நாடாளுமன்றத்தை, அரசியலமைப்புப் பேரவையாக மாற்றும் தீர்மானமானது, நிலையியல் கட்டளைகளை மீறுகின்ற செயலாகுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தை நசுக்கி, ஓர் அரசியலமைப்பைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கின்றது என, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, குற்றம் சாட்டினார். தனது கட்சி, இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிடும் என அவர் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பு மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும். அது தனி ஒருவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அமையக் கூடாது என அவர் கூறினார். ‘மக்கள் நேய, முற்று முழுதான ஜனநாயக அரசியலமைப்பை மக்கள் விடுதலை முன்னணி உறுதி செய்யும்’ என அவர் கூறினார். ஆயினும் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து நாட்டின் பிரச்சினைகள் சகலதையும் தீர்க்க முடியுமென தனது கட்சி நம்பவில்லையென திஸாநாயக்க கூறினார்.