ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்திய வோக்ஸ் கட்சியை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஸ்பெயினில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியும், அதிதீவிர வலதுசாரியான வோக்ஸ் கட்சியும் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருந்தன. இதனால், நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த அரசு முடிவு செய்தது. சோசலிஸ்டு கட்சியின் பிரதமரான பெட்ரோ சான்செஸ் அதற்குப் பரிந்துரையும் செய்தார்.
தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முதலாளித்துவ ஊட கங்கள் அனைத்தும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகவே எழுதின. இக்கட்சிக்கு பெரும் அளவில் இடங்கள் கிடைக்காது என்பதால், இக்கட்சியின் ஆதரவில்லாமல் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது என்று எழுதினார்கள். கடந்த தேர்தலில் 52 இடங்களைப் பெற்றிருந்த வோக்ஸ் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும் வகையில் கூடுதல் இடங்களைப் பெறும் என்று தெரிவித்தனர்.
கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்குப் பிறகான ஆய்வும் எதிர்க்கட்சியும், வோக்ஸ் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கும் என்று கூறின. வாக்குப்பதிவும் குறையும் என்றன. இவையனைத்தும் பொய்யாக மாறியுள்ளன. கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலில் 52 இடங்களைப் பெற்றிருந்த அதி தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சி தற்போது 32 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான மக்கள் கட்சி 32.84 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 136 இடங்களையும், ஆளும் சோசலிஸ்டு கட்சி 31.81 விழுக்காடு வாக்குகளுடன் 122 இடங்களையும் பெறவிருக்கின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட இடதுசாரிகள் அணியான சுமர் 12.3 விழுக்காட்டுடன் 31 இடங்களைப் பெற்றிருக்கிறது.
யோலண்டா டியாஸ் தலைமை யில் 16 இடதுசாரிக் கட்சிகள் இணைந்து தேர்தல் களத்தைச் சந்தித்தன. பெரும்பான்மை பெற 176 இடங்கள் தேவை என்ற நிலை யில் எந்தவொரு கட்சிக்கும் அது கிடைக்கவில்லை. வலதுசாரிகள் கையில் அதிகாரம் சென்றுவிடும் என்று சொன்ன கணிப்புகள் பொய்யாகி, தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. சோசலிஸ்டு கட்சி தனது வாக்கு பலத்தைத் தக்க வைத்துள்ளது. பெரும் சரிவைக் கண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடதுசாரிகள், புதிய ஒருங்கி ணைப்பால் புது பலத்தை அடைந்திருக்கிறார்கள்.
(Maniam Shanmugam)