அமெரிக்கா சென்று நாடு திரும்பினார் மோடி

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டதுடன், விமான நிலையத்திற்கு வெளியே செண்டை மேளம் முழங்க கலைநிகழ்ச்சிகளுடன் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கடந்த 22ஆம் திகதி காலை அமெரிக்கா புறப்பட்டு சென்ற அவர், முதலில் வாஷிங்டன் சென்று அங்குள்ள 5 முன்னணி தொழில் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல் முறையாக வெள்ளை மாளிகையில் வெள்ளியன்று நேரில் சந்தித்து பேசிய பின்னர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் ஜோ பைடன், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோருடன் மோடி கலந்து கொண்டார். 

முக்கிய நிகழ்வாக, ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76ஆவது அமர்வில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய மோடி, கொரோனா வைரஸ் தொற்று பரவல், பருவ நிலை மாற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை தொடர்பில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.