நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை, தற்போது சற்றுத் தணிந்துள்ள நிலையில், அவ்வாறான அனர்த்தங்களின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டுமாயின், சில நடைமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களின் மருந்துகள், அனர்த்தங்களினால் அழிவடைந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால், உடனடியாக மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று, அவர்கள் தங்களுக்குரிய மருந்துகளை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, இக்காலப்பகுதியில் அதிகளவில் பரவக்கூடிய டெங்குக் காய்ச்சலைத் தடுப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
தவிர, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளவர்களின் மனோநிலை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.
நோய்களைத் தடுப்பதற்குரிய சில வழிமுறைகள்…
•எப்போதும், நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த நீரையோ அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட நீரை மாத்திரமே பருகுங்கள்.
•நன்றாகச் சமைத்த உணவுகளையோ அல்லது சமைத்து பொதியிடப்பட்ட உணவுகளை மாத்திரம் உண்ணுங்கள்.
•குழந்தைகளுக்கு, தாய்ப்பால் மாத்திரம் வழங்குங்கள். பால்மா கொடுப்பதைத் தவிருங்கள். குழந்தைகளுக்கான பால்ப்போத்தல்கள் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
•உணவு உண்பதற்கு முன்னர், கைகளை நன்றாக சவர்க்காரமிட்டுக் கழுவிக்கொள்ளுங்கள்.
•பச்சை மரக்கறிகள் அல்லது இலை வகைககை, உணவாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இதனால், வயிற்றோட்டம் மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.
•பிரசவத்துக்குத் தயாரான நிலையில் உள்ள கர்ப்பிணிகள், உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படல் வேண்டும்.
•வெள்ளநீரில் விளையாடுவதையோ அல்லது ஓடங்களைச் செலுத்துவதையோ தடுக்க வேண்டும்.
•வெள்ளத்தில் மூழ்கியிருந்த வீடுகளில் மீளக்குடியேறும் போது, வீடுகளின் பலம் தொடர்பிலும் பரிசோதிக்க வேண்டும்.
•எப்போதும், சிறுநீர் மற்றும் மலங்களை, மலசலகூடங்களிலேயே கழிக்க வேண்டும்.
•பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங்களை வீசும் போது, நுளம்புகள் பெருகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•வெள்ளநீரில், எலிகளின் சிறுநீர்கள் கலந்திருப்பதால், வெள்ளநீரில் இருப்பவர்கள், எலிக்காய்ச்சலுக்கான நுண்ணுயிர்க்கொல்லி (அன்டிபயோட்டிக்ஸ்) மருந்தை ஏற்றிக்கொள்ள வேண்டும்.
•வெள்ளப்பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்துக் கிணறுகளையும் இறைத்து, அதில் க்ளோரின் கலந்துவிட வேண்டும்.
•வெள்ளப்பகுதியில் உள்ள உங்களது கால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், மருத்துவரின் உதவியை நாடுங்கள்.