நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவானது, இலங்கை மீது தவறுகளுக்கான திருத்தங்களை முன்வைப்பதாகவும் முன்னரே ஆரம்பத் தீர்மானமொன்றைக் கொண்ட குணத்தையும் இலங்கை மீது வரையறை விதிப்பதாகவும் காணப்படுவதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்க, மீளமைப்பு நடவடிக்கைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காததுமாகக் காணப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
‘கருத்தொற்றுமையை ஏற்படுவதில் இது இணைந்த அணுகுமுறையைக் கொண்டு செல்வதில் அது உதவியாகவும் இல்லை. தற்போதைய வரைவின் பல பந்திகள், அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு முரணான நேர்மறையானதாகக் காணப்படுகிறது. அத்தோடு, சமூகங்களை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிவிடக் கூடியது என்பதோடு, நல்லிணக்கம் நோக்கியும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கியும் கவனமாக உருவாக்கப்பட்டுவரும் சூழலை இது சீர்குலைக்கிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப்பும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கை மேற்கொள்ள உத்தேசித்துள்ள உள்ளகப் பொறிமுறையிலான விசாரணைகளுக்கு இலங்கை உதவியை நாடும் ஒன்றாகவும் காணப்படுகிறது.
‘இந்த வரைவானது, நேர்மறையான அணுகுமுறைக்கே வாய்ப்பை வழங்கி, இந்த நடைமுறையைக் குழப்ப விரும்புவோருக்கே வாய்ப்பு வழங்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது’ என ஆரியசிங்க சுட்டிக் காட்டினார்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைவானது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரால் வழங்கப்பட்ட வாய்மூல அறிக்கை, இலங்கை மீதான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறுதலையும் மேம்படுத்துவதற்கான அவ்வலுவலகத்தின் அறிக்கை ஆகியவற்றை வரவேற்பதுடன், அவற்றில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் கோருகின்றது.
அத்தோடு, இலங்கையின் நீதி நடைமுறையில், சர்வதேச நீதிபதிகளையும் விசாரணையாளர்களையும் வழக்குத் தாக்கல் செய்வோரையும் ஈடுபடுத்துமாறும், இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்குவதற்காக, தேவைப்படும் பட்சத்தில், உள்நாட்டுச் சட்டங்களில் மீளாய்வுகளை மேற்கொள்ளவும் கோருகின்றது.
தவிர, ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மதக் குழுக்கள், சிவில் சமூகக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த தனிநபர்கள் அல்லது குழுக்கள் மீது இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் விசாரணை நடாத்துமாறும் இவ்வரைபு கோருகிறது.
அத்தோடு, நீதிக்குப் புறம்பான கொலைகள், காணாமல் போகச் செய்யப்பட்டமை ஆகியவை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறும், வடக்கு, கிழக்கில் இராணுவ நீக்கம் செய்யுமாறும் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வை அடைவதற்கான பாகுபாடற்ற பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறும், தடுத்து வைத்தல் தொடர்பான நடைமுறைகளை மீளாய்வு செய்யுமாறும் கோருகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமான கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை மதிப்பதை உறுதி செய்யுமாறும் இவ்வரை கோரிக்கை விடுக்கிறது.
இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கையிலுள்ள மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஆராய்ந்து உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கோருவதோடு, சபையின் பரிந்துரைகளின் அமுலாக்கம் தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கண்காணிக்குமாறும், சபையின் 34ஆவது அமர்வின் போது இது தொடர்பான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் மேலும் கோருகிறது.
– See more at: http://www.tamilmirror.lk/154731#sthash.TwEWYby0.dpuf