அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி

சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கையில் மலையக மக்களின் சமூக பொருளாதார அரசியலின் பிரதான குரலாக விளங்கியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். ஒரு 50 ஆண்டுகால அரசியல் வெற்றிடத்தை நிரவியது.

வாக்குரிமை, பிரஜாஉரிமை பறிக்கப்பட்டு நிர்க்கதியான சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவமாக சௌமியமூர்த்தி தொண்டமான் பாரம்பரியம் விளங்கியது.

பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புக்கள், தோல்விகள், இழுபறிகள் மத்தியில் தான் மலையக சமூகம் மேலெழ வேண்டியிருந்தது.

நாடு கடத்தல் ஒப்பந்தங்களுக்கு பின்னர் 1980 களின் பிற்பகுதியில் தான் பிரஜா உரிமையை முழுமையாக உறுதிப்படுத்த முடிந்தது.

தோட்டத்தொழில்துறைக்கு அப்பால் கால்நடை வளர்ப்பு, காய்கறி பயிர்ச் செய்கை என சொந்த காலில் நிற்பதற்கான முயற்சிகள் கல்வி, சுகாதார துறைகளுக்கான உள்ளக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டது .

விகிதாசார பிரதிநிதித்துவம் மலையக தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை வழங்கியது.தொண்டமான் பாரம்பரியத்தின் நிதானம் கடந்த 30 வருடங்களில் மலையக இளைய தலைமுறையை பேரழிவிலிருந்து பாதுகாத்தது என்றால் மிகையல்ல.

மலையகம் அதிகாரப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, மலையக கிராமங்களை உருவாக்குவது போன்ற செயற்பாடுகளில் மலையக பன்முக அரசியல் சக்திகளுடன் தொண்டமான் பாரம்பரியத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு. ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் சுயமரியாதை தொடர்பான உணர்வு பூர்வமான மனக்கிளர்ச்சியை கொண்டிருந்தார். சமூக அவமதிப்புக்களை சகிக்காத மனிதர்.

அன்னாருக்கு எம் அஞ்சலிகள். அவரது மறைவால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் மலையக மக்களுக்கும் எம் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு)
தலைவர்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி