அரசியல் கைதிகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உண்டு!

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்றும் பொறுப்பு தமக்கு இருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக வட மாகாண மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் இன்று மாலை மகஸின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்த காலப் பகுதியில், உயிர் தியாகம் செய்ய வேண்டிய தேவை இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய தான் சிறைச்சாலைக்கு பிரசன்னமாகி, அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார். இதன்பிரகாரம், கைதிகளின் பிரச்சினை குறித்து தான் போதிய தெளிவை பெற்றுக் கொண்டு, மிக விரைவில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடாத்த எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

குற்றங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ள நிலையில், நாளைய தினம் சில அரசியல் கைதிகளுக்கான குற்றங்கள் நீதிமன்றத்தில்
முன்வைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பில் வட மாகாண ஆளுநர் புரிந்துக் கொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வேண்டுக்கோளுக்கு இணங்கவே ஜனாதிபதியினால் வட மாகாண ஆளுநர் மகஸின் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.