மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் காணப்படும் றோகிஞ்சா முஸ்லிம்களின் பிரச்சினைக்கு, ஏனைய விடயங்களையும் ஆராய்ந்து, அதற்குப் பதிலளிக்க வேண்டுமெனவும், அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் தலைமையிலான குழு, நேற்றுத் தெரிவித்தது.
அத்தோடு, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், அடிப்படைவாதம் அல்லது கடும்போக்குவாதம் என்பன ஏற்படுவதற்கான ஆபத்துக் காணப்படுவதாகவும், அக்குழு தெரிவித்தது.
மியான்மாரின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, 9 பேர் கொண்ட செயற்குழு, தனது இறுதி அறிக்கையை, நேற்றுச் சமர்ப்பித்தது.
“தனது பிராந்தியத்தைக் காப்பதற்கான அனைத்து உரிமைகளும் மியான்மாருக்கு உள்ள போதிலும், அதிகப்படியான இராணுவத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் எதிர்வினை, அந்தப் பகுதியில் சமாதானத்தைக் கொண்டுவர உதவாது” என்று, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மாறாக, நுட்பமான, முழுமையான பதிலொன்று, அவசரமாகத் தேவைப்படுவதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படாவிட்டால், ராக்கைன் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் காணப்படும் மக்கள், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டால், தீவிரவாதத்துக்கான உரத்தைப் போட்டமை போன்றாகும் எனவும், இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படவுள்ளது.