leave a Reply