அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (19) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உறவினர்களின் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்தவிதமான உறுதிமொழியும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பிரதி சட்டமா அதிபர், துணை சட்டமா அதிபர், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசியல் கைதிகளின் தரப்பில், உண்ணாவிரதமிருக்கும் மதியரசன் துலக்ஷனின் தாயாரும் மாமியாரும், கணேசன் தர்ஷனின் தாயாரும் சகோதரரும், இராசதுரை திருவருளின் மனைவியும் ஆகியோரோடு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுநர் கணேஸ்வரன் வேலாயுதம், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் கே. சதீஸ் என 9 பேர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்புத் தொடர்பான விரிவான தகவல்களை, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டிருக்காத நிலையில், சந்திப்புத் தொடர்பான தகவல்களை, மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்மிரருக்கு வழங்கினார். ஒரு மணித்தியாலமும் 5 நிமிடங்களும் நீடித்த இச்சந்திப்பில், அரசியல் கைதிகளின் நீண்டகாலப் பிரச்சினை தொடர்பாகவும் அதன் வரலாறு தொடர்பாகவும், தெளிவாக, சிங்கள மொழியில் தகவல்களை வழங்கியதாகக் குறிப்பிட்ட சிவாஜிலிங்கம், தற்போதுள்ள அரசியல் கைதிகளில் தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்கள, முஸ்லிம்களும் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளப்பெறுவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழி, பொதுமன்னிப்பின் தேவை உள்ளிட்ட விடயங்களைப் பற்றி உரையாடியதோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12,000 பேருக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார். எனவே, தற்போதுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதில் மாத்திரம், ஏன் தயக்கம் காணப்படுகிறது என்றும் வினவப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நீதியமைச்சர் தலா அத்துகோரலயும் சட்டமா அதிபரும் நாடு திரும்பிய பின்னர், திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை, இது தொடர்பான முடிவை வழங்குவதாக, அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதன்போது, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, கைதிகளின் வழக்கை, அநுராதபுரத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவை, ஆகக்குறைந்தது உடனடியாக இடைநிறுத்துங்கள் என்று கோரப்பட்டதாகவும், உடனடியாக அதற்கான பதிலும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.