அனைவரையும் முட்டாள்கள் போலக் கருதி, காணாமற்போனோர் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். “போரின் இறுதி தருணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களில் பலர் காணாமற்போயுள்ளனர். கடந்த ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவில் அதுதொடர்பாக சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர், அந்தச் சாட்சியங்களை விசாரணை செய்வதற்காக அதே ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிலும், போரின் இறுதிக்கட்டத்தில் தமது உறவுகளை கையளித்த பலர் நேரடியாகவே சாட்சியங்களையும் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர். ஐ.நா விசாரணை அறிக்கையிலும், கூட காணாமற்போனோர் தொடர்பான விடயங்கள், உண்மைகள் கண்டறியப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், இவற்றை பொய்ப்பிக்கும் வகையில்- யதார்த்தத்திற்கு முரணான வகையில்- முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார். போரின் இறுதித் தருணத்தில் இராணுவத்தினரிடம் பலர் சரணடைந்துள்ளனர். அவர்களில் நிராயுதபாணிகளாக சரணடைந்த விடுதலைப்புலிகளும் காணப்பட்டு, அவர்கள் உயிரிழக்கச் செய்யப்பட்டிருப்பார்களாயின் அது பாரிய போர்க்குற்றமாகும். தற்போது பெற்றோர், பெண்கள் என பலதரப்பட்டோர் தமது உறவுகளைத்தேடி கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
இவர்களில் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று கூறவும் முடியாது. அதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. இத்தகைய நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் அனைவரையும் முட்டாள்கள் போன்று காணாமற்போனோர் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டிருப்பதானது பொருத்தமற்றது. காணாமற்போனோர் தொடர்பான பொறுப்புக்கூறப்பட வேண்டும். அதற்கு முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.