அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்

அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள உப-குழுக்களின் அறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தை நிலைநாட்டுதல், அரசசேவையை மறுசீரமைத்தல், மத்தியும், ஆகிய ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும் வழிநடத்தல் குழுவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அதனை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கத் தீர்மானித்தோம்.

இந்த உப-குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் அரசியலமைப்பு சபையில் விவாதித்து அதன் அடிப்படையிலேயே வழிநடத்தல் குழு இவை பற்றிய தீர்மானத்துக்கு வரும். இவ்வாறு செயற்பாடுகளை மேலும் ஜனநாயகப்படுத்துவதானது அரசியலமைப்பை தயாரிப்பதற்கான சிறந்த பின்புலத்தை ஏற்படுத்தும். இந்த உப-குழுக்களின் அறிக்கைகளில் உள்ள சகல விடயங்களும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படாது. இவற்றின் அடிப்படையிலான பின்புலத்துடன் விடயங்களை கலந்துரையாடியே வழிநடத்தல் குழுவின் அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த உப-குழுக்கள் பல்வேறு நபர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என பலரைச் சந்தித்ததுடன், அவர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கும் அவகாசம் வழங்கியிருந்தன. இந்த அறிக்கைகளை தயாரித்திருக்கும் உப-குழுக்களுக்கும், அக்குழுக்களுக்கு ஆலோசனை வழங்கிய விசேட நிபுணர்களுக்கும் அரசியலமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியலமைப்புத் தொடர்பான வழிநடத்தல் குழு இதுவரை 40 சந்திப்புக்களை நடத்தி, பல்வேறு விடயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளது. தற்பொழுது அரசியலமைப்பில் உள்ள அரசாங்கத்தின் தன்மை, மதத்துக்கான முன்னுரிமை என்பவற்றை நீக்குவது எமது நோக்கம் அல்ல. ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அவற்றை பலப்படுத்துவதே வழிநடத்தல் குழுவின் எதிர்பார்ப்பாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து அதற்கு மாற்றீடாக மூன்று முறைகளை தெரிவுசெய்துள்ளோம். இவை குறித்து அரசியலமைப்பு சபையில் விவாதித்து பொருத்தமான முறை எது என்பதை முடிவுசெய்ய முடியும்.

தேர்தல் முறை மறுசீரமைப்பில் கலப்பு முறையொன்றுக்கான விருப்பம் உள்ளது. உலக நாடுகளில் பின்பற்றப்படும் கலப்பு முறைகளை ஆராய்ந்து மாற்றீடகள் சிலவற்றை முன்மொழிந்துள்ளோம். இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. வாக்காளர்கள் வழங்கிய வாக்குகளின் வீதத்துக்கு சமமான பிரதிநிதித்துவத்தை கட்சிகளுக்கு வழங்கமுடியும். மறுபக்கத்தில் ஐந்து வருடங்கள் உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க முடியும். இதுபோன்ற விடயங்களே கலந்துரையாடப்படவேண்டியுள்ளது. நிறைவேற்று அதிகார முறையின் கீழ் ஜனாதிபதி நியமிக்கப்படுவதால் பாரிய குறைபாடு காணப்படுகிறது. அதிகாரங்களை பகிர்வது குறித்து கலந்துரையாடியுள்ளோம். சில அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஆராயந்துள்ளதோடு, உபகுழுவின் அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆரம்ப விவாதத்தை ஜனவரி மாதத்தில் நடத்தமுடியும். இதற்காக ஜனவரி 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதித்து முடிவுக்கு வரமுடியும். இல்லாவிட்டால் மேலும் காலம் எடுக்க முடியும். இது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கலாம். அடுத்த அரசியலமைப்பு சபை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கூடவுள்ளது. வழிநடத்தல் குழுவின் அறிக்கை தயாராக இருந்தால் அதனை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பதற்காகவே டிசம்பர் மாதம் கூடவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினேஸ் குணவர்த்தன

இதனையடுத்து எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,
ஜனவரி மாதத்திலேயே அரசியலமைப்பு சபையின் அடுத்த அமர்வை நடத்துவது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. எனினும், அவசர அவசரமாக கூடி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் செயற்பாட்டுடன் நாம் இணங்கவில்லை. இது மோசமான நிலைப்பாடாக இருக்கும் எனக்கூறியமர்ந்தார்.

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க,

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு, 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 17 தடவைகள் ஆட்சியிலிருக்கும் தரப்பினரின் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள். எனவே புதிய அரசியலமைப்புக்கான தேவையை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

தேர்தல்முறை மாற்றமானது நாட்டிலுள்ள மக்களின் தெரிவுகளின் ஊடான பிரதிநிதித்துவம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே இதனை நோக்குகின்றோம். மனித சமூக சமூக உருவாக்கம் மற்றும் அதன் பின்பற்றல்களுக்கு முழு மாற்றான வகையிலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை காணப்படுகிறது. அதாவது ஒருவருக்கு தனியான ஏகாதிபத்திய அதிகாரத்தை வழங்கும் முறையாகும். இது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இதனை நிறைவேற்றக் கூடியவகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு மாற்றாக செயற்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். ஆரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் விருப்பமும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

தினேஸ் குணவர்த்தன

இதேவேளை, மீண்டும் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவரதன,

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற ரீதியில் 14 அடிப்படை விடயங்கள் தொடர்பில் நாம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளோம். வழிநடத்தல் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்கு வெளியே எந்தவொரு விடயத்துக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை. இதற்கமைய நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும்போது, தற்பொழுது அவருக்குக் காணப்படும் அதிகாரங்களுக்கு என்ன நடைபெறும்? நாட்டின் ஒற்றுமைத்தன்மை பாதிக்கப்பட்டு, வேறு வேறு நாடுகள் உருவாகுமா? இது பாரியதொரு பிரச்சினையாகும். எனவே இது நிறைவேற்று அதிகார முறை தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வில்லை.

இது மாத்திரமன்றி நாடு முழுவதற்கும் சட்டங்களை தயாரிப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு காணப்படும் அதிகாரம், விசேடமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஒற்றையாட்சியின் இறுதிக்குச் சென்றதாக நீதியரசர் சர்வானந்தா கூறியிருந்தார். சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருந்தாலும், மக்களின் ஆட்புல ஒருமைப்பாட்டை அபகரிக்க முடியாது.

எனவே நாட்டின் ஐக்கியம் மாத்திரமன்றி நாடாளுமன்றத்துக்கு காணப்படும் உரிமைகள் என்பன அரசியலமைப்பில் இல்லாமல் செய்யப்படக் கூடாது. இந்நாட்டில் மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் பிழையான செயற்பாட்டுகளால் நாட்டை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர்பில் நாம் எமது கருத்துக்களை தெளிவாகக் கூறியுள்ளோம். இவ்வாறான கருத்துக்களுக்கு அமைய அரசியலமைப்பு சபை எந்தவித அவசரமும் இன்றி செயற்படுவது அவசியமானது. அவசர அவசரமான ‘புல்டோசர்’ முறையை நிறுத்தி, மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கான வழிகள் ஏற்படுத்துக் கொடுக்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் சிறந்ததொரு தெளிவு இல்லை. மக்கள் என்ன நடக்கிறது எனக் கேட்கின்றனர் என்றும் கூறியமர்ந்தார்.

சுசில் பிரேமஜயந்த

இதனிடையே எழுந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றுகையில்,

ஊப-குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியின் பிரதிநிதிகள் ஊடாக வழிநடத்தல் குழுவுக்கு நிலைப்பாடுகளை வழங்க முடியும். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள சில திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்துக்கு முரணாக இருப்பதைக் காணமுடிகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அரசியலமைப்பு சபையின் செயற்பாடு அரசியலமைப்பை தயாரிப்பதாகும்.

அரச சேவைகளை மறுசீரமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சகலரும் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் தன்மை, தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப்பரவலாக்கல் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் இன்னமும் இறுதி முடிவுக்கு வரவில்லை. இருந்தபோதும் இவற்றுக்கு சமமான விடயங்களைக் கொண்ட உப-குழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இரா.சம்பந்தன்

ஏதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உரையாற்றுகையில்,

அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் நாம் பங்களிப்புச் செலுத்தியுள்ளோம். இதனை தயாரிக்கும் கடமை அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புத் தொடர்பான வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு தயாரிப்பில் பல்வேறு மாற்றீடுகள் குறித்து ஆராயும் நோக்கத்திலேயே நாம் இந்த விடயங்களில் ஈடுபாட்டை செலுத்தியுள்ளோம் என்றார்.

வழிநடத்தல் குழுவில் ஆராயப்படும் விடயங்கள் அரசியலமைப்பு சபையில் கலந்துரையாடப்பட்டு, அது அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு அனுமதி வங்கப்பட்டதும் மீண்டும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு முன்வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்களின் அனுமதியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது.

புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்டாலும் அதனை மக்களே இறுதியில் தீர்மானிக்க முடியும். ஆதற்கான இறைமை நாட்டு மக்களுக்கே உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் விளக்கம்

அரசியலமைப்பு பேரவைக்காக ஒதுக்கப்பட்ட இறுதி நேரத்தில் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

இந்தப் நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமையானது, அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு பலமாக அமைந்துள்ளது. சகலரின் கருத்துக்களை செவிமடுப்பதற்கே சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உப-குழுக்களின் அறிக்கை மீதான விவாதம் ஜனவரி மாதம் 9,10, 11ஆம் திகதிகளில் ஆரம்பிக்கின்றோம். இந்த மூன்று தினங்களில் விவாதத்தை பூர்த்திசெய்ய வேண்டுமென்ற தேவை இல்லை. அதன் பின்னர் நாட்டில் இது பற்றிய கலந்துரையாடல்களை ஏற்படுத்த இடமளித்து மீண்டும் பெப்ரவரி மாதம் கூடி ஆராய முடியும்.

உபகுழுக்களின் அறிக்கைகள் சகலவற்றையும் மக்களைச் சென்றடையும் வகையில் மதஸ்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும் வகையில் விநியோகிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன். இணையத்தளத்தில் தரவேற்றினால் சகலரும் இதனைப்பார்வையிட முடியும். நூம் தயாரிப்பது எமது அரசியலமைப்பு அல்ல. விசேடமாக விடயங்கள் தொடர்பில் நுனாதிபதி அதிகாரங்கள் எங்கு செல்வது என்பதை மக்கள் இறுதியில் தீர்மானிக்க முடியும். 13, சர்வானந்தன் வழக்கு முடிவுகளிலிரிந்து விலகப்போவதில்லை.
இந்த அரசியலமைப்புக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களும், சிங்கள மக்களும் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியமர்ந்தார்.

அதனையடுத்தே அரசியலமைப்பு பேரவையின் அடுத்தக் கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.