கோத்தபாயாவோ அல்லது அரசாங்கமோ இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்று ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய முடியாது என்பதையே. இது பேசி தீர்க்க வேண்டிய விடயம்.
நிற்க, ஐயா சுமந்திரன் அவர்களே! உங்கள் கட்சி கடந்த நான்கரை ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு முண்டு கொடுத்து “அந்தா வருகிறது, இந்தா வருகிறது தீர்வு, அடுத்த தீபாவளிக்கு வருகிறது” என வாய்ச்சவடால் அடித்து இறுதியில் என்னத்தை சாதித்தீர்கள்?
அதுமட்டுமா, 1965இல் டட்லி தலைமையிலான யூ.என்.பி அரசில் இணைந்து மாவட்ட சபை கொண்டுவர போவதாக சொன்னீர்கள். கொண்டு வந்தீர்களா?
1977இல் ஆட்சியில் இருந்த ஜே.ஆருடன் சேர்ந்து மாவட்ட அபிவிருத்தி சபை கொண்டு வரப்போவதாக சொன்னீர்கள். கொண்டு வந்த மா.அ.சபையை ஜே.ஆர். அரசு குற்றுயிராக கொலை செய்தபோது என்ன செய்தீர்கள்?
ஆனால் அதேநேரத்தில் பண்டாரநாயக்கா உங்கள் தலைவர் செல்வநாயகத்துடன் இனப்பிரச்சினையை தீர்க்க செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடாமல் யூ.என்.பி குழப்பிய போது நீங்களும் சேர்ந்து குழப்பினீர்கள். மறுக்க முடியுமா?
2000 ஆண்டில் சந்திரிகா அரசு கொண்டு வந்த நல்லதொரு தீர்வுப்பொதியை யூ.என்.பியுடனும் ஜே.வி.பியுடனும் சேர்ந்து குழப்பினீர்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக கூட்டிய சர்வகட்சி கூட்டத்தை பகிஸ்கரித்தீர்கள். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
இப்பொழுது உங்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை டக்ளஸ் அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை செய்யக்கூடாது என்பதுதான்.
உங்கள் சுத்துமாத்துகளுக்கு அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்ட இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.