இதில் ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2019 இல் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பணியாற்றினார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர். செப்டம்பர் 2017 முதல் மே 2019 வரையில் மோடியின் முதல் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது புதிய அமைச்சரவையில் முன்பு இருந்தது போலவே மூன்று தமிழர்களை தேர்ந்தெடுத்துள்ளார். அந்தவகையில், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல்.முருகன் ஆகியோர் கடந்த ஞாயிறன்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் பதவியேற்றனர்.
குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், எல்.முருகன் இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 2019 முதல் 2024 வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய ஜெய்சங்கருக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்படும் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அதேபோல் 2019 முதல் 2024 வரை நிதி அமைச்சராக முக்கிய பொறுப்பு வகித்த நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய பொருளாதார துறை ஒதுக்கப்படும் என கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், புதிதாக யாருக்கும் மோடி அமைச்சரவையில் பொறுப்பு அளிக்கப்படவில்லை.
மேலும், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் ஒரு பாஜக வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை என்பதால், மோடி அமைச்சரவையில் பொறுப்பேற்ற மூன்று தமிழர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் பிற மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்தும் எல்.முருகன் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது