அனர்த்தங்களில் அரச இயந்திரத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கில், மன்னார், வவுனியா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், கிழக்கில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் வட மத்திய மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்திலும் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலும் சீரான வானிலை நிலவுகின்றது. 

சீரான வானிலை என்றாலும் ஓரளவுக்கு வறட்சியும் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் மோசமான வானிலை மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 

கடுங்காற்று, மரங்கள் முறிந்துவிழுதல், மின்னல் தாக்கம், வெள்ளம் உள்ளிட்ட இயற்றை அனர்த்தங்களால், 19 வீடுகள் முழுமையாகவும், 4,612 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அந்த நிலையத்தின் புள்ளிவிபர தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுடைய உறவினர்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த வீடுகளையும் பார்வையிடுவதற்கு அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர். எனினும், எதிர்காலங்களில் அவ்வாறான சேதங்கள் ஏற்படாத வகையில் எவ்விதமான உருப்படியான யோசனைகளும் முன்வைக்கப்படுவதில்லை. ஆக, மக்களுக்குப் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே அரசியலைச் செய்யமுடியும் என்பதை அச்சொட்டாக அறிந்து வைத்துள்ளனர் என்பது இதிலிருந்து புலனாகிறது. 

இயற்கை அனர்த்தங்களைத் தடுத்து நிறுத்தவே முடியாது. எனினும், இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்கலாம். அவையெல்லாம் அரச இயந்திரத்தின் கீழான செயற்பாடுகள் என பதிலளிக்கலாம். அப்படியானால் பாதிக்கப்பட்டதன் பின்னர் ஸ்தலங்களுக்கு அரசியல்வாதிகள் ஏன்? வீசிய கையுடனும் வெறுங்கையுடனும் விஜயம் செய்யவேண்டும் என்பதே கேள்வியாகும். 

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளைத் தொடருமாறும் ஜனாதிபதி ரணில் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையமும் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

இழந்ததை இழப்பீடுகளால் ஈடுசெய்யமுடியாது என்பதால், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதும், இயற்கையைச் சீண்டாமல் இருப்பதுமே சிறந்தது என்பதை நினைவூட்டுகின்றோம். 

(Tamil Mirror)