இந்நிலையில் அமெரிக்கா சீனா உலகில் கரோனாவை பரப்பியதால் 184 நாடுகள் நரக வேதனை அனுபவித்து வருவதாகவும், இதற்காக சீனாவுக்கு எதிராக தன்னால் இயன்றதை செய்வேன், என்னால் அதிகம் செய்ய முடியும் என்று அதிபர் ட்ரம்ப் அன்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்க செனட் சபையினரும் சீனாவுடனான வர்த்தக சார்பைக் குறைத்துக் கொள்ள நடவடிக்கை தேவை என்று ட்ரம்புக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரசை, பல்வேறு நாடுகளுக்கும் சீனா பரப்பி விட்டதாகவும், இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக, உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு, ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்தது.
இதனையடுத்து சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது சீனா குறித்த விசாரணை தேவை என்ற ரீதியில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா பேசியுள்ளது.
இது தொடர்பாக சீனா தெரிவிக்கும்போது, “சீன தூதரகம் சிறுமைத்தனமான தந்திரங்களை மேற்கொள்ளாது. இது எங்கள் மரபு கிடையாது. ஆனால் மற்றவர்கள் செய்தால் நாங்கள் திரும்ப பதிலடி கொடுப்போம்.
சீனாவின் நுகர்வோர்கள் ஆஸ்திரேலியப் பொருட்களை கைவிடுவார்கள். பல்கலைக் கழகங்களும் சிக்கலாகும், சீன மாணவர்களும், சுற்றுலா பயணியரும், ஆஸ்திரேலியா வருவதை புறக்கணிப்பர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டு இறைச்சி மற்றும் வைன் மது வகைகளுக்கு சீனா தடை விதிக்கும்” இவ்வாறு எச்சரித்துள்ளது.