கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறிய நாகாநந்த கொடிதுவக்கு, வெறுமனே வாக்குறுதிகளை வழங்கும் நபர் தான் அல்லவென்றும் மக்களுக்கு தற்காலிக மானியங்களை வழங்குவதை விட அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தவே தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், “ தேர்தல் காலத்தில் மக்களுக்கு சிறு மானியங்களை வழங்கி அரசியல்வாதிகள் அவர்களை ஏமாற்றுகின்றனர். நான் அவ்வாறு வாக்குறுதியளிக்கவில்லை. அரசியல் யாப்பினை முழுமையான மாற்றி, நாட்டின் உள்ள இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழித்து, சிலரால் கொள்ளையிடப்படும் நாட்டின் நிதியை மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
இதற்காக, அரசியல் யாப்பில் உள்ள குறைபாடுகளை களைந்து, புதிய அரசியல் அமைப்பொன்றை உடனயடியாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்தும் வழிவகைகளை ஏற்படுத்தி இடைத்தரகர்கள் கொள்ளையிடும் விவசாயிகளின் பணம், அவர்களுக்கு வழங்கப்படும்.
வடக்கிலும், தெற்கிலும் உள்ள அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தான் நாட்டில் இனப்பிரச்சினை உள்ளதாக காட்டி மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, அவர்களை சுரண்டுகின்றனர். அவர்களே இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் நடந்துக்கொள்கின்றனர்.
இவ்வாறான விடயங்களை இல்லாது செய்ய வேண்டும். இந்த நாட்டில் அதிகபட்ச அதிகாரம் கொண்டவர்கள் மக்கள்தான். அவர்களே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சிந்தித்து செயற்படவேண்டும்.
நான் எனது பிரித்தானிய குடியுரிமையை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து, கடந்த ஜுலை மாதம் கடிதம் கையளித்துள்ளேன். இலங்கையின் தேவையையும், தாய் நாட்டுக்காக நான் செய்யவேண்டிய சேவையை சுட்டிக்காட்டி இதனை விரைவாக செய்துதரும்படி நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
நிச்சயமாக குடியுரிமை இரத்துச்செய்யப்பட்ட ஆவணம் எனது கைகளுக்கு கிடைத்தவுடன், அதனை நான் நேரடியாகவே பொதுமக்களுக்கு காணப்பிப்பேன். மற்றவர்களை கொண்டு குடியுரிமை இரத்துச்செய்யப்பட்டுவிட்டதாக பிரசாரம் செய்யமாட்னேன். நிச்சயதாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக நான் அந்த ஆவணங்களை வெளிப்படுத்துவேன்.” என்றார்.