அம்பாறை மாவட்டத்தில் ஏற்கவே அறிவிக்கப்பட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவென அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழு சார்பாக 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 08 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 63 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க தெரிவித்தார். இதன்போது 06 கட்சிகளினதும், 02 சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.
தெஹியத்தக்கண்டிய பிரதேச சபை, பதியத்தலாவ பிரதேச சபை ஆகியவற்றிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்புமனுக்களும், சம்மாந்துறை பிரதேச சபைக்கு தேசிய காங்கிரஸ், இலங்கை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்த வேட்புமனுக்களும், ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவும், நாவிதன்வெளி பிரதேச சபைக்கு தாக்கல் செய்த சுயேச்சைக்குழுவின் வேட்புமனுவும், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயேச்சைக்குழு ஆகியவற்றின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
அக்கரைப்பற்று மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை, தெஹியத்தகண்டிய பிரதேச சபை, நாமல் ஓயா பிரதேச சபை, பதியத்தலாவ பிரதேச சபை மற்றும் லகுகல பிரதேச சபை ஆகிய 12 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவென கட்சிகள் சார்பில் 64 வேட்புமனுக்களும், சுயேச்சைக்குழுக்கள் சார்பில் 07 வேட்புமனுக்களும் தாக்கல் செய்திருந்தன.
தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதித் தினம் நேற்று என்பது குறிப்பிடத்தக்கது.