அம்பாறையில் பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லிம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட காரணமாக இருந்த, ஹோட்டல் ஒன்றின் உணவில் கருத்தடையோ அல்லது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் எந்த மாத்திரைகளும் இருக்கவில்லை என அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த உணவில் வெறும் மாக்கட்டியொன்றே இருந்ததாகவும் அது வேறு ஒரு உணவுப் பொருளின் பகுதி என தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலிஅங்ககே பொலிஸாருக்கு அறிக்கை ஊடாக அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்ட “பராட்டா” உள்ளிட்ட சந்தேகத்துக்குரிய உணவுப் பொருளினை தாம் பரிசோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போதே மாக்கட்டியை கண்டு பிடித்ததாகவும், அவை வேறு ஒரு உணவுப் பொருளின் துண்டு என்பது உறுதியாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மரண வீடொன்றுக்கு சென்று திரும்பியோர், அம்பாறையில் முஸ்லிம் உணவகம் ஒன்றில் உணவருந்தும் போது அங்கு உணவில் மலட்டுத்தனமை அல்லது கருத்தடையை ஏற்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை செய்ததால், அம்பாறையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நள்ளிரவு பெரும்பான்மை இன வன்முறையாளர்கள் அந் நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர். இதனால் அங்கு இன ரீதியிலான பதற்ற நிலையும் தோன்றியிருந்தது.
இந் நிலையில் பொலிஸார் சில சந்தேக நபர்களைக் கைது செய்த நிலையில், வன்முறைக்கு காரணமாக கூறப்பட்ட உணவு மாதிரிகளை பொலிஸார் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்த நிலையில், மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகளோ உணவில் கலக்கப்பட்டிருக்கவில்லை என உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.